செப்டெம்பர் மாத கணையாழி இலக்கிய இதழில் வெளியான நீல.பத்மநாபன் கவியுலகம் : சிந்தை தைத்த சிந்தை முட்கள்

   நீல.பத்மநாபன் கவியுலகம் : சிந்தை தைத்த சிந்தை முட்கள்

பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

கனியுடைந்து மண்ணில் விழுந்தாலேயொழிய புதுச்செடி துளிர்விடாது கவிதையும் கனியுடையும் அனுபவம் போன்றதே. கனியும் நேரம் கவிஞனுக்குத் தெளிவாகத் தெரிகிறது. தேரோடும் வீதி, தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், உறவுகள் போன்ற குறிப்பிடத்தகுந்த படைப்புகளைத் தமிழுக்குத் தந்த மூத்த தலைமுறைப் படைப்பாளர் நீல.பத்மநாபன், நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை போன்ற எல்லா வகைமைகளிலும் தொடர்ந்து எழுதிவருகிறார். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், ஆங்கில மொழிகளிலும் படைப்புகளை உருவாக்கி வருகிறார். தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் திருவனந்தபுரத்தில் வாழும் அவர், அங்கு மாதாமாதம் தமிழ், மலையாளக் கவிதைகளை எழுதி அரங்கேறி வருகிறார். திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் அவருடைய 79 வது பிறந்தநாள் விழாவில் அவர் எழுதிய மலையாளக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டது.

நுட்பமான கவிதை வடிவம்
மகா நதியாய் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வை ஆவணப்படுத்தும் அற்புத ஆற்றல் கலைக்கே உண்டு. பாலைக் கடைந்து உள்ளே ஒளிந்திருக்கும் வெண்ணையைத் திரட்டி நெய்யாக மாற்றுவதைப் போன்ற சித்துவேலை இலக்கியத்தில் மட்டுமே சாத்தியம். அதுவும் அரைநூற்றாண்டுகளையும் தாண்டித் தமிழின் அனைத்து வடிவங்களிலும் தன் படைப்பிலக்கியக் கிளையைத் தீவிரமாய் பரப்பிக்கொண்டிருக்கும் மூத்த தலைமுறைப் படைப்பாளர் நீல.பத்மநாபன் கவிதை வடிவத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்றால் கவிதை வடிவம் குறித்து இன்னும் அதிகமான ஈர்ப்பு ஏற்படுகிறது.

நாவலைக் கோபுர தரிசனம் எனக் கொண்டால், கவிதையை மூலவர் தரிசனம் எனச் சொல்லலாம். பத்துமாடிக் கட்டடம் கட்டுவதைப் போன்றது நாவலென்று சொன்னால், மிகநுட்பமான நகைவேலை செய்வதைப் போன்றது கவிதை எழுதுவது. கவிதையை அவ்வளவு எளிமையாகப் புரிந்துகொள்ள இயலா அளவு நுண்மையும் ஆழ்ந்த பொருண்மையும் உடையதாகத் தெரிகிறது.

சோதனை முயற்சி
க.நா.சு.இலக்கியத்தில் பல சோதனை முயற்சிகள் செய்யவேண்டும் என்று சொல்வார். தமிழில் அதுபோன்ற சோதனை முயற்சிகளைச் செய்தவர்களில் நீல.பத்மநாபன் குறிப்பிடத்தக்கவர். நீல.பத்மநாபனைப் போன்ற தேர்ந்த படைப்பாளர் எழுபதுகள் முதல் இன்று வரை தொடர்ந்து கவிதை வடிவத்தில் இயங்குவது கவிதை வடிவத்தின் நுட்பத்தைக் காட்டுகிறது.

அவர் கவிதைகளில் தனக்குத் தானே முரண்படும் சுயத்தின் கனத்தகுரல் வலுவோடும் வலியோடும் கேட்கிறது. எழுத்து ஒரு தீவிரமான இலக்கியப் பயிற்சி என்பதை நீல.பத்மநாபன் தெளிவாக உணர்ந்திருகிறார். தன் மனவலியின் மறக்கமுடியாத அடையாளக் குறியாக அவர் கவிதையைக் காண்கிறார். மனிதர்களை முழுமையாக உணர உணரவைக்க அவர் வெவ்வேறு இலக்கியவடிவங்களில் தன் மனவோட்டத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

சங்கக் கவிதையின் சாயலில்

அவர் 1976 இல் “சலனம்” இதழில் எழுதிய “பவள மல்லி” கவிதையைச் சான்றாகச் சொல்லமுடியும்.

நெடுநாள் வாடாது/ வண்ணம் காட்டித் திகழும்/ வாடா மல்லியாக வேண்டாம்/ ஒருநாள் தட்பவெட்பம் கூட/ தாக்குப்பிடிக்க வலுவின்றிப்/ பொட்டென்று/ பொசுங்கி உதிர்ந்தாலும்/ அந்நாள் பூரா/ மனம் நெகிழும் வாசம் தரும்/பகடில்லா/ பவள மல்லியாகட்டும்/இந்த ஜன்மம்.”

எனும் கவிதை கருப்பொருளைக் கொண்டு நிலமாந்தர் மனவோட்டத்தைச் சொல்லும் சங்கக் கவிதையை ஒத்திருக்கிறது. நாவல் வடிவத்தில் கைதேர்ந்த கலைஞர் தத்துவார்த்தமான ஒன்றைச் சொல்ல அவ்வடிவத்தைத் தாண்டி இன்னொரு வடிவத்திற்குக் கூடுவிட்டுக் கூடு பாய்தலின் நுட்பத்தைப் புரிந்துகொள்ள மேலும் சிலகவிதைகளை நோக்க வேண்டியுள்ளது.

உறுதியான கல்தூணைக் கைகளால் தட்டும்போது இசை வருகிறமாதிரி படைப்பாளியின் மென்மனம் உட்பொருளைச் சொல்லுகிற வடிவத் தேர்வும் படைப்புக்குள் ஓசை ஒழுங்கைக் கொண்டுவரும் முயற்சியே. எழுத்துப்பொறி கனன்று எரியத் தொடங்குகையில் கைப்பற்றும் கவிதை வடிவத்தை அவர் வளர்ந்த பின்னும், பல இலக்கிய வடிவங்களில் வெற்றிபெற்ற பின்னும் தொடர்ந்து கைக்கொண்டிருந்தார்.

 போதாமை

ஒன்றின் போதாமை இன்னொன்றின் வடிவத்திற்குத் தாவ வைக்கிறது. ஏதோவொன்றைச் சொல்லவரும் படைப்பாளி, வேறொன்றைச் சொல்லி முடிக்கும்போதெல்லாம் அடுத்த படைப்பின் அடிநாதமாய் அதுவே இட்டுச்செல்கிறது. களிமண்ணைப் பிசைந்து விநாயகர் சதுர்த்திக்கு முகம் செய்யும் விரல்களுக்கும் அன்றையை மனநிலைக்கும் தொடர்பிருப்பதைப்போல, படைப்பாளியின் மனவிரல் அந்த நாளின் மன பிம்பத்தை அந்த நாளின் மன முகத்தோடு அன்றைய படைப்பாய் மாற்றுகிறது. சொற்களின் பரப்பில் படைப்பாளி நடத்தும் எழுத்துத் தியானமே படைப்பு எனும் வடிவத்தில் வெளிவருகிறது.

புரியாமை

தன்னை வீணையாக நினைத்துக் கொண்டு நீல. பத்மநாபன் அன்றைய மனஓட்டத்தை வீணை எனும் தலைப்பில் கவிதையாக்கியுள்ளார்.

“ என்னை மீட்டியவர்கள்/ அபஸ்வரங்களையே/ எழுப்பி/முகம் சுளித்தனர்/ ஸ்வர சுத்தத்தை/ தேகியில்/ மீட்ட ஆளின்றி/ மறதியில் லயிக்கும்/அகம் பிரம்மம்”  

தன்னைப் புரிந்துகொள்ளாமல் தன் படைப்பையும் சரிவரப் புரிந்துகொள்ளாமல் மாற்றிப் புரிந்துகொள்ளும் சகமனிதர்கள் மீதான கவலை இக் கவிதையில் தொனிக்கிறது.


நீல பத்மநாபன் கவிதை முயற்சிகள்

நீல பத்மநாபன் கவிதைகளின் முதல்தொகுப்பு 1975 இல் வெளிவந்தது, அதைத் தொடர்ந்து ‘நா காக்க’ தொகுப்பும், ‘பெயரிலென்ன தொகுப்பும்’ வெளிவந்தது. 2003 இல் நீல பத்மநாபனின் 148 கவிதைகளும், 2012 இல் நீல. பத்மநாபனின் 43 கவிதைகளும் வெளிவந்தன. கடந்த ஆண்டு (25.4.2016) சிந்தை முட்கள் வெளிவந்து பெரும் கவனத்தைப் பெற்றது.

இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதியுள்ள நீல.பத்மநாபன், “இக் கவிதைகள் அந்தந்த காலக்கட்டத்து என் இதயத் துடிப்புகள், யாரையும் குறிவைக்கும் அம்புகளல்ல.சமூகத்தில் ஓர் அங்கமான என்னை குடும்பமும்,சமூகமும் இயற்கையுமெல்லாம் பாதிப்பதை தடை செய்து முற்றும் துறந்த போலிவேடம் அணிய நான் விரும்புவதில்லை.

அனுபவம் என்பது சுய அனுபவம் மட்டுமன்று, பிற அனுபவங்களும் சொந்த அனுபவமாக்கி கவிபாட முயற்சி” என்கிறார். சிந்தை முட்கள் கவிதைத் தொகுப்பில் நீல.பத்மநாபனின்  கவிதைகள் குறித்த நகுலனின் பார்வையும், சி.சு.செல்லப்பாவின், மேலும் சிவசுவின் திறனாய்வுக் கருத்தும் இடம்பெற்றுள்ளன.

நகுலன்

நீல.பத்மநாபனின்  கவிதைகள் குறித்து எழுதிய நகுலன், “ படிமம் மூலமும் அல்லாமலும் வெற்றிகரமாக இயங்கும் கவிதைகள் இவை” என்று பதிவுசெய்துள்ளார்.

சி.சு.செல்லப்பா

வேறுபட்ட இவரது கவிதை நெறி சி.சு.செல்லப்பாவுக்கு மிகவும் பிடித்தமானது, “ இயற்கை, விஞ்ஞானம், மனித உணர்ச்சி, இவைகளை பிணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரது கவிதைகளின் உள்ளடக்கம் ஒரே விதமானதாக இல்லை.” என்று சி.சு.செல்லப்பா இவரது கவிதைகளைத் திறனாய்வு செய்துள்ளார்.

வல்லிக்கண்ணன்

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் நீல.பத்மநாபன் கவிதைகள் குறித்து, “வாழ்க்கை அனுபவங்களும் சூழ்நிலை மனிதர்களும் ஏற்படுத்திய மனப் பதிவுகளை உணர்ச்சியுள்ள கவிதைகளால் படைத்திருக்கிறீர்கள்.பாரதத்தின் ஆன்மாவைத் தேடிய – தேடுகிற முயற்சிகளாக உங்கள் எழுத்துக்களை கொள்ளலாம். கவிதைகள் அவ்வகையில் உயர்ந்து காணப்படுகின்றன.” என்று எழுதியுள்ளார்.

கோரமாகி வரும் திருவனந்தபுரம்

மண் சார்ந்தே படைப்பாளியின் எழுத்து அமைகிறது, கண் எதிரே தான் வாழும் மண் சிதைக்கப்படுவதைக் காணப் படைப்பாளியின் மென்மனம் சகிக்குமா?

அழகு நகரமாய் இருந்த திருவனந்தபுரம் மாநகரமாய் மாறியதன் பின்னணியில் இழந்தபோன இறந்துபோன இயற்கையே சிந்தை முட்களாய் அவருள் குத்திக்கிழிக்கின்றன.

 அவர் கவிதைகள் அவலத்தின் ஆவணங்களாய் அமைகின்றன. “பம்ப் ஹௌஸ்” கவிதையில் நீர்த் தடமிருந்த இடத்தில் இப்போது அடுக்குமாடிகள் வந்ததையும் வீட்டிலும் வெளியிலும் கழிவுநீர்ப் பொங்கிப் பிரவாகிக்கும் கோரத்தையும் சொற்களால் வடிக்கிறார்.

கண்முன் எல்லாம் அழிந்துகொண்டிருந்தாலும் ஒன்றும்செய்ய முடியவில்லை,சிந்தை முட்கள் நூலில் இடம்பெற்றுள்ள “பம்ப் ஹௌஸ்” எனும் கவிதை குறிப்பிடத்தக்கது. அக்கவிதையின் இடைவரிகள் மூன்று..

 “ கண்களும் நாசிகளும் கால்களும் மரத்துப்போய்/ நெடுநாளாச்சு ஊர்வாசிகள் எங்களுக்கு/ வரலாற்று நினைவுச்சின்னமாய்/ எங்களூர்  பம்ப் ஹௌஸ்../ பம்பிங்கில்லா..”

என்று சித்திரமாய் வரைகிறார் நீல.பத்மநாபன்.
தாவரநேயம்

உணர்வும் மொழியும் சேர்கிற இடம் கவிதைச் செடி துளிர்கிற இடம். படைப்பாளியின் அனுபவம் வாசகரின் அனுபவத்தோடு ஒத்திசைகிற புள்ளியில்தான் கவிதை உயிர்த்தெழுகிறது.

பூமிக்கு மேலே வானுக்குக் கீழே இருக்கும் எதைப் பற்றியும் கவிஞன் தன் கலையால் கவலை கொள்வான். வாடிப் போன துளசிச் செடியோடு அவர் பேசும் நடையில் அமைந்த “துளஸி” கவிதை அவர் தாவரநேயத்திற்குச் சான்று.புதுவீடு கட்டிக் குடிவந்த உடன் மனைவி துளசிச் செடிவைத்து தினமும் வழிபாடு நடத்துகிறார்,சிறிது நாளில் சன்சேடில் புறாக்கள் அடைந்து வழிபடும் அவர் மீது எச்சஅபிசேகம் செய்கிறது, அதன் பின் துளசிமீதான அவரின் ஈடுபாடு குறைய குழந்தைகள் வீட்டிற்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள வாடி வதுங்குகிறார்கள் துளசியும் கவிஞரும் அதைக் கவிதையாக்கும் நீல.பத்மநாபன்

 “ முதலில் சில நாட்கள் அலட்டிக் கொள்ளாத நெஞ்சம்/  நாள் செல்லச்செல்ல தன் தனிமையுடன்../ உன் தனிமையும் சேர்ந்து கொண்டபொது../ உள்ளுக்குள் என்னமோ ஒரு../ சொல்லத்தெரியவில்லை../ வெயிலில் நீ வாடி வதங்கி நிற்பதைக் காணும்போது../சகிக்கமுடியா மன அவசம்../ இப்போதெல்லாம் காலை மாலை வேளைகளில்/ பூஜை அறை புகும் முன்/ ஒரு குவளை நீர் உனக்கு வார்க்கும் போது/ இந்நாள் வரை வேறு யாரிடமிருந்தும்/ கிடைத்தறியா ஒட்டுணர்வு..”

எனும் கவிதை தனிமையில் தவிக்கும் மானுடமும் துளசிச்செடியும் ஒருவருக்கொருவர் துணையாய் இருப்பதைக் காட்டுகிறது.

 வலி

வலியும் கிலியும் எனும் கவிதை வலியின் மொழியில் எழுதப்பட்ட கவிதை. “ வலியை சகித்துக்கொள்ள/ நெடுநாள் பயின்று பயின்று/ ஓரளவுக்கு பழக முடிந்ததும்/வலிகள் வரப்போகிறதென்ற/ ஆரம்ப சைகைகள்/ கிடைக்கத் தொடங்கையிலேயே/ நெஞ்சில் வந்து உடும்பாய்/ கவ்விக்கொண்டுவிடும்/ வரப்போகும் வலியை/ நினைந்துள்ள கிலி..!/ அதை அப்புறப்படுத்த/ எடுத்துக்கொண்ட/ அப்பியாசங்களெல்லாம்/ தோல்விக்குமேல் படுதோல்வி/ என் செய்வேன்..என் செய்வேன்../ பராபரமே

என்கிற கவிதை சொற்களைப் பின்னுக்குத் தள்ளி வலியின் வலிமையை உணர்த்திய கவிதை. நீல.பத்மநாபனின் “சிந்தை முட்கள்” தமிழ்க் கவிதைகளில் குறிப்பிடத் தகுந்த முயற்சி. சமகால நிகழ்வுகளைத் தமிழின் அனைத்து வடிவங்களிலும் பதிவு செய்துள்ள படைப்பாளராக நீல.பத்மநாபன் திகழ்கிறார்.

கட்டுரையாளர் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர், “வண்ணதாசன்” நூலாசிரியர்

சிந்தைமுட்கள்,
நீல.பத்மநாபன்,


விருட்சம் வெளியீடு,
சீத்தாலட்சுமி அப்பார்ட்மெண்ட்ஸ்,
ராகவன் காலனி,
மேற்கு மாம்பலம்,சென்னை
விலை : 60

cell: 9444113205

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்