எழுத்தாளர் நீல.பத்மநாபன் அவர்களின் 79 ஆவது பிறந்தநாள்விழா

                      நினைவுத் தடங்கள்


எழுத்தாளர் நீல.பத்மநாபன் அவர்களின் 79 ஆவது பிறந்தநாளன்று (26.4.2017) “மேலும்” இலக்கிய அமைப்பின் சார்பில் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் நடத்திய நீலபத்மம் தலைமுறைகள் விருது வழங்கும் விழாவுக்குச் சென்றோம். 
அப்போதுதான் எழுத்தாளர் திரு.நீல.பத்மநாபன் அவர்களை முதன்முதலில் சந்திக்கிறேன். சிவசு அய்யா அறிமுகம் செய்துவைத்தார். தாடிக்குள் கனிவான புன்னகை. கண்களில் வலியோடு வந்திருந்தார். தமிழ்நாட்டு விழாக்கள்போல் அந்தவிருது வழங்கும் விழா நடைபெறவில்லை.ஒவ்வொரு மாதமும்  திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் கவிதை வாசிப்பு, சிறுகதை வாசிப்பு நிகழ்வு நடைபெறுகிறது.சிறந்த சிறுகதை,சிறந்த கவிதை தேர்வுக்குழுவினரால் தேர்வுசெய்யப்பட தன் பிறந்தநாளில் அவர்களுக்கு நீலபத்மம் தலைமுறைகள் விருதினைக் கடந்த இருபது ஆண்டுகளாய் திரு.நீல.பத்மநாபன் வழங்கிவருகிறார்.

 பேராசிரியர் மேலும் சிவசு தற்காலத் திறனாய்வுப் போக்குகள் குறித்து மிகவிரிவாகப் பேசினார்.மேடையில் இருப்பதைத் தவிர்த்து ஆர்வலர்களோடு கீழே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்.

 விருது வழங்கிய நடுவர் குழுவின் சார்பில் பேசியவர்கள் மிகத்தெளிவான முகஸ்துதி படாத விமர்சனங்களை முன்வைத்து ஏன் இந்தப் படைப்பைத் தேர்ந்தெடுத்தேன்? என்று பேசினார்கள்.ஏன் பிறபடைப்புகளைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று காரணமும் சொன்னார்கள். தமிழ் மலையாளம் ஆங்கிலம் என்று மும்மொழிகளில் இயங்கும் படைப்பாளர் திரு. நீல.பத்மநாபன் ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதையைத் தமிழிலும் மலையாளத்திலும் எழுதிவாசித்து வருகிறார்.அவர் எழுதிய தமிழ் மற்றும் மலையாள மொழிக் கவிதைத் தொகுப்புகள் விழாவில் வெளியிடப்பட்டது.



மேலும் சிவசு,பேராசிரியர் கட்டளை கைலாசம்,முனைவர் ஜிதேந்திரன் ஆகியோர் சென்றிருந்தோம்.நான் எழுதிய வண்ணதாசன் நூலை அளித்தேன், கைகளைப் பிடித்தபடி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தவர், “வண்ணதாசனுக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமே” என்றார், வண்ணதாசன் அய்யாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடத்தப்போவதாய் தெரிவித்தார். பேராசிரியர் மேலும் சிவசு அவர்களின் அணிந்துரையோடு நீல.பத்மநாபன் எழுதியுள்ள சிந்தை முட்கள் கவிதைத் தொகுதியோடு நினைவுகளை அசைபோட்டபடி நெல்லை வந்தபோது நள்ளிரவு கடந்திருந்தது.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்