தீபாவளிக் கவிதை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி



இனிப்புத் திருநாள்
.........................................

அதிகமாய் ஒருநாள் விடுமுறைகிடைக்காமல்
வெகுசிரமத்தோடு வெளியூரில் இருந்து தீபாவளிநாளுக்காய்
விடியவிடிய பயணித்துவந்தது மறந்துபோயிற்று.

திருநீற்று வாசத்துடன்கூடிய ஆச்சியின் பொக்கைவாய்ப் புன்னகை
இஞ்சி மிதக்கும் எண்ணெயைப் பரபரவென்று
தலையில் தேய்க்கும் அம்மாவின் அன்புவிரல்கள்
முந்தையநாள் விழா அவசரத்தில் வாங்கத்தந்த சேலையோடு
நிறைவாய் அடுப்படியில் பலகாரம் தயாரித்துக் கொண்டிருக்கும்
இன்னொரு இதயமான இல்லாள்

புதுத்துணியோடு ஆசீர்வாதம் செய்யும் அப்பா
திரியைக் கிள்ளிக் காதுபொத்திக்  
கைப்பத்தியில் சீனிவெடிபொருத்திச் தூக்கிஎறியும் தங்கை
தலைத்தீபாவளி மகிழ்ச்சியோடு
பட்டுச்சேலை சரசரக்கப் பலகாரங்களோடு
பக்கத்து வீடுகளுக்குப் பயணிக்கும் பாசத்திற்குரிய பேராச்சியக்கா
தீபாவளியன்று மட்டும் கொஞ்சமாய் சிரிக்கும் அண்ணன்
பேரின்பவிலாசில் புதுப்படம் பார்க்கச்
சைக்கிளோடு காத்திருக்கும் சேக்காளி பாலா
வாட்ஸ்அப்பில் வாழ்த்து அனுப்பிவிட்டுத்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குள்
தொலைந்துபோன பழையநண்பர்குழாம்
இப்படி உறவுகளின் உருக்களில் அன்பைப்பூசிக்
கம்பிமத்தாப்பில் கவலை மறக்கவைத்து
புஸ்வானத்தால் புன்னகை பூக்கவைத்து
தரைச்சக்கரத்தால் பூமியோடு கைகுலுக்கவைத்து
இல்லாமையையும் வெளியில் சொல்லாததையும்
மனதிற்குள் மறக்கவைத்து வலியையும் வழியாக்க
அன்புருக்களால் வாசலில் வந்துநிற்கிறது
தெருவிழாவாய் கொண்டாடப்படும்  தீபாவளித் திருவிழா


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்