தினமலர் என் பார்வை: அன்பென்ற மழையிலே நனைவோம்



எப்போது பார்த்தாலும் ஏதோவொரு வெறுமை,பேசும் சொற்களில் எப்போதும் சலிப்பு,யாருமில்லாமல் தனித்துவிடப்பட்டதைப்போன்ற உணர்வு,எதையாவது மனதில் போட்டுக் குழப்பி வருத்தத்தோடு வாழும் வாழ்க்கை..நம்மில் பெரும்பாலோர் இப்படி வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.

 சின்னபலூனுக்கும் ஒருரூபாய் மிட்டாய்க்கும் துள்ளிக்குதிக்கும் குழந்தைகளின் இன்பத்தைக் கண்டபின்னும்கூட நிம்மதி இழந்த மனிதர்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே! வாழ்க்கை ஓடுதளத்தில் வேகமாய் ஓடியும்கூட மேலேற முடியாத வினோத விமானங்களாய் மாறிப்போனது ஏன்? புரிந்துகொள்ள முடியாத புதிராக நம் வாழ்க்கையை மாற்றியது யார்? மாற்ற முடியாதா இந்தவாழ்வின் போக்கை.  “தீதும்நன்றும் பிறர்தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடல் வரி நமக்குத்தான்.

அர்த்தமற்ற மாயஇலட்சியங்களுக்காக வாழ்வைப் பணயம் வைத்தவர்கள்,வாழ்வின் பொருளே பொருளோடு வாழ்வது என்பதற்குப் பதில், பொருள்தேடி ஓடுவது என்று ஓடியவர்கள்,விட்டுக்கொடுக்காமல் எதற்கும் வளைந்து கொடுக்காமல் விடாப்பிடியாக எதையாவது பற்றி நின்றவர்கள் எப்படி நிம்மதியின் சந்நிதியில் அமைதியைக் கொண்டாடி நிற்கமுடியும்?


·         கவலைகளை விட்டுவிடுங்கள்: எல்லாவற்றையும்விட நிம்மதியும் மனஅமைதியும் முக்கியமானதாயிற்றே! மரத்தை அரிக்கும் கரையான்மாதிரி மனத்தை அரிக்கிறது கவலைஎனும் கரையான். நாம் அனுமதிகாதவரை நம்மை யாரும் துன்பப்படுத்திவிட முடியாது. கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்துகொள்வதைப் போலத் தேவையற்ற கவலைகளால் நம்மை நாமே எரித்துக்கொள்கிறோம்.

 ஊழ்வினைக்கும் நம்மைச் சூழ்வினைக்கும் நாமே காரணம். முன்னெடுத்த தவறான முடிவுகள் நம்மை முன்னேறவிடாமல் பின்னிழுத்துச் செல்கின்றன.

·         எதிர்பார்ப்பு வேண்டாம் : எதிர்பார்க்கத் தொடங்கும்போது ஏமாற்றத்திற்கும் தயாராக இருக்கவேண்டும். நாம் விரும்புகிற வகையில் மாற மற்றவர்கள் ஒன்றும் பொம்மைகள் இல்லை என்பதை உணருங்கள்.யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் வாழ்பவர்கள் வாழ்வில் நிம்மதிக்குப் பஞ்சமில்லை.


·         வீண்பயம் கொள்ளற்க: பொருட்காட்சியில் நம் குழந்தைகள் சோப்தண்ணீரில் முக்கி ஊதும்போது வரும் மாயக்குமிழி போன்றதே இந்த நிலையாமை உடைய வாழ்க்கை என்ற உணமையை உணர்ந்து கொண்டால் தொலைக்காட்சியில் ஏதோவொரு மருத்துவர் யாருக்கோ சொல்கிற நோய்க் கூறுகள் உங்களுக்கு இருப்பதாக வீண்கற்பனை செய்து உங்கள் நிகழ்கால நிம்மதியை இழக்கமாட்டீரகள்.அச்சமே மிகக் கொடூரமான நோய் என்று உணருங்கள்.


·         போலி வாழ்க்கை வாழாதீர்கள் : மற்றவர்கள் போற்றவேண்டும்,மற்றவர்களிடம் நல்ல பேர்வாங்க வேண்டும்,ஊர் உலகம் போற்ற வாழவேண்டும் என்ற எண்ணம் நம் நிம்மதியைக் கெடுத்துவிடும்.பிரபலமாய் மாறுவது எளிது ,பிரபலமானபின் அதைத் தக்கவைப்பதற்காக நாம்மையே நாம் பணயம் வைக்க வேண்டிவரும் என்பதை மறவாதீரகள். நம் பலவீனங்களோடும்  நம் முகத்தோடும் இயல்பாய் நாமாக நாம் வாழ்வதே சாலச்சிறந்தது என உணருங்கள்.


·         அன்பு செலுத்துங்கள்:  
 எந்தச் சமயத்தின் வேதமும் பேதம் பார்க்கச் சொல்லவில்லை. திருக்காளத்தி மலையில் சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து ரத்தம் வடிந்தஉடன் அம்பறாத்தூணிலிருந்து அம்பை  எடுத்துத் தன் கண்ணைப் பிடுங்கி அப்பிய கண்ணப்பநாயனாரைப் போல் எதையும் எதிர்பார்க்காமல் அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள். 

*
·         தடைகளைத் தாண்டி வெல்லுங்கள்
ஒருசெயலைச் செய்யும்போதே அதன் வெற்றிதோல்விகளின் வாய்ப்புகளை எதிர்கொள்ளப் பழகுங்கள். பரந்தவானம் குறித்த பயமிருந்தால் பறத்தல் குறித்து நினைத்துப் பார்க்க முடியுமா பறவைகளால்? எட்டாவது மாதத்தில் எட்டடிவைத்து நடக்கத் தொடங்கும் நம் வீட்டு சிறுகுழந்தைகள் எழுச்சியோடு நடப்பதற்கு எத்தனை அடிகள் படவேண்டியிருக்கிறது. சிற்றுருளி மகத்தான மலையைக் கூடக் காலப்போக்கில் சிறுகற்களாய் மாற்றிவிடுகிறது.சிறுதோல்விகள் மா ரணம் தந்து மரணத்தில் கொண்டு சேர்த்துவிடுகின்றன. உள்ளிருந்து உருக்கெடுக்கும் அச்சஉணர்வை விட்டுவிட வேண்டும். கவலை வலைகளில் சிக்குண்டு பின்னிக்கிடக்கும் நமக்கு ஆறுதலும் தேறுதலும் யார் தருவார்? விழுதலின் விழுது எழுதலில்தான் உள்ளது.தோல்வியை ஒருபோதும் அவமானமாகக் கருதவேண்டாம். பள்ளிக்கூடத்திலிருந்து மூளை வளர்ச்சிக் குறைந்த மாணவன் என்று வெளியே அனுப்பப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்குமளவு மாபெரும் விஞ்ஞானியாய் எப்படி மாறினார்.வென்றால் வெற்றிக்கோப்பையைப் பெற்றுக்கொள்வதும் தோற்றால் ஏன் தோற்றோம் எனக் கற்றுக்கொள்வதும் நிம்மதிக்கு வழிவகுக்கும்.

·                உறவுகளைப் பேணுங்கள்
உறவுகள் உன்னதமானவை என்று உணருங்கள்.உறவுகளுக்கு மத்தியில் வாழும் வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை. எல்லோரிடமும் குறைகண்டுபிடித்துக் கொண்டேஇருந்தால் யாரும் நம்மோடு இருக்கப்போவதில்லை. உலகமயமாக்கலின் விளைவால் உலகம் முழுக்கப் பயணிக்கத் தொடங்கிவிட்ட நமக்கு “ யாதும் ஊரே,யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் சங்கப்பாடல் வரி, கண்டம் கடந்தும் அனைவரையும் அன்புபாராட்டக் கற்றுத் தருகிறது. “அன்பிற் சிறந்த தவமில்லை:” என்று பாரதியார் கூறுவதைப் போன்று அன்பைத் தவமாகக் கொள்வோம்.அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனைய நாமும் நனைவோம்.நிம்மதியின் சந்நிதியில் நாம் மனிதப்பூக்களாவோம்.
 
·            நடந்ததை மறந்திடுங்கள்:
 நடந்த நிகழ்வுகளையே நினைத்துக் கொண்டிருப்பதில் பொருளில்லை.இதுவும் கடந்துபோகும்,எதுவும் கடந்துபோகும் என்று உணருங்கள்.வெற்றி வரும்போது மமதையும் தோல்வி வரும்போது துடித்துப்போவதும் சரியானதன்று.தயரதன் பட்டாபிஷேகம் என்று சொன்னபோதும், கைகேயி மரவுரி தரித்துக் கானகம் போ என்று சொன்னபோதும் செந்தாமரை போன்ற முகத்தோடு ஒன்றாகக் கருதிய இராமபிரானின் சமநிலை அவருக்குப் பெருமை தேடித்தந்தது.மலை குலைந்தாலும் நிலை குலையா மனமிருந்தால் எதுவும் நம்மை அண்டாது.எனவே நடந்தததை நினைத்து நடுங்குவதும் வரப்போவதை நினைத்து வருந்துவதும் அவசியமற்றது.

·         வேகமாய் முடிவெடுங்கள்: 
வேகமும் விவேகமும் உடையவர்களை இந்த வாழ்வு கொண்டாடுகிறது.தயக்கத்தைத் தள்ளி நிறுத்துங்கள்,எதையும் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் தீர்க்கமாய் ஆய்ந்து வேகமாய் முடிவெடுங்கள்.எதையும் துணிச்சலாய் எதிர்கொள்ளுங்கள்.
·         சொல்லாண்டு வாழ்க:  நம் நிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம் நம் நாக்குதான் என்பதை உணர்ந்து சொற்களைத் தேவையான இடங்களில் பயன்படுத்தி தேவையற்ற இடங்களில் மௌனம் சாதித்து சொல்லாண்டு வாழ்ந்தால் நிம்மதியாகப் பல்லாண்டு வாழலாம் என்று உணருங்கள்.
·         இறைநம்பிக்கை:  நமக்கு எந்த நேரத்தில் எதைத் தரவேண்டும் என்பது நம்மைப் படைத்து ஒவ்வொரு நிமிடத்திலும் வழிநடத்திக்கொண்டிருக்கும் இறைவன் மிகநன்றாகவே அறிவான் என்பதைப் புரிந்துகொண்டு உங்களை அப்பரம்பொருளிடம் ஒப்படையுங்கள்.அவனருளாலே அவன் தாள்பணிந்திடுங்கள்.நிம்மதி தருவது அவன் சன்னிதி என்று உணருங்கள்.


 முனைவர் சௌந்தர மகாதேவன்,9952140275

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்