பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் அல்ஹாஜ் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் தரகனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு



ஒட்டுமொத்த பொருளாதாரம் முன்னேற்றம் அடையவேண்டுமானால் இஸ்லாமிய வங்கியியல் இந்தியாவில் வரவேண்டும் 

- இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் மண்டல இயக்குநர் 
முனைவர் ஜெ. சதக்கத்துல்லா பேச்சு

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் அல்ஹாஜ் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் தரகனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு 11.03.2017 பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசைன் வரவேற்றுப் பேசினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ். த.இ.செ. பத்ஹுர் ரப்பானி சொற்பொழிவைத் தொடங்கிவைத்துத் தலைமையுரையாற்றினார்.  ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ. மீரான் மைதீன், அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர், எல்.கே.எம்.ஏ. முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் மண்டல இயக்குநர் முனைவர் ஜெ. சதக்கத்துல்லா, சிறப்பு விருந்தினராய் பங்கேற்று இஸ்லாமிய நிதிஎனும் தலைப்பில் சிறப்புரையாற்றும்போது,

இந்திய நாட்டு மக்களின் சராசரி வயது 26. உலக நாடுகளில் இது அபூர்வமாகப் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஓர் உயர்நிலை இன்னும் முன்னூறு ஆண்டுகள் கழித்தே வரும். இளைய தலைமுறை ஆற்றல் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி அவர்களை ஊக்கப்படுத்தினால் அவர்கள் சாதனையாளர்களாக மாறுவார்கள். 

சமய நல்லிணக்கத்திலும் ஒற்றுமையிலும் இந்தியா உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. வேறுபாடுகளை மறந்து நாம் இன்னும் உறுதியாக உழைத்தால் இந்தியாவின் முன்னேற்றம் பல வகைகளிலும் சிறக்கும். தொழில் வளர்ச்சியில் நாம் ஜப்பான் நாட்டிற்கு இணையாக வரமுடியும். 

இஸ்லாமிய வங்கிகள் இன்றைய தேவை

வட்டியில்லாத இஸ்லாமிய வங்கியியல் இன்றைக்கு உலகளாவிய அளவில் பேசப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வங்கியியல் சார்ந்து அமைகிறது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை உலகில் இருநூறு இடங்களில் இஸ்லாமிய வங்கிகள் சிறப்பாக இயங்குகின்றன. ஆங்காங்கே குவிந்துகிடக்கும் பணம் ஒரு புள்ளியில் குவிக்கப்பட்டு பலருடைய தொழிலுக்கு அது மூலதனமாக அமையும். இந்தியாவில் 20 கோடி இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இஸ்லாமிய நிதியியலின் அடிப்படையிலான இஸ்லாமிய வங்கிகளின் வருகை அவசியம். 

இந்திய ரிசர்வ் வங்கி

பாரத ரிசர்வ் வங்கி 1935 ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களில் இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்கள் அமைந்துள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பணவீக்கத்திற்கு எதிராகவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஜஸ்டிஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர் இஸ்லாமிய நிதியியலை பெரிதும் வரவேற்றார். இந்திய நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு இஸ்லாமிய நிதியியல் இன்றியமையாதது என்று கருதினார். வட்டியில்லா வங்கிகளே இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரிதும் வழிவகுக்கும் என்று நம்பினார். தீபக் மொஹந்தி தலைமையிலான பொருளாதார ஆலோசனைக்குழு இஸ்லாமிய வங்கியியல் குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை தந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குரல் கொடுத்தால் இந்திய வங்கிகளில் இஸ்லாமிய முறையிலான தனிப்பிரிவை உருவாக்க முடியும். 

கறுப்புப்பணத்திற்கு எதிரான நடவடிக்கை

உலகெங்கும் கொட்டிக்கிடக்கக்கூடிய பணம் நாட்டின் வளர்ச்சிக்கு கொண்டுசேர்க்கப்படும். நாட்டின் வளர்ச்சி தொழிற்சாலைகளைச் சார்ந்தே அமைகிறது. அத்தொழிற்சாலைகள் சிறக்க வங்கிகள் அவசியம். மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து கறுப்புப்பணத்திற்கு எதிராகவும் கள்ளநோட்டிற்கு எதிராகவும் கடந்த நவம்பர் 8ஆம் தேதி தீவிரமான நடவடிக்கை எடுத்தது. ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் அரசுக்கு எவ்வளவு வருமானம் வந்தது என்பது இனிமேல் தான் தெரியவரும். 2008ல் அமெரிக்க நாட்டில் வீட்டுக்கடன் செலுத்த முடியாமல் வங்கிகள் பாதிக்கப்பட்ட போது இஸ்லாமிய வங்கிகள் பாதிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தப் பொருளாதாரம் முன்னேற்றம் அடையவேண்டுமானால் இஸ்லாமிய வங்கியியல் இந்தியாவில் வரவேண்டும்என்று பேசினார். பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் வினாக்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் மண்டல இயக்குநர் முனைவர் ஜெ. சதக்கத்துல்லா அவர்கள் விளக்கமளித்துப் பேசினார். கல்லூரித் தமிழ்த்துறை வெளியிட்ட தன்னம்பிக்கைத் தமிழ்என்ற நூலை அவர் பெற்றுக்கொண்டார். 

கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மகாதேவன் நன்றியுரையாற்றினார். இவ்விழாவில் நிதிக்காப்பாளர் பி.ஏ. அப்துல் கரீம், கல்லூரித் தேர்வாணையர் முனைவர் கே. சுப்பிரமணியன், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அ.மு. அயூப்கான், சாதிக் அலி, ஜெ. குமார், ஆங்கிலத்துறைத் தலைவர் முஹம்மது ஹனீப் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைச் சிறப்பாகச் செய்திருந்தது. 

படத்தில்: பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்ற அல்ஹாஜ் எல்.கே.எஸ். மீரான் முஹைதீன் தரகனார் அறக்கட்டளைச் சொற்பொழிவில் இஸ்லாமிய நிதி என்ற தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் மண்டல இயக்குநர் முனைவர் ஜெ. சதக்கத்துல்லா பேசும்போது எடுத்த படம்.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்