பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா மற்றும் ஆதரவற்றோருக்குதவும் “மனிதம்” மாணவர் சேவை அமைப்பு தொடக்கம்




பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் மாணவர்பேரவையும் இணைந்து 30.8.2016 அன்று மாலை 3.30 மணிக்கு நடத்திய சீதக்காதி தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழாவில் தமிழகத்தின் பிரபல திரைப்படப்பாடலாசிரியரும் கவிஞருமான பாவலர் அறிவுமதி, எழுத்தாளர் வண்ணதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.



கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் தலைமையுரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முகமது நவாப் ஹுசைன், அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ.அப்துல்காதர், மாணவர் பேரவையின் தேர்தல்ஆணையர் முனைவர் பி.ஏ.அப்துல்கரீம், தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அ.மு.அயுப் கான், உதவிப் பேராசிரியர் அ.சே.சேக்சிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



ஆதரவற்றோருக்குதவும் “மனிதம்” மாணவர் சேவை அமைப்பு தொடக்கம்
.................................................................................................................................................................
மாணவர்பேரவையின் சார்பில் ஆதரவற்றோருக்குதவும் “மனிதம்” மாணவர் சேவை அமைப்பு தொடக்கவிழா விழா மேடையில் நடந்தது.
“மனிதம்” மாணவர் சேவையமைப்பைச் சிறப்புவிருந்தினர் பாவலர் அறிவுமதியுடன் எழுத்தாளர் வண்ணதாசன் இணைந்து தொடங்கிவைக்க, மாணவர் பேரவைத் துணைத்தலைவர் ,பேரவைச் செயலாளர் ஆகியோர் அதன் பதாகைகளைப் பெற்றுக்கொண்டனர்.



பாவலர் அறிவுமதி பேச்சு
........................................................
சீதக்காதி தமிழ்ப் பேரவையைத் தொடங்கிவைத்துப் பாவலர் அறிவுமதி சிறப்புரையாற்றும்போது, “ பாட்டால் தமிழை ஆண்டவர்கள் நம் வேளாண்மைத் தொழில் புரிந்த மக்கள்.உழைப்பின் களைப்பு தெரியாதிருக்க உழைக்கும் நேரத்தில் பாட்டும்,உழைக்கா ஓய்வுநேரத்தில் பேச்சினையும் தந்து உரைநடையையும் கவிதையையும் அவர்கள் வளர்த்தனர்.பாடியே குழந்தைகளை வளர்த்தவர்கள் என்பதால்தான் நம் முன்னோர் பாட்டன் என்றும் பாட்டி என்றும் அழைக்கப்பட்டனர். 

வைரமுத்துவும் யுகபாரதியும் நானும் வேளாண் குடும்பத்திலிருந்து வந்ததால் பாட்டும் மெட்டும் எங்களுக்கு எளிமையாக இயல்பாகக் கைவருகின்றன. பண்ணையபுரத்தில் நாற்றுநடும்போது பெண்கள் பாடும் பாடலைக் கேட்ட இளையராஜா அவற்றை அழகிய பாடலாக்கினார். கலைகள் தொழில்களைப் போலச் செய்ததால் பிறந்தன.விதை பாவும்போது அவர்கள் செய்யும் செயல் கோலமாய் கலை உருப்பெற்றது.சங்கஇலக்கியகாலத்தில் பாணர்களால் மீட்டப்பட்ட யாழ் இன்று செவ்வியல் இசைக்கருவியாய் மாற்றம் காண்கிறது.

தமிழர் வாழ்வு மனிதநேயத்தையும் தாண்டி ஒருபடிமேலாய் உயிர்நேயமிக்கதாய் அமைகிறது. வண்ணதாசனின் இலக்கியங்கள் யாவும் மனிதநேயத்தின் இனிய அடையாளங்கள். அதனால்தான் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மனிதம் ஆதரவற்றோர் சேவை அமைப்பைத் தொடங்கிவைக்கும் பேற்றினை நான் பெறுகிறேன்.பழந்தமிழர் அறுவடை செய்வதற்கு முந்தைய பொழுதுகளில் வயல்பரப்பு முழுக்கத் தன்னுமை எனும் இசைக்கருவியால் தட்டிஒலி எழுப்பிச் செல்வர்.ஆங்காங்கே முறையிட்டுத் தன் குஞ்சுகளோடு இருக்கும் பறவைகள் அச்சப்தம் கேட்டு மறுநாள் அறுவடைக்கு ஏராளமான மனிதர்கள் வரப்போகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அவ்விடம்விட்டு நீங்கி வேற்றிடம் சென்றுவிடும்.இதுதான் மனிதநேயத்தையும் தாண்டிய உயிர்நேயம்.

எல்லா உயிர்களையும் நேசித்தலே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் உட்பொருளாய் அமைந்தது.உடல் நோய் நீக்க மரத்தின் இலைகளைப் பறிக்கக்கூடப் பழந்தமிழர்கள் அஞ்சினர். “மரம் சா மருந்தும் கொள்ளா மாந்தர்”என்று இதை நற்றிணைப் பாடல் விளக்குகிறது.பென்சில் சீவும் போது தூரத்தில் எங்கோ மரங்கள் மொரமொரவென சரிந்தன என்று கல்யாண்ஜி கவிதை படைக்கிறார். தன்வீட்டு வாசலில் இருந்த பூவரசு மரத்தை வெட்டி நிலப்பேழை செய்து தன் புகுந்தவீட்டுக்கு அனுப்பியதைக் கண்டு சங்கத்தலைவி வருந்துகிறாள்.



 தாமிரபரணியைக் காக்கவேண்டும்
.............................................................................
தமிழ் நாட்டில் இன்று வற்றாத ஜீவநதியாய் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியை நல்லகண்ணு அய்யா மட்டுமே காக்க வேண்டும் என நினைக்காமல் நாம் ஒவ்வொருவரும் காக்கவேண்டும்.
அழகான தமிழ்ச்சொற்கள் சங்கத் தமிழில் அதிகாமாய் இடம்பெற்றுள்ளன. மகப்பேறு மருத்துவமனை என்று இன்று சொல்கிறோமே அதைப் பழந்தமிழர் “ ஈன் இல்” என்று அழகாக அழைத்தனர். 









அச்சொற்களை நாம் மீண்டும் வழக்கிற்குக் கொண்டுவரலாம். மாணவர் பேரவைத் துணைத்தலைவர் நூருல் ஜாஸ்மின் நன்றி கூறினார்.விழாவுக்கான ஏற்பாடுகளைக் கல்லூரித் தமிழ்த்துறையும் மாணவர் பேரவையும் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தன.

படத்தில்: பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா மற்றும் ஆதரவற்றோருக்குதவும் “மனிதம்” மாணவர் சேவை அமைப்பின் தொடக்கவிழாவில் எழுத்தாளர்கள் அறிவுமதி மற்றும் வண்ணதாசன் ஆகியோர் மனிதம் அமைப்பைத் தொடங்கிவைக்கிறார்கள்.




Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்