கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்

கவியரசர் பேசிய பள்ளியில் கவியரசர் குறித்து பேசிய நிமிடங்கள்


நேற்று காலை இலஞ்சிக்குள் நுழைந்தபோது குற்றாலச்சாரல் முகத்தில் சில்லென்று காற்று வீசி வரவேற்றது.நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இலஞ்சி இராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு இலக்கிய மன்றத் தொடக்கவிழா கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 91 வது பிறந்தநாள்விழா. இரண்டாயிரம் மாணவ மாணவியர் திறந்தவெளிஅரங்கில் அமர கவியரசர் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு நிகழ்வு தொடங்கியது.

 கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நண்பர் பொதிகைத் தமிழ்ச்சங்கத் தலைவர் டாக்டர் செ.தங்கபாண்டியன் முன்னிலையில் கண்ணதாசன் கவிதைகள் குறித்துப் பேசத் தொடங்கினேன். 

பன்னீர் செம்பாய் வானம் மாறி மெலிதாய் சாரல்துளிகளை எங்கள் மீது வீச கண்ணதாசனுக்குள் கவிதையாய் நுழைந்தோம். நதியில் விளையாடி கொடியில் தலைசீவி தென்றலும் எங்களோடு இருந்தது. உலகம் பிறந்து எனக்காக.. பாடலில் தொடங்கி மயக்கமா கலக்கமா பாடலில் தொடர்ந்து முப்பது நிமிடங்களைக் கவியரசர் எடுத்துக்கொண்டார்.

 பொதிகைத் தமிழ்ச்சங்கத் தலைவர் டாக்டர் செ.தங்கபாண்டியன் கவியரசரின் நண்பர் சிவாஜி குரலில் இன்று உங்கள் உரையில் கண்ணதாசனைக் கேட்டேன் என்றவர் தலைசீவும் சீப்பை எடுத்து அதன்மீது நாட்காட்டியிலிருந்து கிழித்த தாளைப் போர்த்தி இசைக்கருவியாய் மாற்றி உதடுகளுக்குள் கண்ணதாசன் பாடல்களை இசையாய் மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி தனக்கும் கவியரசருக்குமான நட்பை நெகிழ்வோடு விளக்கிப் பேசினார்.

 ஓவிய ஆசிரியர் கணேசன் கவியரசரின்  கம்பீரமான ஓவியத்தை வரைந்து அவருக்குச் சிறப்புச் செய்திருந்தார். முகநூலில் உள்ள என் சமீபத்திய படத்தைக் கோட்டோவியமாய் வெகு நேர்த்தியாய் வரைந்து விழா மேடையில் பள்ளியின் சார்பில் வழங்கினார். 



கவியரசர் நாற்பது நாட்கள் குற்றாலத்தில் தங்கியிருந்த போது இப்பள்ளிக்கு வந்து இதே தமிழ் மன்றத்தில் இதே இடத்தில் பேசினார் என்று கல்யாணி ஐயா சொன்னபோது அவர் பேசிய இடத்தில் அவரைப்பற்றி பேசியது எனக்கு நிறைவாய் இருந்தது.விழா முடிந்து முதல்வர் அறைக்குள் நுழைந்தஉடன் கவியரசரின் முத்துமுத்தான எழுத்தில் அப்பள்ளி குறித்து அவர் எழுதித்தந்திருந்த வாழ்த்துப் பாவைக் கண்களில் ஒத்திக்கொண்டேன்.”எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று அந்த மேடையில் நின்று அவர் சொல்லாமல் சொன்னதாய் உணர்ந்தேன்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்