சிந்தையில் புவனத்தைச் சிருஷ்டித்த சிந்தாநதி லா.ச.ரா பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி





   அக்டோபர் – 2016 லா.ச.ரா. நூற்றாண்டுவிழாக் கட்டுரை
    சிந்தையில் புவனத்தைச் சிருஷ்டித்த சிந்தாநதி லா.ச.ரா
     ................................................................................................................................
பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி
பெண்களின் வாழ்வை இனிய வார்த்தைகளால் கொண்டாடிய  கதைக் கவிஞன் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம். ராமேஸ்வரம் போய் அவர் தாய் தவமிருந்து பெற்ற பிள்ளை. பதினாறு வயதிலிருந்து எழுதத் தொடங்கியவர், இருநூறு சிறுகதைகள்,  ஆறுநாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாறுகள், இரண்டு உரைநடைநூல்கள் என்று தரமாக எழுதிய தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளர். தாய்மையைக் கொண்டாடிய கலைஞன், தாய்தான் அவருக்குக் குரு, குடும்ப வாழ்வை எப்படி எழுத்தில் கொண்டாடுவது என்று அழகியலோடு கற்றுத்தந்தவர். 

அவர் பிறந்து நூறாண்டாகிறது தமிழ்ச்சிறுகதைகள் பிறந்தும் நூறாண்டாகிறது.
தான் வாழ்ந்த வாழ்வை தன்மொழியில் தான் சொல்லா விட்டால் வேறுயார் சொல்வார்? என நினைப்பவர் லா.ச.ரா. வாழ்க்கை குறித்த தெளிவு அவரது படைப்பிலக்கியங்களில் மிகுந்திருந்தது.சில அழகான மக்களைச் சந்திக்கிறோம், அதற்குத்தான் வாழ்க்கைஎன்று அவர் சொன்னது எழுத்தின் உச்சம். மரணத்திற்கான சுகமான காத்திருப்பே வாழ்க்கை என்று இயல்பாகச் சொன்ன லா.ச.ரா. வாழ்வையும் மரணத்தையும் கலந்து அழகாகத் தந்தவர்.


எந்தத் துன்பத்திற்கும் அவர் அலட்டிக்கொண்டதில்லை. “ நன்றாக சாப்பிடு, நன்றாகத் தூங்கு, கொஞ்சம் பசித்திரு” என்பார் லா.ச.ரா. அதற்கு மேல் அலட்டிக் கொள்வதற்கு ஏதுமில்லை அவருக்கு. நம் அன்பை மற்றவர்களுக்கு அப்படியே காட்டுவதுதான் வாழ்க்கை என்று லா.ச.ரா.கருதினார். எழுதாமல் அவரால் இருக்கமுடிந்ததில்லை. எழுத்து அவருக்குத் தன்னெழுச்சி தந்த இயங்கியல் அனுபவம்.


 கலைடாஸ்கோப்பில் உள்ளுக்குள் உடைந்து கிடக்கும்  வளையல்துண்டுகள் எப்படி நொடிக்கு நொடி மாயத் தோற்றங்களை உண்டாக்குமோ அதேபோல், தான்கண்ட நியாயத் தோற்றங்களை அவர் தன் மொழியைக் குலுக்கி மாயத் தோற்றங்களாக மாற்றிக்காட்டினார். காலம் அவரது கதைகளில் புகுந்து வெகுநுட்பமாய் வெளியேவந்துகொண்டிருந்தது. சொல் உளியால் அவர் செதுக்கிய எழுத்துச் சிற்பங்கள் இன்றும் உயிர்த்துடிப்போடிருக்கின்றன. தேர்ந்த இசைக்கலைஞன் எப்படித் தந்தியை இழுத்துக்கட்டித் தன் மனம் இசைக்கும் ஸ்வரத்தைத் தன் விரல்கள் வழியே இசையாக மாற்றுகிறானோ அதே வித்தையை லா.ச.ரா. தன் தேர்ந்த மொழியின் மூலம் படைப்பிலக்கியமாய் மாற்றினார்.

என் பிரியமுள்ள சினேகிதனுக்கு’, ‘பச்சைக் கனவு’, ‘வித்தும் வேரும்’, ‘யோகம்’, ‘பாற்கடல்அவருடைய அற்புதமான படைப்புகள். சிந்தாநதி அவர் தன்னையே பிழிந்துவைத்த அபூர்வமான நடைச்சித்திரம். மௌனம் அவருக்குப் பிடித்தமானது. மௌனம் உருவாக்கிய இடைவெளிகளில் அவர் பாத்திரங்கள் வழியே மகிழ்வலைகளோடு படைப்பாக மாற்றிப் பயன்படுத்தியுள்ளார். புத்ர, அபிதா, கல்சிரிக்கிறது, பிராயச்சித்தம், கழுகு, என்பன அவர் எழுதிய அற்புதமான புதினங்கள்.

தி.ஜ.ரங்கநாதன் அவரது குரு. அவர் எழுதிய எல்லாப் படைப்புகளையும் பாராட்டி வெளியிட்டு ஊக்கப்படுத்தியவர். லா.ச.ரா..வுக்குக் குடும்பமே மிகப்பெரிய உலகம். குடும்பத்தின் மூலைமுடுக்குகளில் நுழைந்து சிக்கிக்கிடக்கும் மிகநுட்பமான புதிர்முடுச்சுகளை வெகுநேர்த்தியாய் அவரால் மொழியின் துணைகொண்டு அவிழ்த்துவிடமுடிந்தது. பெண்களை அம்பிகைகளாகக் கொண்டாடியவர் அவர்.

தன்னைக் கதைப்புள்ளியாக்கித் தன்னைச் சுற்றிஉலவிய அந்த வசந்தமுகங்களை மொழிவடிவம் தந்து பெரிதும் சிலாகித்தவர் அவர். 
தனிதனி இழைகள் பாவில் ஓடி வேட்டியாக, சேலையாக உருமாறும் அதிசயம் அவர் கதைகளில் ஊடாடும் கதாபாத்திரங்கள். அவை எல்லோராலும் ஏன் விரும்பப்பட்டன? என்றால் அப்பாத்திரங்களில் எல்லோர் முகங்களும் அப்பியிருந்தது. 

அவர் தன் தாயை மனதில் நினைத்து  எழுதப்போக அவரன்னை அனைவர் தாய்வடிவிலும் அவரவர் வாசித்தகதைகளில் தெரிந்தார். தனக்கு என்றோ நேர்ந்தவற்றை அவரதுகதைகள் தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் விந்தை அதுதான்.

கவிதைக்கும் கதைநடைக்கும் இடையேயான கவிக்கதை நடையில் ஐம்பதாவது வயதில் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்கிற  லா.ச.ரா. “புத்ர” நாவலை எழுதினார். அரைநூற்றாண்டுகள் கடந்தபின்னும் இன்றும் அந்த நாவல் நேற்று எழுதியதைப் போலிருக்கிறது. வனங்களை யாரால் வரப்புகள் சுருக்கமுடியும்? லா.ச.ரா.மலைக்க வைக்கிறார். அழகாகச் சுற்றப்பட்ட நூல்கண்டு ஒழுங்குதவறி சிக்குப்பட்டால் நம்மைச் சிரமப்படுத்துமே அதேபோல் சுலபமான தர்க்கவினாக்களால் லா.ச.ரா. வாசகர் மனத்தைக் கேள்வியால் குடைகிறார். 

அவரின் காயத்ரீ, விர்ரென்று வானம் பாயும் சிம்புட்பறவை. சொற்கள் வாக்கியங்களாய் கைகோத்து நின்றுகொண்டு, அவர் நினைத்ததைச் சொல்லப் பேராவல் கொள்ளும் அதிசயம் அவர் படைப்புலகின் தனித்தன்மை. ‘‘கடிகாரத்தின் விநாடிகள் ஒன்றன்பின் ஒன்றாய் தம்மைச் சொடுக்கிக்கொண்டு சுவரிலிருந்து புறப்பட்டு இருளோடு கலந்தனஎன்ற லா.ச.ரா-வின் வரிகளில் காலம் கைகட்டி நிற்பதைக் காண முடிகிறது.

லா.ச.ரா. பெண்மையைத் தெய்வமாகக் கொண்டாடியவர். எல்லாப் பெண்களின் மானுட வடிவில் அவரால் அம்பாளைத் தரிசிக்க முடிந்தது. போலித்தனமற்ற மிக இயல்பான லா.ச.ராவின் பாத்திரங்கள் இன்னும் வாசகர் மனதில் கம்பீரமாய் வீற்றிருக்கும் அழகைக் காணமுடிகிறது. “ கசந்த வாழ்க்கை அவளுடையது ஆனால் கசக்கவில்லை அவள்” என்று அவரால்மட்டுமே எழுதமுடியும்.

ஜனனியில் லா.ச.ரா.சொல்வதைப்போல், “ அணுவுக்கு அணுவாம் பரமாணுவில் பாதியாய் உருக்கொண்டு பராசக்தியானவள் ஜன்மமெடுக்க வேண்டும் என்ற ஆசையால் தூண்டப்பெற்றவளாய் ஆகாயவெளியில் நீந்திக்கொண்டிருக்கிறாள்” என்பது இன்னும் அழுத்தமாய் புரிகிறது. சூரியனை யாரால் தொடமுடியும்? கையிலிருந்து தவறிவிழுகிற பாதரசம் எப்படி மண்ணில் ஓட்டமாமலும் மாசுபடாமலும் உருண்டோடுமோ அதே போன்று லா.ச.ரா.வின் ஜனனி செம்புக்குள் அடங்காத பரிசுத்தமான தூய நதியாய் என்றும் நம் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கிறாள்.

அபூர்வராகம் எனும் கதையை அவர் இப்படித்தொடங்குகிறார், “ வீணையின் ஸ்வரக்கட்டுகளை விருதாவாய் நெருடிக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க்கூடி ஒரு அபூர்வராகம் ஜனிப்பது போல் அவள் என்வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்” என்று தன் கதைத்தலைவியைக் கலைநோக்கோடு அறிமுகப்படுத்துகிறார்.  அவர் எழுதிய முதல்சொல்  அவர் தினமும் காணும் மாந்தர்கள் பேசியதைக் கொண்டு அவர் எழுதியது, அடுத்தடுத்த சொற்கள் அவர் ஆழ்மனம் எழுதியது.

எண்ணெய் தேய்த்தலைக்கூட அவரால் அட்டகாசமான நடைச்சித்திரமாக்க முடிந்திருக்கிறது. அபிதா அவரது எழுத்தின் உச்சம், அபிதா அருமையான கவிக் கதை! “ இந்தக் கந்தகபூமியிலே எண்ணெய் முறை தப்பிப்போச்சுன்னா நடந்துண்டு இருக்கறத்துலேயே சொக்கப்பனையா எரிஞ்சுபோயிடுவோம். 

வரட்டியே வேண்டாம், நாமா ஏன் பஸ்மாசூரம் பண்ணிக்கணும்?” என்று விசித்திர சித்திரமாய் எழுத்தை வரைகிறார். அக்கதையின் இறுதிப்பகுதியில் வெண்மையை மிக அழகாகக் கண்முன் நிறுத்துகிறார். “ உடையும் தேங்காயில் திடீரென உதயமாகும் அவ்வளவு தூயவெண்மை” என்று எழுத்தால் வரைகிறார்.

”அபிதா,நீ என் காயகல்பம்” என்று அவரது கவிதைநடைக்குள் நுழைந்தவர்கள் இன்னும் வெளியே வரவில்லை.. அவர் படைத்த பாத்திரங்களில் வால்மீகி கல்வெட்டாய் நம் மனதில் இன்னும் நிற்கிறது.பெற்றோரைப் பற்றி அவர் சொன்ன கருத்து இன்னும் மறக்கமுடியா பொன்மொழியாய் அமைகிறது.” நம்மால் முடியாத காரியம் ஒன்றை அவர்கள் செய்கிறார்கள்,அதை அவர்களால்தான் முடியும். 

நம்மைப் பெற்றெடுக்கிறார்கள்” என்று சொன்ன அற்புதமனிதநேயக் கலைஞர் லா.ச.ரா. ஆயிற்று 2016 ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் பிறந்து நூறாண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் லா.ச.ரா.வின் எழுத்துகள் நேற்று எழுதியதுபோல் புதுமையாய் இருகின்றன.

எழுத்தே அவருக்கு அவர் சொன்ன துணிவு. சௌந்தர்யத்தின் தொடக்கமே குடும்பம்தான் என்று லா.ச.ரா.நம்பினார். தொடர்ச்சியிலும் தொன்மையிலும் குடும்பத்தின் சௌந்தர்யம் இருக்கிறது என நம்பினார்.எழுத்தின் சொற்களில் இசை ஒளிந்திருப்பதாய் அவர் கருதினார்.சிக்கு எடுத்து சொற்களை ஒழுங்குபடுத்தினால் அதில் இசைஒழுங்கு வந்துவிட்டதாய் கருதினார்.

உண்மையைத் தேடாத எதுவும் நல்ல படைப்பாக மாறமுடியாது என்பது அவரது தீர்க்கமான முடிவாய் இருந்தது.படைப்பிலும் படிப்பிலும் நேர்த்தியை விரும்பியவர் லா.ச.ரா. “எல்லோருக்கும் வான் ஒன்று,சிந்தா நதியில் ஒரு காயிதக் கப்பல்” என்பது லா.ச.ரா.விடம் எனக்குப்பிடித்த பொன்மொழி.

விழித்துப் பார்க்கிற வரைக்கும் வெளியே நிற்கிற வெளிச்சம் மாதிரி சமுத்திரமாகிற வரை நதிகள் தனித்தனியே ஓடிக்கொண்டிருக்கும். ஆண் பெண் பேதங்கள் பேசிக்கொண்டிருக்கும் மனிதர்களே, “மூச்சோடு மூச்சு கோர்த்து வாங்கும் மூச்சிரைப்பில் யார் மூச்சு யாருடையது?” என்று மிகச் சாதாரணமாய் கேட்கிறார். படிமங்களை மிகச் சாதாரணமாய் பயன்படுத்தி எழுதுவதில் வல்லவரான லா.ச.ரா, மணிக்கொடி யுகத்தின் அழுந்தப்பதிந்துபோன சுவடாக இருந்தார்.

தன் எல்லைகள் குறித்த தெளிவு அவருக்குள்ளிருந்து அவரை வழிநடத்தியது. “ நான் விந்தியா, நான் மேரு, நான்  வான், நான் நித்யன்” என்கிறார். ஆதிவீடு வனம், மனிதனின் ஆதி வாடை வனவாடை “ உயிரின் அடிப்படை வனவாடை, எத்தனை லட்சக்கணக்கில் வருடங்கள் ஆனாலும் எங்கே போகும்? நான் சொல்கிறேன் எங்கும் போகவில்லை. உள்ளேதான் உறங்குகிறது. அது விழிக்கும்நேரம் சொல்லிக்கொண்டு வராது. எல்லா ஜீவராசிகளுக்கும் பொது டினாமினேட்டர் குரூரம்.” என்று எழுதுகிறார். “ அறியஅறிய இன்னும் அறியாமை” என்கிறார்.

 “ எழுத்து ஒரு பெரிய சவால், ருசி கண்டவன் அறிவான், ஒரு பெரிய உந்தல் வெறி, நான் எழுத்தின் உபாசகன். எழுத்து ஒரு ருசி கண்ட சமாச்சாரம்” என்று சொன்னவர் அவர்.

வாழ்வைச் சிந்தாநதியாகக் கண்ட லா.ச.ரா., “ சிந்தா நதியில் குமிழிகள் தோன்றுகின்றன, சேர்கின்றன, பிரிகின்றன, மூழ்குகின்றன, மறைகின்றன” என்று அழகாக எழுதுகிறார். சிந்தாநதியில் நான் ஒரு சுழி என்று எழுதிய லா.ச.ரா, அம்பாளைப் பற்றிச் சொல்லும்போது “ உன் ஆவாஹனத்திற்கு ஏற்றபடி உன் அபிமானம், அபிமானத்திற்கேற்றபடி அருள்” என்கிறார்

கதைநகர்கிற போக்கில் மிகக் கடினமான வேதாந்த சித்தாந்தக் கருத்துக்களை வெகுஇயல்பாகச் சொல்லிவிட்டு அடுத்த சொற்றொடருக்கு நகர்வது அவர் இயல்பு. எடுக்க எடுக்க அடியே காணமுடியாத பேழையாய் அவர் தன் நினைவைக் கண்டார். 

ஆத்மாவின் திறவுகோலாய் அவர் எழுத்துகள் அமைந்தன. சிந்தாநதியில் செம்பருத்திப் பூக்களைப் பற்றி எழுதிக்கொண்டே வந்தவர், பூஜையறையில் லலிதாசஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருக்கும்போது நடந்த அதிசயம் குறித்து எழுதுகிறார், “ இடறிஇடறி நாமாக்களைப் படித்துக் கொண்டே வருகையில், திடீரென்று நான் தனியாயில்லை. ஆனால் பூஜை அறையில் நான் மட்டும்தான். 

எனக்குத் திடீரென ஒரே பரபரப்பு. அவள் விளக்கில் இறங்கி, குத்துவிளக்கின் தலையில் சூட்டியிருந்த செம்பருத்திப்பூவை எடுத்துத் தன் தலையில் செருகிக்கொண்டதுபோல- முகம் காட்டவில்லை- தலையின் பின்புறம்- அதையும் ஸ்தூலமாகக் காண்பதென்பது  அத்தனை சுலபசாத்தியமா? சிரமமாகக் கூடச் சாத்தியமா? முதலில்- சாத்தியமா?” என்று வாசகரைப் பார்த்துக் கேட்கிறார்.


அவர் ஆனந்தமயமானவர்,அழகின் உபாசகர்.ஒரு கட்டுரையில் ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியில் வரும் “உன்னுடைய வாக்கைக் கொண்டே அல்லவா உன் ஸ்தோத்திரம் அமைந்தது.” என்ற சொற்றொடரை எடுத்தாள்கிறார்.

 “பெரிது பெரிது புவனம் பெரிது, அதனினும்  பெரிது சிந்தனை, அதனும் பெரிது “நான்”. ஏனெனில் சிந்தனையில் புவனத்தையே சிருஷ்டிக்கிறேன். ஆனால் நான் சிந்தைக்கு அர்ச்சனை. இதன் புதிர் என்ன? ” என்று கேட்கிறார் லா.ச.ரா. “ அனு என்றால் ரகசியம், பவம் என்றால் பொருள், அனுபவம் என்றால் ரகசியமான பொருள். காதல் தகிக்கும் சூடு இன்பமான அனுபவம்.” என்று சொன்ன லா.ச.ரா.ஆண்பெண் உறவுநிலைகளை மிக அழகாக இயல்பாகச் சொன்னவர். எழுத்துகாக யாரோடும் எதற்கும் சமரசம் கொள்ளாதவர்.

எழுத்து அவருக்கு மூச்சுவிடுவதைப் போன்ற இயல்பான ஊக்கநிகழ்வு. “நான் யாருக்காகவும் எழுதவில்லை..எனக்காக என் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்” என்று சொன்ன லா.ச.ரா, நூற்றாண்டு கண்ட பேராறாய் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறார் வாசகர்மனதில்.

·         கட்டுரையாளர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர்,
·         வண்ணதாசன்,பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார் நூலாசிரியர்
·         mahabarathi1974@gmail.com





Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்