பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மகளிர்தின விழாச் சிறப்புக் கருத்தரங்கு


நம்முடைய வாழ்வின் நேரான எண்ணங்களே வெற்றிகளாக மாறுகின்றன திருநெல்வேலி சார்பு நீதிபதி ஜெ. தமிழரசி பேச்சு

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் மாணவர்பேரவையும் இணைந்து 08.03.2017 காலை 10.30 மணிக்கு மகளிர்தின விழாச் சிறப்புக் கருத்தரங்கை உரையரங்கில் நடத்தியது. கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் கருத்தரங்க தலைமையுரையாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முகம்மது நவாப் உசேன், அரசுதவிபெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர், மாணவர் பேரவையின் தேர்தல் ஆணையர் பேராசிரியர் பி.ஏ.அப்துல்கரீம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய அலுவலகத்தின் கோமதிநாயகம், தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அ.மு. அயூப்கான், விலங்கியல் துறைத் தலைவர் சித்தி ஜமீலா, கணிதவியல் துறைத் தலைவர் ரஷீதா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி சார்பு நீதிபதி மற்றும் திருநெல்வேலி மாவட்டச் சட்டப்பணிகள் ஆணையச் செயலாளர் ஜெ. தமிழரசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசும்போது, 

இலவச சட்ட உதவியை அனைவரும் பெறலாம்
 
இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இலவச சட்ட உதவி மையங்கள் செயல்படுகின்றன. திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தின் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட உதவி மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை செயல்படுகிறது. பெண்களுக்கு குடும்ப நீதிமன்றங்களில் சட்ட ஆலோசனைகள் வழங்கிடவும், குடும்பங்களில் மகளிருக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் திறன்மிகுந்த ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கி, இலவச சட்ட உதவியும் வழங்கப்படுகிறது. இச்சட்ட உதவிமையத்தை 0462-2572689 எனும் தொலைபேசி எண்ணில் மகளிர் தொடர்புகொள்ளலாம். 

மாணவிகளும் ஆலோசனை பெறலாம்

சமுதாயத்திலுள்ள பலருக்கும் சட்டப்பணிகள் ஆணையம் செய்யும் நற்செயல்கள் தெரிவிக்கப்படவேண்டும். பணவசதி இல்லாதவருக்கும் இவ்வாணையம் சட்ட உதவியை வழங்கி வருகிறது. பெண்களுக்கு எந்தப் பிரச்சனை இருந்தாலும் அஞ்சாமல் தயங்காமல் அவர்கள் இலவச சட்ட உதவியை நாடலாம். கல்லூரி மாணவியருக்கான தனிப்பட்டப் பிரச்சனைகளுக்காகவும் இந்த ஆணையத்தை அணுகலாம். 

பேசித் தீர்க்க வேண்டும்

எடுத்தவுடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவேண்டும் என்று எண்ணாமல் சமரச மையத்தை நாடி பேசித் தீர்க்க வேண்டும் என்று மகளிர் எண்ணவேண்டும். இம்மையத்தில் மனம் திறந்து பேச வைக்கும் திறன்மிகுந்த பயிற்சியாளர்கள் உண்டு. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும்போது அவர்களுக்கான சட்ட உதவியை அவர்கள் பெறலாம். பத்தொன்பது வயதிற்குள், கல்லூரியில் பயிலும் பதின்பருவத்து மாணவிகள் அதிகமான உளவியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். கல்வி கற்க வேண்டிய வயதில் காதல் மோகத்தில் சிக்கி அவர்கள் வாழ்வியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார்கள். கல்வி கற்க வேண்டிய வயதில் அவர்களின் மன ரீதியான மாற்றம் அவர்களின் வாழ்வைச் சீரழிக்கிறது. அம்மாணவிகளுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான ஆலோசனைகளை வழங்குகிறது. இக்கல்லூரியோடு இணைந்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மாணவியருக்கான சட்ட ஆலோசனை மையத்தைத் தொடங்க உத்தேசித்துள்ளது. 

பிரச்சனை வந்தால் எப்படி அணுக வேண்டுமென்று இளைய தலைமுறை மாணவிகளுக்குத் தெரியவில்லை. இவ்வாழ்வை எதிர்கொள்ள கல்வி மட்டுமே போதாது. பிரச்சனைகள் வரும்போது நல்ல ஆலோசகர்களின் ஆலோசனை அவர்களைக் காப்பாற்றும். சொந்தக் காலில் பெண்கள் நிற்பதற்கு உலக அறிவோடு சட்ட அறிவும் அவசியம். 

கல்லூரிப் பருவம் அழகான பருவம்

கல்லூரிப் பருவம் மிக அழகான பருவம், மறக்க முடியாத பருவம். அதைத் தக்க முறையில் பயன்படுத்தி மாணவிகள் உயர்கல்வியைச் சிறப்பாக பெறவேண்டும். கற்கும் காலகட்டத்தில் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை பெற்றோர்கள் மூலமாகவும், பேராசிரியர்கள் மூலமாகவும் நீக்கிக்கொள்ளவேண்டும். 
 
நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்

வாழ்வில் முன்னேற இலக்கு முக்கியம். மருத்துவராவதோ, காவல்துறை அதிகாரியாவதோ, நீதிபதியாவதோ, அவர்களின் எண்ணம் சார்ந்தே அமைகிறது. கல்லூரியில் வணிகவியல் படித்த நான் கல்லூரிக் காலகட்டத்திலேயே நீதிபதியாகவேண்டுமென்று முடிவு செய்தேன். அதற்கு ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணிபுரிவது அவசியம். அந்த ஏழாண்டுகளும் நீதிபதித் தேர்வுக்கான தயாரிப்பில் இருந்தேன். நாம் என்ன நினைத்தாலும் நம்முடைய எண்ணங்கள் அந்த நினைவை வெற்றியாக மாற்றுகின்றன. நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். இந்த மாணவப் பருவத்தில் சாதனையாளராக மாறவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்தால் நிச்சயமாக சாதனையாளராக மாறுவீர்கள்என்று உரையாற்றினார்.

பெண் - நேற்று இன்று நாளை விவாத அரங்கு
 
கருத்தரங்கின் இரண்டாவது அமர்வாக ஹலோ பண்பலை அறிவிப்பாளர் செல்வா ஒருங்கிணைத்து நடத்திய பெண் - நேற்று இன்று நாளைஎன்ற விவாத அரங்கு நடைபெற்றது. மாணவர் பேரவை சார்பாக மாணவிகள் கலந்துகொண்டு இவ்விவாத அரங்கில் சிறப்பாகப் பேசினர். நிகழ்ச்சியை இளைஞர் நலத்துறைப் பொறுப்பாளர் பேரா. பிரியதர்ஷிணி தொகுத்து வழங்கினார். மாணவர் பேரவைத் துணைத்தலைவர் நூருல் ஜாஸ்மின் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கல்லூரித் தமிழ்த்துறையும் மாணவர் பேரவையும் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தன. 

படத்தில்: பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் மாணவர் பேரவையும் இணைந்து நடத்திய மகளிர்தின சிறப்பு கருத்தரங்கில் திருநெல்வேலி சார்பு நீதிபதி ஜெ. தமிழரசி சிறப்புரையாற்றும் காட்சி.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்