மகிழ்ச்சியாய் இருப்போம் மலர்ச்சியாய் வசிப்போம்


              http://www.dinamalar.com/news_detail.asp?id=1746594

பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275


யாருக்குத்தான் மகிழ்ச்சியாக இருக்கப் பிடிக்காது? எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? என்று கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும்? . வாழ்வே வெறுமையாக இருக்கிறது! ஏதும் பிடிக்கவில்லை, எல்லாம் முடிந்துபோய்விட்டது இனி என்ன செய்யப்போகிறேன் என்ற எண்ணம் ஏற்படுகிறதா? நான் தொட்டதெல்லாம் ஏன் தோல்வியாகிறது, என் கை பட்டதெல்லாம் ஏன் நட்டமாகிறது  என்ற கேள்வியை பலநேரங்களில் நாம் நமக்குள் கேட்டுக்கொண்டேதானிருக்கிறோம். நமக்கு இத்தனை வயதானபின்னும், இவ்வளவு படித்தபின்னும்  இன்னும் மகிழ்ச்சியாய் வாழப் படிக்கவில்லை என்பதைத்தான் இதுகாட்டுகிறது.

வாழ்வு ஒரு வசந்த கலை
அன்பிற் சிறந்த தவமில்லை என்றான் பாரதி. அன்புதான் மகழ்ச்சியை மலர்போல் மலரவைக்கிறது. தேங்காய்ச் சில்லுக்கு ஆசைப்பட்டு எலி எலிப்பொறிக்குள் மாட்டி எமனுக்கு எதிர்ப்படுகிறது. மேலே தூண்டில் இருப்பதை அறியாமல் புழுவைப் புசிக்க ஆசைப்பட்டு மீன் தூண்டிலில் சிக்கித்துடிதுடித்து இறக்கிறது வாழ்வு ஒரு வசந்தநிகழ்வு. வாழ்வது ஒரு கலை. வாழக் கற்றவர்களுக்கு எல்லா நாட்களும் மகிழ்ச்சியான நாட்களாய் மாறுகிறது.

நல்ல எண்ணமே மகிழ்ச்சியின் ஆணிவேர்
நல்நோக்கு நம்மிடம் வரும்போது எதிர்மறையான சிந்தனைகள் வராது. அன்பு, பாசம், அமைதி, நம்பிக்கை, மனநிறைவு என்கிற சொற்களால் நம் வாழ்வு நிரப்பப்படும்போது மகிழ்ச்சி என்கிற ஒற்றைச் சொல் ஓடிவந்து நம்மிடம் நிற்கும். நாம் செய்யும் வேலையை நேசித்து யோசித்து செய்தால் மகிழ்ச்சி தானாய் வந்துநிற்கும்.  தன்நிறைவு குறையாத மகிழ்ச்சியைத் தருகிறது. உள்ள வளமும் உடல் வளமும் உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது. சோர்வு நமக்குள் புகுந்து தேர்வு எழுதும்போதுதான் நாம் தோல்விப் பள்ளத்தாக்கில் நாம் துவண்டுபோகிறோம்.

மகிழ்கலை என்னும் மகத்தான கலை
அடுத்தவர் மகிழும் செயல்களைச் செய்தால் நம் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. நடக்கும் எல்லாவற்றையும் தடுக்கும் ஆற்றல் நமக்கு இல்லை, அதனதன் இயல்போடு எல்லாம் நடக்கிறது என்று உணரத்தொடங்கினால் குழப்பமும் துக்கமும் மிச்சமாகிறது. மகிழ்கலை என்னும் மகத்தான கலையின் நுட்பம் உணர்ந்தால் நமக்குத் துன்பம் ஏதுமில்லை. இன்பம் வாழ்வின் முக்கிய நோக்கம். அதனால்தான் அறம், பொருள் என்று பால்கள் வகுத்த வள்ளுவர் மூன்றாம் பாலாக இன்பத்துப் பாலை முன்வைத்தார்.
கவலை எனும் மாயவலை
கவலை ஒரு மாயவலை.. நம் இன்பத்தைக் கெடுப்பதே அது கேட்கும் விலை. தேன் பாட்டிலுக்குள் விழுந்த எறும்பு பாட்டில் தேனையும் பருகிப்பருத்துவிடலாம் என்று எண்ணத் தொடங்கி இறுதியில் தேனுக்குள்ளே சாவைத் தழுவிச் சமாதியாவது நிஜம். பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா? கரன்சிக் கட்டுகளால் கண்ணீரைத் துடைக்க முடிந்தால் உலகில் ஏன் இத்தனைப் பேர் சோகராகம் பாடிக்கொண்டிருக்கிறார்கள் ? கவலையை விடுங்கள், எல்லாவற்றையும் ரசியுங்கள், பசிநீக்கும் அளவே புசியுங்கள், நல்ல எண்ணமுடையவர்களோடு வசியுங்கள்.

இனிய விடியல்
ஒருநாளின் முதல் வினாடிமுதல் நம் மகிழ்ச்சி தொடங்குகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். நல்ல சிந்தனைகளோடு இளம்காலைப் பொழுதைத் தொடங்குங்கள், வானொலி கேளுங்கள், செய்தித்தாள் படியுங்கள்.இன்றைய நாள்  நன்றாக அமைய அமைதியாய் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் மேற்கொள்ளுங்கள். மகிழ்ச்சியோடு விடிகிற காலை மலர்ச்சியோடு பொழுதாய் புலர்கிறது.

 மனம்விட்டுச் சிரியுங்கள்
வாய்விட்டுச் சிரிப்பவர்களுக்கு நோய் விட்டுப்போகிறது. உம்மென்று இருப்பவர்களை உலகம் விரும்புவதில்லை. சிரித்துக் கொண்டே இருப்பவர்கள் அனைவருக்கும் சீக்கிரமே நண்பர்களாகி விடுகிறார்கள்.  சிரிக்கிறவர்களுக்கெல்லாம் கவலைகள் இல்லை என்பது பொருளில்லை அவர்கள் உரிக்கும் துன்பத்தைச் சிரிக்கும் உத்தியால் தள்ளிநிறுத்துகிறார்கள். அதனால்தான் இடுக்கண் வரும்போது வள்ளுவர் சிரிக்கச்சொன்னார். பாம்பு கடித்து விடமேறி இறந்தவர்களைவிட பாம்பின் விடம் நம்மை இந்த வினாடியே கொன்றுவிடும் என்று அஞ்சியவர்களே அதிகம் இறந்துபோகிறார்கள். காசில்லாமல் வாழ்க்கை இல்லை ஆனால் காசு மட்டுமே வாழ்க்கை இல்லை. காயங்களை ஆற்றும் களிம்பு நம் உதடு சிந்தும் புன்னகையே என்று புரிந்துகொள்ளுங்கள். நீலவானில் நீந்திச் சிறகடிக்கும் சிட்டுக்குருவிகள்போல் நம் மனவானிலும் நம்மாலும் சிறகடித்துப் பறக்கமுடியும் என நம்புங்கள்.

 மலர்ந்த முகம்
ஒற்றைப் புன்னகை தேடிவரும் துயரங்களை தூரஓட்டிவிடும். சிரித்தமுகம் சீதேவி இருக்கும் இடம், மலர்ந்த முகம் வெற்றியின் அகம். முகமலர்ச்சி, மனமுதிர்ச்சி நற்பயிற்சி இவையே வெற்றியின் சூத்திரங்கள். சவால்கள் வரும்போதுதான் அதிலிருந்து மீள்கிற வழிகளை நம் மனம் தேடுகிறது. தோல்வி நம்மைத் துரத்தும்போதுதான் வெற்றிக்கு வெகுஅருகில் நாம் வந்துநிற்கிறோம். நாம் சிரிக்க சிரிக்க நம் வாழ்வின் நாட்கள் நீட்டிக்கப்படுகின்றன. மலர்ந்த முகத்தோடு நாம் பழையசோறு பரிமாறினால்கூட அது அமுதமாக சுவைதருகிறது.

எப்போதும் வருத்தம் ஏன்?
தனிமை கொடிய விடம் போன்றது,தனியே இருக்கும்போதுதான் தேவையில்லாத சிந்தனைகள் நம்மை ஆட்டிப் படைக்கிறது. அளவில் சிறியதுதானே என்று எண்ணி மயிலிறகை அளவுக்கதிகமாய் வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சாணி முறிந்துவிடும் அதேபோல் இதயம் தாங்காஅளவு வலியை மனதில் ஏற்ற ஏற்ற இதயம் வலியைத் தன் வரவில் வைத்துக்கொள்கிறது. எப்போதும் வருந்திக்கொண்டே ஏன் இருக்கவேண்டும்? வருத்தத்தின் நிறுத்தத்தில் நிற்பவனுக்கு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் எப்படி கைகூடும்? ஆடம்பரம் நம்மைத் துன்பத்தில் கொண்டுநிறுத்தும், நம்முடைய எளிமை நம்மை மகிழ்ச்சியை நோக்கிக்கொண்டு செல்லும். தேடலில்தான் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் உள்ளது. உறவுகளின் வரவுகளில்தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.

எல்லோருக்கும் நல்லதே செய்யுங்கள்
யாருக்கும் மனதால்கூடத் தீங்கிழைக்காதவர்களுக்கு என்றும் இன்பமே எந்நாளும் துன்பமில்லை. மற்றவர் செயல்களில் தேவையில்லாமல் தலையிடுவது தீராத் தலைவலியை உருவாக்கும். நம் எல்லைகளைத் தெளிவாக அறிந்தால் தொல்லைகள் நமக்கு வரப்போவதில்லை. தேவையால்லாமல் நாம் பேசும் சொற்களே  நம் மகிழ்ச்சியைக் கெடுக்கும் பீரங்கிகள். எல்லோருடைய விமர்சனத்திற்கும் பதில் சொல்லவேண்டும் என்பதில்தான் சிக்கல்கள் சீழ்பிடித்துக் கிளம்புகின்றன.
மறப்போம் மன்னிப்போம்
பழிக்குப் பழி சொல்லுக்குச் சொல் என்று நாம் செய்யும் செயல்கள் நம் நிம்மதியைக் குலைத்துவிடும். மறப்பதும் மன்னிப்பதும் உயர்குணங்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். எதிர்மறையான சிந்தனைகள் நம்மை எந்நேரமும் சோகத்தில் ஆழ்த்திவிடும். தினமும் சேரும் கவலைகளைப் போட்டுவைக்க மனம் ஒன்றும் குப்பைத் தொட்டியில்லை. எல்லாம் சமமென்று நினைப்பவருக்கு உயரங்களும் துயரங்களும் ஒன்றுதான். நம் வாழ்வின் இனிய உரம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான்.
யாருக்கில்லை சோகம்?
செயற்கைத் தனங்கள் இல்லாத இயல்பான வாழ்க்கை ஏமாற்றங்களிலிருந்து நம்மைக் காத்தாட்கொள்ளும். கவலையின் கூர்நகங்கள் நம் இன்பமுகங்களைக் கீறிக்கிழித்துவிட அனுமதிக்கலாமா? நடுங்கும் நம் நாட்களை நம்பிக்கை எனும் முட்டுக்கொடுத்துத் தூக்கி நிறுத்தியாக வேண்டும். யாருக்கில்லை சோகம்? யாருக்கில்லை துக்கம்? எல்லாவற்றையும் மென்றுமுழுங்கிவிட்டு மெல்ல நகர்வதில் இருக்கிறது இன்பவாழ்வின் இனியநுட்பம்.

வசந்த வாழ்வை ஏன் கசந்த வாழ்வாக்குகிறோம்?
நெஞ்சைப்பிழியும் நஞ்சாய் துயரம் பலருக்கு வசந்த வாழ்வைக் கசந்தவாழ்க்கையாக்குகிறது. அழுது அழுது அலுத்துப் போவதற்கா இந்த வாழ்க்கை. ஏன் அதைச் சிரித்து சிரித்து சிறந்ததாக மாற்றலாமே. இலையுதிர்காலம் இலைகளின் இறந்தகாலமன்று, இன்னும் புதியஇலைகள் துளிர்ப்பதற்கே என்று நாம் ஏன் எண்ணக்கூடாது? இழப்பதற்கு ஒன்றுமில்லை இருப்பதற்கே வந்தோம் என நினையுங்கள் துக்கம் பக்கம் வராது. இன்று புதிதாய் பிறந்தோம் என்கிற பாரதிபோல் ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியால் நமை நிரப்பும்போது மகிழ்ச்சி தானாய் நம்மை வந்தடையும்.

மனம் செய்யும் விந்தை
விருப்பும் வெறுப்பும் நம் மனம் செய்யும் விந்தை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பணம் மட்டுமே மகிழ்ச்சியை மனத்திற்குத் தந்துவிடமுடியாது என்பதை உணரத் தொடங்குவோம். பொம்மையை உண்மையாய் நம்புகிறவரை குழந்தை மகிழ்ச்சியாகத்தானிருக்கிறது. அதிகமான சந்தேகம் ஆழத் துயரைத் தந்துவிடும். நாம் நினைத்தபடியே யாவும் நடக்கவேண்டும் என்கிற ஆசை தீராத் துயரைத் தந்துவிடும். எல்லாவற்றையும் நம்மால் மாற்றமுடியாது என்கிற உண்மைதான் புரிதலை நோக்கி நம்மை இட்டுச்செல்கிறது. மாற்றமுடியாதவற்றைப் புரிந்துகொள்ளும் அறிவாற்றலை நாம் பெறும்போது இன்பத்தை நாம் தொலைக்காமலிருப்போம்.

துயரப் பரப்புகளுக்குள் ஏன் தூக்கிப்போடுகிறீர்கள்?
வெளிச்சம் வெளியே வரும் வினாடியில் இருள் இருந்தஇடம்தெரியாமல் மறைந்து போகிறது. அதுபோல் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டும் என மனதார முடிவெடுத்துவிட்டால் யாரும் நம்மை துயரப் பரப்புகளுக்குள் தூக்கிப்போட்டுவிடமுடியாது. ஓட்டை வாளியில் ஊற்றிய தண்ணீராய் நாம் கோட்டை கட்டக் காணும் கனவுகள் தகர்ந்து போகும்போது நம்மால் தாங்கமுடிவதில்லை. எல்லோரையும் நம்புவதும் யாரையும் நம்பாமல் இருப்பதும் துன்பம் நோக்கி நம்மை நகர்த்திவிடும். மற்றவர்களை மகிழச்செய்கிறவர்களையே இறைவன் மகிழச்செய்கிறான்.

மகிழ்ச்சியாய் வாழ
 மூன்றுமாதத்திற்கு ஒருமுறையாவது செல்பேசிகள் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டி ஏதும் இல்லாத மண்மனம் கமழும், குயில்கள் கூவும், அருவி நீர் சலசலக்கும், பச்சைப் பசேலென்று இயற்கையின் இன்மொழி பேசும் இடத்திற்குச் சென்று கலக்கமேதுமற்று இருங்கள். இயற்கையைப்போல் இன்பம் தரக்கூடியது வேறுஏதுமில்லை என உணருங்கள்.

அதிகாலையில் துயில் எழுவதைவிடச் சிறந்த பழக்கம் ஏதுமில்லை. காலம் கடந்து தூங்குகிறவனை எழுப்ப எந்தப் பொழுதும் இரண்டுமுறை விடிவதில்லை. ஏதும் இல்லாமல் போனாலும் அதற்கு நம்மால் எந்த வருத்தமும் இல்லாமல் வாழ முடிந்தால் நாம் மகிழ்ச்சியாக வாழ்வதில் முழுமையை நோக்கிப் பயணிக்கிறோம் என்பது பொருள்.
நம் சீற்றத்தால் நாம் செய்த தவறுகளைக் கூடப் பூசிமொழுகிவிடுகிறோம். நாம் செய்த தவறுகளை நியாயப்படுத்தாமல் மனம்வருந்தி மீண்டும்மீண்டும் அத்தவறுகள் நிகழாமல் கவனமாய் செயல்படுகிறவர்கள் என்றும் மகிழ்ச்சியாளர்களாய் வாழ்கிறார்கள்.
எதற்கும் உரியகாலம் வரும்வரை பொறுத்துதான் ஆகவேண்டும் என நம்பமறுக்கிறோம். திறமையினால் சாதிப்பதைவிடப் பொறுமையினால் சாதிப்பது மேன்மை என உணரும்போது மகிழ்ச்சிதானே ஊற்றெடுக்கிறது.
வாழ்க்கை, பதில் எழுதவேண்டிய தேர்வு வினாத்தாள் இல்லை, பதில் தெரியாத புதிரும் இல்லை, அதுஓர் அழகான வசந்த அனுபவம், படித்ததும் மகிழ்வளிக்கக்கூடிய இனியகவிதை. உணவிருக்கும் திசைகள் நோக்கி வரிசையாய் நடக்கும் எறும்புகளல்ல நாம். உணர்விருக்கும் திசைகளை உருவாக்கும் உன்னதமனிதர்கள் நாம்.

ரசிக்கும் மனம்
பிறந்த குழந்தையின் மாசுமருவற்ற அழகுமுகம், அன்று பூத்த பூச்செடியின் அழுகுமலர், வண்ணங்களின் சின்னங்களாய் மலர்க் கிண்ணங்களில் அமர்ந்து தேனெடுக்கும் அழகுவண்ணத்துப்பூச்சிகள் என யாவற்றையும் ரசிக்கும் மனம் இருந்தால் ஏன் துன்பம் வரப்போகிறது? மகிழப்பிறந்தவர்கள் ஏன் மனது வலிக்க வருந்துகிறார்கள்?

மகிழ்ச்சி வெளியே இல்லை
அன்பு மனைவியின் காலை நேரத்து இன்சுவைக் குளம்பி, ஊர்க்கண் பட்டுவிட்டதாய் உள்ளம் பதறி உப்புசுற்றிக் கிணற்றுத் தண்ணீரில் சத்தமில்லாமல் போட்டு நிம்மதிப் பெருமூச்சுவிடும் அன்புஅம்மா, குட்டிக் கொலுசுபூட்டி தத்தி நடைநடக்கும் பாசமகள், அம்மா மூலம் தூதனுப்பி மிதிவண்டி கேட்கும் நேசமகன், வெளியே போகும்போது சாமிபடத்தின் பூத் தந்து அன்போடு அனுப்பிவைக்கும் அன்பு அப்பா, சிறுவயதில் கட்டிப் புரண்டு சண்டைபோட்டாலும் இப்போது சிறுகாய்ச்சல் வந்தால்கூட வாட்சப்பில் வருத்தப்படும் பாசத்தம்பி, நான்கு நாட்கள் வெளியூர் போய்விட்டால்கூடத் தொலைபேசியில் அழைத்து நலம்விசாரிக்கும் பக்கத்துவீட்டுக்காரர்.. இவர்களால்தான் இன்னும் நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோம்.

எங்கும் மகிழ்ச்சியுண்டு
கொட்டும் மழைநாளில் நனைவதில் மகிழ்ச்சியுண்டு, அதிகாலை நாளிதழின் அச்சுமணத்தில்  மகிழ்ச்சியுண்டு, மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு வந்தஉடன் கரம்பற்றி நலம்விசாரிக்கும் அன்புக்கரத்தின் இளம்சூட்டில் மகிழ்ச்சியுண்டு, நட்சத்திரம் கொட்டிக்கிடக்கும் விரிவானில் நூல்பிடித்தாற்போல் வரிசையாய் பறக்கும் அழகுப் பறவைகளைப் பார்ப்பதில் மகிழ்ச்சியுண்டு, தொட்டில் குழந்தையின் பஞ்சுப்பாதம் தொடுதலில் மகிழ்ச்சியுண்டு, வீட்டுத்தோட்டத்தில் புதிதாய் ஒரு பூப் பூத்தால் மகிழ்ச்சியுண்டு,நதிமுங்கிக் குளிக்கையில் விரல்கடிக்கும் மீன்கண்டால் மகிழ்ச்சியுண்டு. மகள் திருமணம் முடிந்து மணமேடையில் இன்பக்கண்ணீர் விடும்போது மகிழ்ச்சியுண்டு. இப்படி எல்லா மகிழ்ச்சியையும் எல்லை இல்லாமல் நம்மருகே வைத்துக்கொண்டு மனசு சரியில்லையென்று நாம் ஏன் இனி சொல்லவேண்டும்? 


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்