“லா.ச.ரா. என்கிற சிந்தனையிலும் பெரியோன்* சௌந்தரமகாதேவன் *




*தி இந்து

வாழ்க்கைக்கு ஆயிரமாயிரம் வரையறைகளைப் படித்திருக்கிறோம்.
லா.ச.ரா.போல் யாரும் எளிமையாய் சொன்னதில்லை , “சில அழகான மக்களைச் சந்திக்கிறோம் அதற்குத்தான் வாழ்க்கை.” என்று அவர் சொன்னது திகைப்பாயிருக்கிறது.

சௌந்தர்யத்தை அந்தரநடையில் தந்த அற்புதக் கலைஞர் லா.ச.ரா.கருப்புமை பூசிய காரிருளில் திடீரென்று பாய்ந்து நம்மைப் பரவசப்படுத்தும் மின்மினிப்பூச்சி போன்றது முன்னுதாரணமற்ற லா.ச.ரா.வின் எழுத்துநடை.
மௌனத்தின் நாவுகளால் தன்படைப்பில் பேசிய மாகலைஞானியும் கூட.வாசகனை உள்ளொளி நோக்கிப் பயணிக்க வைத்தவர்.

என் பிரியமுள்ள சினேகிதனுக்கு,பச்சைக்கனவு,வித்தும் வேரும்,யோகம்,பாற்கடல் அவருடைய அற்புதமான படைப்புகள்.
வாசகனை மயக்கவைத்த “அபிதா” எனும் அவர் குறுநாவலில்,கிறங்கவைக்கும் வர்ணனையில்,”கண்ணைக் கசக்கி இமை சிமிழ் திறந்ததும் கண் கரிப்புடன் திரையும் சுழன்று விழுந்து சித்திரத்திற்குக் கண் திறந்த விழிப்பு”..என்று சொல்லியபடி,”அபிதா,நீ என் காயகல்பம்” என்று அவரது கவிதைநடைக்குள் நுழைந்தவர்கள் இன்னும் வெளியே வரவில்லை..
கதையைக் கவிதையாக்கித் தரும் கலைநுட்பம் லா.ச.ரா.வுக்கு மட்டுமே உரித்தானது.

அவரின் “காயத்ரீ” விர்ரென்று வானம் பாயும் சிம்புட்பறவை.சொற்கள் வாக்கியங்களாய் கைகோர்த்து நின்றுகொண்டு அவர் நினைத்ததை சொல்லப் பேராவல் கொள்ளும் அதிசயம் அவர் படைப்புலகின் தனித்தன்மை.”கடிகாரத்தின் விநாடிகள் ஒன்றன்பின் ஒன்றாய் தம்மைச் சொடுக்கிக் கொண்டு சுவரிலிருந்து புறப்பட்டு இருளோடு கலந்தன.” என்ற லா.ச.ரா.வின் வரிகளில் காலம் கைகட்டி நிற்பதைக் காணமுடிகிறது
.
அவர் படைத்த பாத்திரங்களில் வால்மீகி கல்வெட்டாய் நம் மனதில் இன்னும் நிற்கிறது.பெற்றோரைப் பற்றி அவர் சொன்ன கருத்து இன்னும் மறக்கமுடியா பொன்மொழியாய் அமைகிறது.” நம்மால் முடியாத காரியம் ஒன்றை அவர்கள் செய்கிறார்கள்,அதை அவர்களால்தான் முடியும்.

நம்மைப் பெற்றெடுக்கிறார்கள்” என்று சொன்ன அற்புதமனிதநேயக் கலைஞர் லா.ச.ரா. ஆயிற்று 2016 ஆம் ஆண்டு அக்டோபர் வந்தால் அவர்பிறந்து நூறாண்டுகள் ஆகியிருக்கும்.

அழகை ஆராதித்த அழகியல் படைப்பாளர் லா.ச.ரா.,

“ ஒரு புருவ உயர்த்தல்
தனிஒளி வீசின விழிகளின் மேல்
சட்டெனச் சாளரம் விழுந்த இமைகள்
உதட்டோரத்தில் ஒரு குழிவு
நமக்குக் காரணம் தெரியாது
ஆனால் மயக்கம் காட்டும்
விரல் நுனி முத்திரை
திடீர் பல்லொளியில் விண் ஒளி”

என்று நடைச்சித்திரமாய் எழுத்தை வரைந்த விசித்திரமான எழுத்துஓவியர் லா.ச.ரா.

அவர் ஆனந்தமயமானவர்,அழகின் உபாசகர்.ஒரு கட்டுரையில்
ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியில் வரும் “உன்னுடைய வாக்கைக் கொண்டே அல்லவா உன் ஸ்தோத்திரம் அமைந்தது.” என்ற சொற்றொடரை எடுத்தாள்கிறார்.

சாகித்ய அகாதெமி விருது அவருக்கு 1989 ஆமாண்டு வழங்கப்பட்டது.

அப்போது எழுத்தின் நோக்கம் குறித்து அவர் எழுதிய கட்டுரையில், “அழகிய எண்ணங்களை எண்ணுவதற்கும் எண்ணியதைச் செயல்படுத்துவதற்கு முயலவும்தான் பிறவி.பிறவியே ஒரு அழகிய எண்ணம்தான்.” என்று எழுதினார்.

தவம் செய்யும் தவசீலராய் அவர் எழுத்தாளர்களை நினைத்தார்.
எழுத்தே அவருக்கு அவர் சொன்ன துணிவு.சௌந்தர்யத்தின் தொடக்கமே குடும்பம்தான் என்று லா.ச.ரா.நம்பினார்.
தொடர்ச்சியிலும் தொன்மையிலும் குடும்பத்தின் சௌந்தர்யம் இருக்கிறது என நம்பினார்.எழுத்தின் சொற்களில் இசை ஒளிந்திருப்பதாய் அவர் கருதினார்.

சிக்கு எடுத்து சொற்களை ஒழுங்குபடுத்தினால் அதில் இசைஒழுங்கு வந்துவிட்டதாய் கருதினார்.

உண்மையைத் தேடாத எதுவும் நல்ல படைப்பாக மாறமுடியாது என்பது அவரது தீர்க்கமான முடிவாய் இருந்தது.படைப்பிலும் படிப்பிலும் நேர்த்தியை விரும்பியவர் லா.ச.ரா. “எல்லோருக்கும் வான் ஒன்று,சிந்தா நதியில் ஒரு காயிதக் கப்பல்” என்பது லா.ச.ரா.விடம் எனக்குப்பிடித்த பொன்மொழி.
மனசுக்குத் தனியே சிந்திக்கும் ஆற்றல் உண்டு என அவர் நம்பினார்.

“ நான் விந்தியா
நான் மேரு
நான் வான்
நான் நித்யன்”
பகவான் ரமணரும், ராமகிருஷ்ணபரமஹம்சரும் லா.சரா.வுக்குப் பிடித்தமானவர்கள்.

தன் படைப்புகளில் தத்துவம்விசாரத்திற்கு இடம்தந்தவர் லா.ச.ரா.நான் யார்? என்ற பகவான் ரமணரின் வினாவை உள்வாங்கி
“நீயாவது நானாவது? நான் யார்?
சக்கரம் அறுக்கிறது.
கபாலம் ஏந்துகிறது.
ஓயாத சக்கரம்
நிறையாத காலம்” என்று புரிதலோடு எழுதுகிறார்.


“என் சிந்தனையில் புவனத்தை சிருஷ்டித்தேன். ஆகையால் சிந்தனையிலும் பெரிது நான்.” சொன்ன லா.ச.ரா.அழகை ஆராதித்த அற்புதமான எழுத்தாளர்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்