சௌந்தர மகாதேவனின் “தண்ணீர் ஊசிகள்” கவிதை நூலுக்கு சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. வண்ணதாசன் அவர்களின் வாழ்த்துரை


சௌந்தர மகாதேவனின் “தண்ணீர் ஊசிகள்” கவிதை நூலுக்கு சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. வண்ணதாசன் அவர்களின் வாழ்த்துரை


தண்ணீர் ஊசிகள்
........................................
ஏற்கனவே நமக்குத் ‘தண்ணீர்ச் சிற்பம்’ தெரியும். இது ‘தண்ணீர் ஊசிகள்’. நிலம் கிழிந்தால் நீர் தைக்கும். நிலத்தை யார் கிழிக்கிறார்கள் என்பதொரு பெரும் கேள்வி. சௌந்தர மகாதேவன் தையல்காரர். திருநெல்வேலியின் அத்தனை தெருக்களிலும் தன் தையல் இயந்திரத்தைத் தள்ளிக்கொண்டே போயிருக்கிற ஒருவர். வெயிலறிந்தவன் எப்போதும் மழை அறிவான். நிலம் அறிந்தவன் நீர் அறிவான். அறிந்திருக்கிறார்.

முதல் கவிதையிலே சொல்லிவிடுகிற வெளிப்படை. கவிதை என்பது அவருக்கு நினைவின் அடையாளம். நிறைய வாழ்ந்தவருக்கு நிறைய நினைவுகள். நிறைய அடையாளங்கள். நிறையக் கவிதைகள்.
சின்னத் தாத்தா, திம்மராஜபுரம் காந்திமதி அக்கா,(எங்களுக்கு எல்லாம் திம்மராஜபுரம் என்றால் ஜோதிவினாயகம் தான்), நீலகண்டன் பிள்ளை, முப்பிடாதியக்கா, விபூதிப் பாட்டி, மருதையாத் தாத்தா, மயிலக் கோனார், தட்டாக்குடித் தெரு சரசுப் பெரியம்மை, தெப்பக்குளத் தெரு செண்பகத்தக்கா, சுப்பாராயத் தாத்தா.. இப்படி ஒரு நிரம்பி வழிகிற பட்டியல். இதில் விடுதல்களும் உண்டு.

உச்சினி மாகாளி,நெல்லையப்பர் கோவில், மனகாவலன் பிள்ளை ஆஸ்பத்திரி, அழகு நாச்சியம்மன், கம்பா நதி, சுலோச்சனா முதலியார் பாலம், ஸ்ரீராம் பாப்புலர், அனில் ஸ்டோர், பெல் ஸ்கூல், வெள்ளக் கோவில், ஈனஞ்சாமி..என்று இன்னும் ஒரு இடம், பொருள், ஏவல் பட்டியல்.

எல்லாம் வாழ்ந்து வாழ்ந்து, பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து எடுத்த புகைப்படங்கள். இதுவே ஒரு நாவலின், ஒரு சிறுகதையின் சுவர் என்றால் ஒன்று பாக்கியில்லாமல் இத்தனை படங்களையும் மாட்டிவிடலாம். உரைநடையின் எட்டுத் திக்குச் சுவர்கள் அதை அனுமதிக்கின்றன. எல்லாப் புராதன வீட்டுப் பட்டாசல்களை வெள்ளையடிக்கும் போதும், காலம்  காலமாகத் தொங்கிக் கொண்டிருந்த படங்களை எல்லாம் கழற்றி, வெளியே கல் திண்ணையில் குப்புறக் கவிழ்த்திவிட்டு. நடுகற்கள் போல் சுவரில் முளைத்து நிற்கும் துருப்பிடித்த ஆணிக்கொண்டைகளுடன் பேசுகிறவனாக ஒரு உரைநடையாளன் இருக்கிறான். அதிலும் மாறிக்கொண்டே வரும் உரைநடையின் நவீனச் சுவர் அப்பாவின் படத்தைத் தலைகீழாகத் தொங்கவிடச் சொல்கிறது.

ஒரு கவிதைத் தொகுப்பின்/ தொகுப்புக் கவிதைகளின் சுவர் மீது, இத்தனை சனங்களின் கதையை எழுத அவசியமில்லை. ஆனால் சனங்கள் எப்போதுமே அழகானவர்கள். எதன்பொருட்டும் தள்ளுபடி செய்யமுடியாதவர்கள். அப்பாவின் மைக்கூடு அழகானது. அடுப்பின் மொழியறிந்த சாரிப் பாட்டி இனியவள். திம்மராஜபுரத்துக்காரி தொட்டுவைத்துப் போயிருக்கிற மோர்க் கணக்கு, உத்திரத்துக் கொக்கி, முக்குத் திரும்ப முனகும் தேர், காலம் ஆடும் அப்பத்தா காதுப் பாம்படம், பழைய கதவு, பாத்திரப் பாற்கடல், தற்படம் எடுத்துக்கொள்கிறவனின் தனிமை, அடிபம்பின் கைப்பிடித்தேய்வு, அதிகாலைக் கனவு, பன்னீர் தெளிக்கும் மண்டபப் பொம்மைகள், எல்லாம் சரிதான். ஆனால் இதைவிட முக்கியம் ‘மலையைவிடக் கனமான மலைத்து நிற்கும் ஒற்றைக் கணம்’
ஒற்றைக் கணம்தான் கவிதை. கருஞ் சிலையின் காதோரம் தெரியும் கற்பூர வெளிச்சம் தான் அது. ஒன்றின் நினைவுகளைக் கிழித்துப் பிறிதொன்றாய்ப் பறக்கும் கவிதை ஊடாடுவது சில சமயம் மனிதர்களற்ற கோவில். இன்னும் பெருஞ்சமயங்களில் கடவுளற்ற கோவில்.
முப்பிடாதி அக்கா போய்விட்டாள்.

கிழக்கு உச்சினிமாகாளி யார் மீது வருவாள் என்று தெரியாமலே இருக்கட்டும்.

யாரென்று தெரியாமல், எல்லோர்க்கும் பொதுவாக, ஆவேசமாகக் கொட்டு அடிக்கும் வீரவநல்லூர் இசக்கிக் கம்பர் தானே நீங்கள்.
அவராகவே இருங்கள். ஆவேசம் அப்படியே இருக்கட்டும்.

வாழ்த்துகள்.
கல்யாணி.சி.

10.6.2017    

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்