சௌந்தர மகாதேவன் கவிதைகள்



அப்பாவி
.....................
வாரத்தில் ஒன்றிரண்டு பரபரப்பு
வசதியாய் பிடிக்காதோர்மீது மொட்டைக்கடிதம்
மாதத்தில் மார்தட்டித் தொலைக்காட்சி விவாதமேடை
கோபத்தில் முகநூலில் கோஷ்டிச்சண்டை
கொள்கைக்காகக் கொடும்பாவி கொளுத்தச்செல்லல்
ஊன் உருக்கும் மொழிப் பேச்சு
உடல் வலிக்கா உண்ணாநோன்பு
ராப்பகலாய் அவதூறு மீம்ஸ் உருவாக்கம்
ரகசியமாய் வாட்ஸ்அப் குரல்பதிவு
இப்படி ஏதும் தெரியாதென்கிறாய்
அப்பாவி நீ  அரசியலில் எப்படி
அரிச்சுவடி கற்பாய் என்றேன்
அப்புறம் அவனை ஆளையேகாணோம்
*



எல்லா முகமூடிகளையும்
கழற்றத்தான் வேண்டியிருக்கிறது
இயல்பாக முகம்கழுவக் குனியும்போது.
*
கதைகள் ஒலிக்காத
காதுகளில் பண்பலைகளின்
பாடல்தானே பரிதாபமாய்
ஒலித்துக்கொண்டிருக்கிறது.
*
சொல்லும் சொல்
வெல்லும் சொல்லாய்
இருக்கவேண்டும்
என்பதில்லை
கொல்லும் சொல்லாய்
இல்லாதிருக்கக்கடவது.
*
உருள்கின்றன
உரையாடலின்போது
 உருண்டைகளாய் உன் சொற்கள்
விற்களெனக் கிளம்புகின்றன
சினம் வந்த சில கணங்களில்
நீ காட்டிக்கொண்டே இருக்கிறாய்
உன்னை உன் உரையால்.
உன் மௌனம் நல்லதாகவே
தெரிகிறது
இப்போது நீ பேசும்போதெல்லாம்.
உபயோகமில்லாச் சொற்கள்
உனக்குள்ளாக இருக்கட்டும்
பொதுவெளியின் பொறுமையை அது
சோதித்துவிடும்.
எனவே நீ பேசாதிருப்பதே
பேச்சுக்குப் பெருமை.




Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்