கோடைவிடுமுறையை அனுபவிக்கக் குழந்தைகளை அனுமதியுங்கள்


http://www.dinamalar.com/news_detail.asp?id=1758878


பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி

முழுஆண்டுத்தேர்வுகள் முடிந்துவிட்டன. புத்தகங்களை மூடிவைத்துவிட்டுக் குதூகலமாய் குழந்தைகள் தெருவுக்கு விளையாட வந்துவிட்டன. யோகா, நீச்சல், கராத்தே,ஓவியம், அபாக்கஸ், இசை, ஆங்கிலப் பேச்சு என்று சம்மர் வகுப்புகளுக்கு அனுப்பப் பெற்றோர்கள் அவர்களிடம் சம்மதம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். மாநிலஅளவில் சாதிப்பதற்காய் அடுத்த வகுப்புகளை விடுமுறையிலேயே நடத்தச் சிலபள்ளிகள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன.
விடுமுறைக் கொண்டாட்டம்
இருபதாண்டுகளுக்கு முன் கோடைவிடுமுறை பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கொண்டாட்டமாக இருந்தது காரணம் ஆண்டுமுழுக்கப் படித்த படிப்புச்சுமையிலிருந்து ஒன்றரை மாதங்கள் ஒதுங்கி இருபதற்கான விடுதலைக் காலமாக அந்த விடுமுறைக் காலம் இருந்தது. நம் நினைவேட்டில் பல நினைவுகள், சில செல்லரித்து, சில சொல்லரித்து.. தொலைதாரத்தில் உள்ள தாத்தா பாட்டி ஊருக்குப் பயணித்து அந்த மண்மணம் கமழும் கிராமத்தில் சேற்றுவயலாடி  ஆற்றுவழியோடி மீன்பிடித்து கல்லா மண்ணா என்று கேட்டு, பம்பரம் விட்டு, பாண்டியாடி, குச்சிக்கம்பு அடித்து , டயர்வண்டி ஓட்டி, நுங்குவண்டியோட்டி, நிலாச் சோறு சுவைத்து, டூரிங் திரையரங்கில் எம்ஜிஆர் படம்பார்த்து இடைவேளையில் முறுக்கு வாங்கிச் சாப்பிட்டு பாட்டியிடம் கதைகள் கேட்டு ரசித்தநாட்கள் எங்கே போயின?
ஏன் மறந்துபோனோம்?
 இளநீர்காய்களைச் சீவித்தந்த அந்த தாத்தாவின் கைகளில் இருந்தபோது முழுப்பரிச்சலீவை முழுதாகப் பறித்தது யார்? பனையோலை மடலில் பதநீர் ஊற்றி நுங்குபோட்டுத் தந்த சின்னத் தாத்தாவிடமிருந்து நம் குழந்தைகளைப் பிரிக்க நாம் எப்படி இந்த விடுமுறை நாளில் முடிவுசெய்தோம். எந்த சாக்லேட் தாளையாவது தாத்தா பாட்டிகள் பிரித்துச் சாப்பிட்டிருக்கிறார்களா? அதைப் பிரிக்க நினைக்கையில் சட்டென்று விடுமுறைக்கு வரப்போகும் பேரன்பேத்தி முகம் சட்டென்று நினைவுக்கு வந்து உடன் முந்தானை முனையில் முடிச்சுபோட்டு வைக்கும் பாட்டிகளை நாம் ஏன் இந்த விடுமுறைநாளில் மறந்துபோனோம்? அவர்களின் கரம்பிடித்துப் பார்த்த பட்டமரத்தான் பூச்சொரிதல்கள், அழகுநாச்சியம்மன் திருவிழா, பிடாரிஅம்மன் தேரின் மாம்பழத் திருவிழா எல்லாவற்றையும் எப்படி மறந்தோம்? கோடைவிடுமுறை வெறும் கோடைவிடுமுறையாக மட்டுமா இருந்திருக்கிறது? அத்தை பிள்ளைகள், மாமன் மகன்கள், சித்தி குழந்தைகள் என்று வீடே குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரத்தில் சித்திரை மாதம் முழுக்கத் திளைத்திடுமே! யாவும் மயிறகாய் மனதை வருடும், கடந்தபின்னும் நினைவாய் இன்றும் மனதில் திரளும் அழகான நினைவலைகளாயிற்றே!
வந்தவழி மறந்து அறை எங்கும் அலைந்து திரியும் எறும்புகளாய் நாம் ஏன் மாறினோம்? “ஒருகுடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்ததாம் இரண்டுகுடம் தண்ணி எடுத்து இரண்டுப் பூத்ததாம்” என்று பாடக் குழந்தைகள் இல்லாததால் கல்லா மண்ணா கேட்கக் குழந்தைகளற்று மண்ணுமற்று தண்ணீருமற்றுக் பாட்டிதாத்தக்கள் வாழும் அன்புத் தெருக்கள் ஆதரவற்று அமைதியாய் நின்றுகொண்டிருக்கின்றன.
வேகாத வெயிலில் அந்தக் குழந்தைகளின் விடுமுறை நாட்களை மறுத்து அவர்களை மீண்டும் சம்மர் வகுப்புகளில் கொண்டுநிறுத்துவது என்ன நியாயம்? பண்பாட்டையும் அன்பையும் பண்பையும் அவர்களுக்குக் கற்றுத் தந்து இத்தரையின் நித்திரையிலிருந்து நீக்குவது இந்தச் சித்திரை மாதத்தின் கோடைவிடுமுறையில்தானே! அன்பெனும் ஆயுதத்தால் நம் குழந்தைகளின் குழந்தைத்தனத்தில் கைவைப்பது என்ன நியாயம்? வெகுவாய் அடக்க முயலும் எதுவும் விரைவாய் கடக்க முயலும் என்பது நாமறியாததா?
பயணப்படுங்கள்
ஆண்டுமுழுதும் குழந்தைகள் உழைக்கும் உழைப்பு மிகஅதிகமானது. பாட்டம்பூச்சிகளின் சிறகில் நாம் மாட்டிய பைக்கூடுகளை இறக்கிவைக்கப் பேருந்திலோ தொடர்வண்டியிலோ சுற்றுலாத் தலங்களுக்குப் பயணப்படுங்கள். தகிக்கும் கோடை குழந்தைகளுக்கு ஒருபொருட்டன்று. வெயிலோடு விளையாடி களிப்போடு தூங்கப்போகிற விந்தைவிழிகள் அவர்களுடையன.
உழைப்பின் உன்னதத்தைப் புரியவையுங்கள்
மாஞ்சோலையின், மூணாறின் பச்சைத் தேயிலைத் தோட்டத்தினூடே குழந்தைகளோடு பயணப்படுங்கள். பசுமையின் அழகுமொழியில் அவர்கள் அந்தக் குட்டி இலைகளோடும் வழிந்தோடும் தண்ணீர் ஓடைகளோடும் பேசஅனுமதியுங்கள். ஒருகோப்பைத் தேநீருக்குப் பின்னால் அட்டைகளோடு போராடி முதுகில் கூடையோடு தேயிலைக் கொழுந்தை வியர்வையோடு அதிகாலை நேரத்தில் பறித்தெடுக்கும் உழைப்பாளிகளின் வாழ்வியல் நிகழ்வுகளைச் சொல்லி உழைப்பின் உன்னதத்தைப் புரியவையுங்கள்.
கரைபுரண்ட ஆற்றில் இறங்கிய கள்ளழகர் இன்று வறண்ட வைகையில் நீரின்றி இறங்குவதைக் காட்டி வற்றிப்போனதன் துயரத்தை மென்மையான அறிவியலால் உணர்த்துங்கள். கடலின் எதிர்ப்பை மீறி ராமேஸ்வரத்தில் உயரிய தொழில்நுட்பத்தோடு பம்பன் பாலம் கட்டிய கதையை அந்தப் பாலத்தில் நின்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். தீவில் பிறந்து தன் மனிதநேயத்தால் இந்தியப் பெருங்கடலாய் மாறிப்போன மாமனிதர் அப்துல்கலாம் உறங்கும் பேய்க்கரும்பில் அவர் போல் வாழ உறுதிகொள்ள உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தாருங்கள்.
ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவத்தால் மண்மேடாகிப்போன தனுஷ்கோடியை அவர்களுக்குக் காட்டுங்கள். அகண்ட காவிரியைக் காட்டி இன்று நீரற்றநிலையில் சுருங்கிய ஓடையாய் மாறியதன் காரணத்தை அவர்களுக்குப் புரிகிறவகையில் சொல்லுங்கள். கரிகாலன் கட்டிய கல்லணை தமிழரின் பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய நீர்மேலாண்மைச் சிந்தனையின் இன்றைய இருப்பு என்பதை உணர்த்துங்கள். எட்டயபுரத்தில் பாரதி வாழ்ந்த வீட்டைக் காட்டுங்கள்.. “வேடிக்கை மனிதரைப்போல் விழ்வேனென்று நினைத்தாயோ” என்ற அவன் வரிகளைச் சொல்லித் தாருங்கள்.
நதியைக் காட்டுங்கள்
இப்போதும் வற்றா நதியாய் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியின் அழகை பாபநாசத்தில் குழந்தைகளுக்குக் காட்டுங்கள். அந்த நதியில் உலவும் வெள்ளியற்புதமாய் நீந்திக் களிக்கும் மீன்களுக்கு அவர்கள் கையால் பொரிபோடவைத்துக் கூட்டமாய் ஓடிவரும் மீனினத்தை ரசிக்கக் கற்றுத்தாருங்கள். நெகிழியாலும் நதிக்கரை ஆக்கிரமிப்புகளாலும் கழிவுகளாலும் அயல்நாட்டு நிறுவனத்தாலும் அந்தப் புண்ணியநதிப் புண்ணாகிப் போனதைத் தவறாமல் சொல்லுங்கள்.
மனஉறுதியைப் போதியுங்கள்
முக்கடல் சங்கமத்தைக் காட்டுங்கள், படகில் பயணித்து விவேகானந்தர் பாறைக்கு அழைத்துச் சென்று இந்தச் சீற்றம்மிகுந்த கடலை சுவாமி விவேகானந்தர் நீந்திக்கடந்தார் என்று அவர் கொண்ட மனஉறுதியைக் கற்றுத்தாருங்கள். ஆதிமனிதன் தோன்றிய லெமூரியாக் கண்டம் கடலுக்குள் ஜலசாமாதியான நிகழ்வைச் சொல்லுங்கள்.
ரசிக்கக் கற்றுத் தாருங்கள்
தங்கக் கடைகளிலும் குழந்தைகள் விரும்புவது பலூன்களைத்தான்.குட்டிவெள்ளையாய் வேம்புவாசம் வீசிச் சிந்திக்கிடக்கும் வேப்பம்பூ,பம்பரக்காய்களைத் தரும் குளிர்ச்சியான பூவரசமரம் கோடையிலும் செம்பூக்களை அள்ளித் தரும் அழகு அரளிச்செடிகள்.
மனம் விட்டுப் பேசுங்கள்
யாருடனும் பேசாமல் கூச்சத்தோடு ஒதுங்கிநிற்கும் குழந்தைகளை ஏற்று அன்போடு அவர்களுடன் பேசுங்கள், அவர்களின் உன்னதஉலகம் உங்களுக்குப் புரியும். இரண்டாம் குழந்தை பிறந்தஉடன் முதல் குழந்தை தன்மீதான அன்பை அனைவரும் குறைத்துக் கொண்டுவிட்டதாய் எண்ணுகிறது,விடுமுறை நாட்களில் அது இன்னும் அதிகமாகிறது. அவர்களோடு மனம் விட்டுப் பேசுதல் அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு இன்னும் உதவும்.
நேரத்தைச் செலவிடுங்கள்
விடுமுறை நாட்களில் குழந்தைகளைச் சமாளிக்கமுடியவில்லையே என்று பதற்றப்படாதீர்கள். அவர்களோடு அதிகமாய் இருபதற்கான பொன்னான நேரம் இது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
உறவுகளின் உன்னதம்
உறவுகளின் உன்னதத்தை அவர்களுக்குக் கற்றுத்தாருங்கள். நெடுநாட்கள் செல்லாமல் இருந்த உறவினர் வீட்டிற்குக் கோடைவிடுமுறையில் அழைத்துச் செல்லுங்கள்.நிம்மதி என்பது வீடுநிறையப் பொருட்களை வாங்கிக்குவிப்பதில் இல்லை,எந்தவசதியும் இல்லாமல் வெம்மைபொங்கும் சித்திரை மாதத்திலும் ஓட்டுவீட்டில் வாழும் உறவினர்களின் வாழ்வியலைக் காட்டி நிம்மதி என்பது மனநிறைவில் மட்டுமே இருக்கிறது என்பதை உணர்த்துங்கள்.
உதவக் கற்றுத்தாருங்கள்
 உங்கள் பிள்ளைகளின் கடந்தஆண்டுப் புத்தகங்களை இந்த ஆண்டு படிக்கப்போகும் ஏழைக்குழந்தைக்கு அழகாக அட்டைபோட்டுத் தந்து உதவுங்கள். இரக்கமுள்ள இதயத்தோடும் ஆழ்ந்து சிந்திக்கும் அறிவோடும் சலிப்பில்லாமல் இருப்பதற்குக் கற்றுக்கொடுக்கும் நாம் அன்பின் உன்னதத்தைக் குழந்தைகளுக்குப் போதிப்பதில்லை.
அளவான கட்டுப்பாடு
எப்போதும் அவர்களைக் கடிந்துகொண்டே இருப்பதைவிடக் கவனமாய் இருக்க அவர்களுக்கு நாம் கற்றுத்தரவேண்டும். அளவுக்கு மிஞ்சிய சுதந்தரமும் அளவுக்கு அதிகமான கட்டுப்பாடும் அக்குழந்தைகளை நிலைகுலைய வைத்துவிடும்.
கிராமத்து வாழ்க்கை
கிராமங்களை ஏளனம் செய்யாமல் கோடைவிடுமுறைக்கு உறவினர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். பஞ்சாரத்தைத் திறந்த உடன் தன்குஞ்சுகளுடன் கூரிய அலகால் கொத்திக்கிண்டும் கோழிகள், நெற்பயிர் விளையும் வயற்காடுகள், கூர்நுனி கொண்ட ஏர்நுனிகள், தண்ணீர் பாயும் பம்புசெட்டுகள், மேமே எனக்கத்தும் ஆட்டுக்குட்டிகள், உயர்ந்துநிற்கும் வைக்கோற்போர்கள், வெள்ளந்தியான மனிதர்கள்,கூரைபோட்ட மண்சுவர் வீடுகள், காளை பூட்டப்பட்ட வில்வண்டிகள், கிராமத்துக்காவல் தெய்வங்கள், ஆளுயரக் குதில்கள், வந்தோரை வரவேற்கும் அன்பான திண்ணைகள் என யாவற்றையும் இந்த விடுமுறையில் காட்டாவிட்டால் எந்த விடுமுறையில் காட்டப்போகிறீர்கள்?
வாசிப்பில் நேசம்
சிறுசிறுநூல்களை வாங்கித்தந்து வாசிக்கக் கற்றுத்தாருங்கள். வாசிப்பின் சுகம் வேறுஎதிலும் கிடைப்பதில்லை. சோட்டா பீம்களுக்குள்ளும், ஆண்ட்ராய்டு செல்பேசிகளின் பேசும் பொம்மைகளுக்குள்ளும், வீடியோ விளையாட்டுகளிலும்  போகோ சேனல்களுக்கும் உள்ளே தொலைந்து கிடக்கும் குழந்தைகளை மீட்டு வெளியே கொண்டு வந்து வாசிப்பின் மீது நேசத்தை உருவாக்கினால் அதுவே அவர்களுக்குச் செய்யும் பேருதவியாய் அமையும். ஒரு குழந்தை, ஓர் ஆசிரியர், ஒரு பேனா மற்றும் ஒரு புத்தகம் உலகையே மாற்றக்கூடும்என்ற  மலாலா யூசுப்சயின் வாக்கில்தான் எவ்வளவு உண்மை! உலகையே மாற்றும் உன்னதக் குழந்தை உங்கள் வீட்டில் வளர்கிறது என்பதில்தான் உங்களுக்கு எவ்வளவு பெருமை.




Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்