சௌந்தர மகாதேவனின் "தண்ணீர் ஊசிகள்" கவிதை நூலை பேராசிரியர் சிவசு வெளியிடுகிறார்

பாளையங்கோட்டை பேராசிரியர் சிவசுவின் வேறுபட்ட இலக்கியமுயற்சி தன்னிடம் படித்த மூன்று தலைமுறை மாணவர்களின் இலக்கிய நூல்களைத் “மேலும்” வெளியீட்டகத்தின் மூலம் வெளியிடுகிறார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர் பேராசிரியர் நா.சிவசுப்பிரமணியன் (70) எண்பதுகளில் மேலும் என்கிற இலக்கிய இதழைத் தொடங்கி நவீன கோட்பாடுகளைக் கல்விப் புலத்திற்கு அறிமுகப்படுத்தி நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களை உருவாக்கியவர்.

படைப்புலகக் கருத்தரங்கு

வல்லிக்கண்ணன், வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்களின் தடம்பதித்த இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர். “மேலும்” வெளியீட்டகம் மற்றும் மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில்  சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் படைப்புலகக் கருத்தரங்கினை திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும், கவிஞர் கலாப்ரியா படைப்புலகக் கருத்தரங்கினை குற்றாலம் பராசக்தி கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர்  ஜோ.டி.குருஸ் படைப்புலகக் கருத்தரங்கினை தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரித் தமிழ்த்துறையோடும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் படைப்புலகக் கருத்தரங்கினை திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரித் தமிழ்த்துறையோடும் எழுத்தாளர் வண்ணநிலவன் படைப்புலகக் கருத்தரங்கினை பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரித் தமிழ்த்துறையோடும் இணைந்து நடத்தியவர்.

புத்தாக்கப்பயிற்சி

தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தோடு இணைந்து முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கான புத்தாக்கப்பயிற்சியை தொடர்ந்து நடத்தி வருபவர். இளம் எழுத்தாளர்களுக்காக சிறுகதை, நாவல், கவிதைப் பயிற்சிப் பட்டறைகளைத் தென்மாவட்டக் கல்லூரிகளில் தொடர்ந்து நடத்திவருகிறார்.

“மேலும்” விருதுகள்
 தமிழகத்தின் சிறந்த இலக்கியத் திறனாய்வாளருக்கான “மேலும்” இலக்கியத் திறனாய்வாளர் விருதினை நான்காண்டுகளாக வழங்கிவருகிறார். கடந்த ஆண்டுமுதல் சிறந்த இளம்படைப்பாளர் விருதையும் வழங்கிவருகிறார்.

“மேலும்” இலக்கிய அமைப்பு

 தன்னிடம் சவேரியார் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயின்ற தன் மாணவர்கள் வே.கட்டளை கைலாசம், சௌந்தர மகாதேவன் ஆகியோருடன் இணைந்து மேலும் இலக்கிய அமைப்பை ஐந்தாண்டுகளுக்கு முன்தொடங்கி ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமைகளில் பாளையங்கோட்டை சைவசபையில் நவீனத் தமிழ்இலக்கியக் கருத்தங்குகளை நடத்திவருகிறார். பெங்களூரில் இருக்கும் திறனாய்வாளர் தமிழவனுடன் இணைந்து சிற்றேடு எனும் காலாண்டிதழை நடத்தி தொடர்ந்து இலக்கியக் கட்டுரைகளை எழுதிவருகிறார்.

மண்சார்ந்த இலக்கிய விவாதங்கள்
மண்சார்ந்த இலக்கியங்களை மண்சார்ந்த இடங்களில் சென்று பேசுவோம் என்கிற திட்டத்துடன் திருப்புடைமருதூரில் தாமிரபரணி நதிக்கரையோரம் வண்ணதாசனுடன் அவரது சாகித்ய அகாடெமி விருது பெற்ற சிறுகதைத்தொகுதியான “ஒரு சிறுஇசை” நூல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை சனவரி 5, 2017 இல் நடத்தினார். நெஞ்சினிக்கும் நெய்தல் என்ற பொருளில் நெய்தல் சார்ந்த இலக்கிய நிகழ்வை திருச்செந்தூர் மணப்பாடு கடற்கரையில் ஜூன்,10,2017 இல் நடத்தினார்.
வேறுபட்ட இலக்கிய முயற்சி

ஜூன் 29, 1948 இல் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் பிறந்த சிவசுவின் எழுபதாவது பிறந்ததினத்தில் வேறுபட்ட இலக்கிய முயற்சியாகத் தன்னிடம் மாணவர்களாய் பாடம்பயின்று பேராசிரியர்களாய் தமிழ்ப்புலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மூன்றுஆசிரியர்களின் நூல்களை தன் மேலும் வெளியீட்டகத்தின் மூலம் வெளியிடுகிறார். தற்போது திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரியும் சௌந்தர மகாதேவனின் “தண்ணீர் ஊசிகள்” எனும் கவிதைநூலையும் அத்துறையின் உதவிப் பேராசிரியர் ஜீதேந்திரனின் “அட்சயா” எனும் நாடகநூலையும் திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் வே.கட்டளை கைலாசத்தின் “சுவடிகளின் சுவடுகள்” எனும் நூலையும் மேலும் இலக்கியக் கூட்டங்களில் தான் பேசிய உரைகளின் தொகுப்பு நூலாக “படிவாசி” எனும் நூலையும் 29.6.2017 மாலை 6 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட மத்திய நூலகத்தில் “மேலும்” வெளியீட்டகத்தின் மூலம் வெளியிட உள்ளார்.

நூல்கள் வெளியீடு

திருநெல்வேலி மாவட்ட மத்திய நூலகத்தின் மாவட்ட நூலக அலுவலர் தி.முனியப்பன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கிறார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சு.சிவசுப்பிரமணியன், பாளை பேராசிரியர்களின் நான்கு நூல்களையும் வெளியிட சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் மு .முஹம்மது சாதிக், தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரியின் பணிநிறைவு பெற்ற மருத்துவர் டாக்டர் எஸ்.வேல்ராமலிங்கம், வரலாற்று ஆய்வாளர் செ.திவான், தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மைய இயக்குநர் பேராசிரியர் நா. இராமச்சந்திரன், நெய்யூர் லட்சுமிபுரம் கலைஅறிவியல் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்கள் கணேஷ், சு.செல்வி, சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளி ஆசிரியர் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அந்நூல்களைப் பெற்றுக் கொள்கின்றனர். பாளையங்கோட்டை சைவசபைத் தலைவர் வழக்கறிஞர் மீ.வள்ளிநாயகம் வாழ்த்திப் பேசுகிறார். வே.கட்டளை கைலாசம், சௌந்தர மகாதேவன் ஆகியோர் வரவேற்றுப் பேசுகின்றனர்.

நெஞ்சினிக்கும் நெல்லை- கவிதை வாசிப்பு நிகழ்ச்சி
பொலிவுறு மாநகரமாய் திருநெல்வேலி தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாடும் பொருட்டு “நெஞ்சினிக்கும் நெல்லை-” எனும் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியை “மேலும்” இலக்கிய அமைப்பு விழா அரங்கில் நடத்துகிறது. கவிஞர் கலாப்ரியா தலைமை வகித்து “என் கவிதைகளும் எனக்குப் பிடித்த கவிதைகளும்” என்ற தலைப்பில் கவிதைகள் வழங்குகிறார். ‘மருதமரங்கள் நிறைந்த நெல்லை’ என்ற தலைப்பில்  சிவசுவும், ‘மண்மணம் கமழும் நெல்லை’ என்ற தலைப்பில் வே.கட்டளை கைலாசம், ‘தாமிரபரணித் தாய் நெல்லை” என்றதலைப்பில்  சௌந்தர மகாதேவன், என் நெல்லை எனும் தலைப்பில் சுப்ரா ஆகியோர் நிமிடக் கவிதைகள் வழங்குகின்றனர்.


பரிசுகள்
“தமிழ்இலக்கியத்தில் தூய்மை குறித்த பதிவுகள்” எனும் பொருளில் திருநெல்வேலி மாவட்ட மத்தியநூலகம் நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு திருநெல்வேலி மாநகராட்சியின் ஆணையாளர் சு. சிவசுப்பிரமணியன், கவிஞர் கலாப்ரியா ஆகியோர் பரிசுகள் வழங்குகின்றனர். நூலகர் அ.முத்துகிருஷ்ணன் நன்றி கூறுகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலும் இலக்கிய அமைப்பும் திருநெல்வேலி மாவட்ட மத்திய நூலகமும் இணைந்து செய்துவருகின்றன.



Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்