சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை நடத்திய மாநிலஅளவிலான கவிதைப் பயிலரங்கம்




           மாணவர்கள் கவிதைகள் எழுதவேண்டும்
              பிரபல எழுத்தாளர் திலகபாமா பேச்சு
    சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை (அரசுதவி பெறாப் பாடப்பிரிவுகள்) சார்பில் மாநில அளவிலான கவிதைப் பயிலரங்கம் 04.10.2016 அன்று கல்லூரி உரையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி  தலைமை வகித்துத் தலைமையுரையாற்றினார்.



 தமிழ்த்துறைத் தலைவர்  ச.மகாதேவன்  வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி ஆட்சிக்குழு  உறுப்பினர்கள் கே.ஏ.மீரான் மைதீன், எம்.கே.எம்.முகமதுநாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முகமது நவாப் ஹுசேன், கல்லூரி முதல்வர்    மு. முஹம்மது சாதிக், அரசுதவி பெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பேராசிரியர் ஏ.அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு. மு. சாதிக் அலி பயிலரங்கத்திற்கு வருகை தந்தவர்களை வரவேற்றுப் பேசினார்.

   
சிவகாசி பாரதி இலக்கிய சங்க அமைப்பாளர்  கவிஞர் திலகபாமா  கவிதைப் பயிலரங்கத்தின் முதல் அமர்வைத் தொடங்கிவைத்து “கவிஞர்களும் பாடுபொருளும்” எனும் பொருளில் சிறப்புரையாற்றும்போது  
        
மாணவர்கள் கவிதைகள் எழுதவேண்டும்

 பலருடைய கவிதைகளை வாசிப்பதைவிட, மாணவர்கள் தங்களை வாசிக்கப் பழகிக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் தேர்ந்த கவிதைமொழி உள்ளது. பார்க்கும் காட்சிகள் யாவற்றிலும் கவிதைக்கான கூறுகள் உள்ளன. 

அவற்றை அடையாளம் கண்டு மாணவர்கள் படைப்பிலக்கியங்களாக மாற்றவேண்டும். இன்றைய மாணவர்கள் மகா பாரதியின் வரிகளில் உள்ள ஆழத்தையும்,  அவரது வரிகளுக்கிடையில் மறைந்து கிடக்கும் மௌனத்தையும் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆண், பெண்ணுக்கிடையே யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட இயல்பு வாழ்க்கையே இலக்கியத்திற்குப் போதுமானது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நட்பும், அன்பும், மரியாதையும், ஒத்துழைப்பும் அவசியம்”  என்று பேசினார். 


அரங்கிலேயே பங்கேற்ற மாணவ மாணவியர்களைக் கவிதைகள் எழுதச் சொல்லி அவர்களைக்கொண்டு அக்கவிதைகளை மேடையில் வாசிக்கச் செய்து அவற்றில்  எவையெல்லாம்  கவிதையின் தரத்தை அடைந்தன, எவையெல்லாம் இன்னும் கவிதைகளாக முழுமை பெறவில்லை என்று விளக்கம் கூறி,  கவிதையாகாதவற்றை எப்படிக் கவிதையாக  மாற்றுவது என்றும் விளக்கம் தந்து  அக்கவிதைகளைத் திருத்தம் செய்து மாணவர்களுக்குப் பயிற்சியளித்தார்.

   
இரண்டாம் அமர்வில் கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் கவிஞர் அன்புசிவா “ இக்காலக்கவிதை நவீனமும் புதுமையும்” என்ற தலைப்பில் சங்க இலக்கியம், பாரதியின் கவிதைகள், புதுக்கவிதைகள், நவீன கவிதைகள் என்ற பல தளங்களில் உள்ள கவிதைகளை நயம்பட விளக்கினார்.

  
மூன்றாம் அமர்வில் மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஷப்ரின் முனீர்,   பெண் கவிஞர்களின் உணர்வு வெளிப்பாடுஎன்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

   
இக்கவிதைப் பயிலரங்கத்தில் மாநிலத்தின் பலபகுதிகளிலிருந்து பல்கலைக்கழக, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று  கவிதைப் பயிற்சி பெற்றனர்.   தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அயூப்கான், உதவிப்பேராசிரியர்  அ.சே. சேக்சிந்தா, ஜெ.குமார், வ.மாலிக், இரா. விஜயலஷ்மி,  நா.ஜிதேந்திரன் மற்றும் முதலாமாண்டு தமிழ் இலக்கிய மாணவர்கள் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


பயிலரங்க முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் கல்லூரி முதல்வர்    மு. முஹம்மது சாதிக் அரசுதவி பெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பேராசிரியர் ஏ. அப்துல் காதர் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கினர். தமிழ்த்துறைத் தலைவர் (அரசுதவி பெறாப் பாடப்பிரிவுகள்) முனைவர் ரா.அனுசுயா அவர்கள் நன்றியுரையாற்றினார்.




படத்தில்: சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை (அரசுதவி பெறாப் பாடப்பிரிவுகள்) சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கவிதைப் பயிலரங்கைத் தொடங்கிவைத்துத் தலைமையுரையாற்றும் கல்லூரித் தாளாளர் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி  அருகில் சிவகாசி பாரதி இலக்கிய சங்க அமைப்பாளர்  கவிஞர் திலகபாமா   மற்றும் பலர்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்