இவன் இழந்தது:முனைவர் ச.மகாதேவன் கவிதை





பசலிப் பழங்களை நகங்களுக்கிடையே
நசுக்கி நகச்சாயம் போட்டதுண்டு.

பூவரசம் பூவின் அழகைக் கண்டு
பூவரச இலையைச் சுற்றி
இளையராசாவாய் இசையெழுப்பியதுண்டு

எலியின் வாலில் கயிறுகட்டி
அது போன திசையெலாம் கூடப்
போனதுண்டு

பாவம் செய்ததாய் ஓணானைப் பிடித்து
மூக்குப் பொடி காரப்பொடி போட்டு
சித்திரவதை செய்து கொன்றதுண்டு.

கவுட்டா புள்ளோடு காகக்குஞ்சைஅடித்துக்
கவர்ந்து வந்ததுண்டு

சிகரெட் அட்டைகளைப் பொறுக்கக்
கடைகடையாய் அலைந்ததுண்டு.

வாடகை சைக்கிள் எடுத்து
விடுமுறை நாளில் ஓட்டி
இருகரம் தூக்கிச் சாகம்
செய்ததுண்டு.

கோலிக்காய் ஜெயித்துப்
பானை நிறையச் சேர்த்ததுண்டு

தோற்றவன் பம்பரத்தை ஆக்கர்
வைக்கக் கூரான ஆணி தேடி அலைந்ததுண்டு

இதில் ஒன்று கூடச்செய்யாமல்
இன்று என் மகன் மவுனமாய்
கணினியில் கார்ப் பந்தயம் பார்த்துக்கொண்டிருக்கிறான்
என்ன செய்ய?

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்