நெகிழவைத்த மூத்தபடைப்பாளிகளுக்கு நந்தாவிளக்கு அமைப்பின் விருது வழங்கும் விழா ...........................................................................................................................................


....
சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

தி.க.சி.திருநெல்வேலியின் இனிய அடையாளம் சுடலைமாடன்கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குப் போனால் திரும்பிவர யாருக்கும் மனது வராது! அந்த நெருக்கத்தோடு இலக்கியம் பேசிக்கொண்டிருப்பார். அவர் அளவு சகஎழுத்தாளர்களைக் கொண்டாடியவர்கள் யாரும் இருக்கமுடியாது.

 90 வயதிலும் படைப்புகளைப் படித்துவிட்டு தொடர்புடையவர்களுக்கு நாலுவரி கடுதாசி போடவில்லை என்றால் அவருக்குத் தூக்கமே வராது. அந்தப் பாராட்டுப் பரம்பரை தொடர்கிறது அவரது அன்புக்குரிய திருமதி சுபாஷிணி திருமலை அவர்களால். நந்தாவிளக்கு என்கிற இலக்கிய அமைப்பைத் தொடங்கி கடந்த ஆண்டு திரு.பாரதிமணி தி.க.சி.இயற்றமிழ் விருதினை வழங்கிப் பாரட்டினார். 

28.8.2016 மாலை ஆறுமணிக்கு திருநெல்வேலி ஜானகிராம் உணவகத்தின் அயோத்தியா அரங்கில் நந்தாவிளக்கு மூத்த படைப்பாளிகளைக் கொண்டாடும் இலக்கியவிழாவை நடத்தியது.

 நந்தாவிளக்கின் அமைப்பாளர் சுபாஷிணி அம்மாவின் தந்தமை தவழும் வீடு என்ற நூலை முன்பு வாசித்திருக்கிறேன்.முகநூல் நண்பர், இப்போதுதான் அவர்களைப் பார்க்கிறேன். மிகஅழகான வரவேற்புரை வழங்கினார்.

 கவிஞர் பா.தேவேந்திர பூபதி இலக்கிய விழாவுக்குத் தலைமை வகித்து பேராசிரியர் தொ.ப.அவர்கள் குறித்தும் வாத்தியார் நாவலாசிரியர் திரு.ஆர்.எஸ்.ஜேக்கப் குறித்தும் 99 நூல்கள் எழுதிய வரலாற்று ஆய்வாளர் திரு.திவான் குறித்தும் மிக அழகாகப் பேசினார். கோவையைச் சார்ந்த எஸ்.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.

தமிழகத்தின் மூத்த படைப்பாளிகளைக் கொண்டாடும் இவ்விழாவில் 91 வயதாகும் தமிழகத்தின் மூத்த படைப்பாளர், சிறந்த சிறுகதையாசிரியர், வாத்தியார் நாவலாசிரியர் ஆர்.எஸ்.ஜேக்கப் பற்றி என்.ஏ.எஸ்.சிவகுமார் மதிப்புரையாற்றினார்.



அழகர்கோயில், அறியப்படாத தமிழகம்,பண்பாட்டு அசைவுகள்,தெய்வங்களும் சமூகமரபுகளும் போன்ற பன்நூல்களின் ஆசிரியர், பேராசிரியர் தொ.பரமசிவன் குறித்து வே.சங்கர்ராம் மதிப்புரையாற்றினார்.

 அடுத்து அறிஞர் செ.திவான் குறித்து உரையாற்ற எனக்குக் கிடைத்த வாய்ப்பு அருமையானது. தமிழகத்தின் மிகச்சிறந்த வரலாற்று நூலாசிரியர் திரு.திவான் அவர்கள், விருப்புவெறுப்பற்ற நடுநிலையான ஆய்வாளர். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள், நிகரற்ற பெருவீரன் மருதநாயகம் கான்சாகிப், இலக்கியப் புரட்சியாளர் வ.உ.சி, பரிசுபெறாத பாரதி பாடல் முதலிய 99 நூல்கள் படைத்த வரலாற்றுஅறிஞர்.வ.உ.சி.குறித்து அவர் எழுதிய ஆய்வுநூல்கள் 19. வ.உ.சி.யின் அழகும் ஆரோக்கியமும், வ.உ.சி.யின் துன்பத்தின் கற்பனை, வ.உ.சியும் பெரியாரும், வ.உ.சியும் தொல்காப்பியரும், வ.உ.சி பாடல்கள், வ.உ.சி.யின் அரசியல் பெருஞ்சொல், வ.உ.சி புகழ்பாடிய முன்னோடிகள் போன்ற அருமையான நூல்கள் படைத்த படைப்பாளர்.குஞ்சாலிகள் , போர்த்துக்கீசியர்கள் குறித்த அவர் நூல் குறிப்பிடத்தக்கது.சுதந்திரப்போரில் முஸ்லிம் என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியுள்ளார். பரிசுபெறாத பாரதி பாடல் நூலில் மகாகவி பாரதியின் “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன்வந்து பாயுது காதினிலே” எனும் கவிதைக்கு ஏன் இரண்டாம் பரிசு கிடைத்தது? முதல் பரிசு யாருகுக் கிடைத்தது? என்று மிக அழகாக எழுதியுள்ளார்.வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும் நூலில் ஆஷ் கொலை வழக்கின் பின்னணியை மிக நுட்பமாக விளக்கியுள்ளார். கவி.கா.மு.ஷெரிப் எனும் நூலில் அவர் எழுதிய பாடல் வேறு ஒரு கவிபெயிரில் ஏன் வந்தது? என்று விளக்கியுள்ளார். இராமலிங்க வள்ளலாரும் செய்குதம்பிப் பாவலர் என்ற நூலில் அருட்பா என்று இராமலிங்க வள்ளலாருக்கு ஆதரவாக செய்குதம்பிப் பாவலர் கோவில் கோவிலாகப் பரப்புரை மேற்கொண்டதை மிக அழகாக விளக்கியுள்ளார்.அவரது 99 நூலான இசைமுரசு நாகூர் ஹனிபா என்ற நூலில் தமிழ் இசை தமிழர் இசைக்கருவிகள் குறித்து 80 பக்கங்களில் விளக்க்கியுள்ளார்.



இந்த மூன்று படைப்பாளிகளுக்கும் நந்தாவிளக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் தொ.ப.அவர்களுக்கு கவிஞர் தேவேந்திரபூபதி அவர்களும், வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் அவர்களுக்கு எழுத்தாளர் திரு.தி.க.சி அவர்களின் மைந்தன் திரு.சேதுராமலிங்கம் அவர்களும் அறிஞர் செ.திவான் அவர்களுக்கு கோவையைச் சார்ந்த பதிப்பாளர் திரு.பிரகாஷ் ஆகியோரும் வழங்கினர். அறிஞர் செ.திவான் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாய் விழாவுக்கு வரஇயலாததால் அவர்கள் சார்பில் பெற்றுக்கொண்டேன். 

91 வயதாகும் முதுபெரும் எழுத்தாளர் ஆர்.எஸ்.ஜேக்கப் சுதந்திரதிற்கு முன் தான் வாத்தியாராகப் பணிபுரிந்தபோது முன் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொன்னபோது கண்களில் கண்ணீர். “பதினெட்டு வயதில் பள்ளிஆசிரியராகப் பணிபுரிந்தபோது பண்ணையூர் என்ற கிராமத்தில் பள்ளி தொடங்க முயற்சி எடுத்தபோது அந்தஊர் ஜமீன் அதைத்தடுத்து எல்லோரும் படிக்கப் போயிட்டா யாரு தொழுவத்திலே வேல பாப்பா என்று சொல்லித் தடுக்க, ஆர்.எஸ்.ஜேக்கப் என்கிற ஆசிரியர் அந்த எதிர்ப்பை மீறி அந்த மாணவர்களுக்குக் கற்றுத்தர அவருக்கு நேர்ந்த கொடுமையில் அந்த ஊரை விட்டு வெளியே செல்லும் நிலை ஏற்படுகிறது. அங்கிலஅரசின் காவல்துறை அவரை நெல்லை சதிவழக்கில் சேர்க்கிறது. பள்ளியில் அவர் தாக்கப்பட்டு கைதுசெய்யப்படுகிறார்” அந்த ஆர்.எஸ்.ஜேக்கப்புக்கு இன்று 91 வயது! அவருக்கு அருகில் மூன்றுமணிநேரம் அமர்ந்து அவர் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். 
 









பேராசிரியர் தொ.ப. உரை மிகவும் நெகிழ்வைத்தந்தது. “சாத்தான்குளம் ராகவன் போன்றவர்களை அவர்கள் வாழ்ந்தகாலத்தில் அங்கீகரிக்க மறந்தோமே” என்று பேராசிரியர் தொ.ப.பேசினார்.செ.திவான் அவர்கள் எழுதியனுப்பியிருந்த உரையை எழுத்தாளர் கிருஷி அழகாக வாசித்தார்.
நந்தாவிளக்கு எரிந்துகொண்டிருக்கிறது எல்லோர் மனதிலும் அந்த விழா நினைவுகளோடு..

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்