முகநூல் நண்பர்கள்






முகநூல் சுவரசியமாகத்தான் உள்ளது.முகநூல் உலகிற்குள் நுழைந்து சரியாக நாளையோடு ஓராண்டு ஆகிறது.

புதுப்புனலிலும்,கணையாழியிலும்,ரசனையிலும்,ஆனந்தவிகடனிலும்,அமிர்தாவிலும் சில கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
ஆனால் தடையேதுமற்ற எழுத்துக்களமாய் கடந்த ஓராண்டு உணர்ந்தேன்.

ஒளியின் உளியால் இளம்காலைப் பொழுதைச் செதுக்கச் சூரியன் தினமும் வருகிறமாதிரி முகநூல் பதிவுகள் தினம்தினம் எனைச்செதுக்கியதை மறுக்கஇயலாது.

சொல்லெனும் வில் பூட்டி நடக்கும் சொல்லமர்களையும் காணமுடிந்தது.குத்திக்கிழிக்கிற கத்தியாய் இணையத்தை மாற்றியவர்களைக் கண்டுவருந்த முடிந்தது.

ஆயிரம் நூல்களில் காணக்கிடைக்காத அறிவுக்களஞ்சியம் தினமும் என் கணினித் திரைகளில் கொட்டிக்கிடந்தது.

ஏ.பி.ஜே.அப்துல்கலாம்,வண்ணதாசன்,திலகவதி,பாலகுமாரன்,கலாப்ரியா,பாரதிமணி,இசைக்கவி ரமணன்,மாலன்,மயில்சாமி அண்ணாத்துரை,நாறும்பூநாதன்,பொன்னீலன்,பேராசிரியர் நா.இராமச்சந்திரன்,ஷாஜகான்,மகுடேஸ்வரன்,சுகா,பத்ரி,பா.ராகவன்,நடராஜ் ராமச்சந்திரன், போன்றோரின் எழுத்துக்களை வாசிக்க நேசிக்க முடிந்தது.

தேனி சுப்ரமணியன் திருநெல்வேலி வந்தபோது வீட்டிற்கு வந்தார்.மகிழ்வாய் இருந்தது.என் எழுத்துகளைப் படித்துவிட்டு நாறும்பூநாதன் பாராட்டியிருக்கிறார்.

பதினைத்து ஆண்டுகளுக்கு முன் என்னிடம் படித்த அருமையான மாணவர்களை முகநூல் எனக்குத் திரும்பத்தந்ததது.உலகெல்லாம் சுற்றிச் சாதனை செய்யும் அவர்களின் தற்போதைய வளர்ச்சி குறித்து எனக்குப் பெருமிதம் தந்தது.

அரசியல் குறித்தும்,அறிவியல் குறித்தும்,ஆன்மிகம் குறித்தும்,கலை குறித்தும் இலக்கியம் குறித்தும்,ஊடகம் குறித்தும் நான் இணைந்துள்ள 109 குழுக்களிலிருந்து எண்ணற்ற தகவல்கள் கிடைத்தன.

இந்த ஓராண்டு மட்டும் நானூறு கவிதைகளுக்கு மேல் நான் படைப்பதற்கு ஆக்கமும் ஊக்கமும் முகநூல் நண்பர்கள் அளித்தனர்.பிடிப்பதை விரும்புவதும்,சிலவற்றை மற்றவர்களுக்குப் பகிர்வதும்தானே வாழ்க்கை.எனக்குப்பிடித்ததை எல்லோருக்கும் உரியதாக முகநூல் மாற்றியது.

வண்ணதாசன் முகநூலில் எழுதிய கவிதைகள் குறித்து ‘’மேலும்’’ அமைப்பின் சார்பில் நெல்லை ஜானகிராம் உணவகத்தில் கவிதைவாசிப்பு நிகழ்ச்சி நடத்தியதும் அக் கவிதைகளை அவர் ‘’பூனை எழுதிய அறை’’ எனும் நூலக சந்தியா பதிப்பகம் மூலம் தந்ததும் மனம் நெகிழ்ந்த நிகழ்வுகள்.

பரபரப்பின் படிகளில் நம் காலைப்பொழுதுகள் கால்ஊன்றி நின்று கொண்டிருக்கும் நிலையில் இளைப்பாற ஆலமரமாய் முகநூல் அமைந்து கொண்டிருக்கிறது.முகநூல் நண்பர்கள் என் வலைப்பூக்களை வாசிக்க வாய்ப்பாக அமைந்தது.

கொலை,வன்புணர்வு,சாதிய மத வன்முறைகள்,திரைப்படத் துணுக்குகள்,அரசியல் அறிக்கைகள் இவற்றை நாளிதழ்களிலும் ,வாரஇதழ்களிலும் பார்த்துச் சலித்துப்போன வாசகர்களுக்கு முகநூல் மாற்று ஊடகம்தான்.ஆனால் சமீபகாலமாக முகநூலும் அதே போன்ற சாயலில் மாற்றம் பெறுவதைக் காணச்சகிக்கவில்லை.


என் கவிதைகளைத் தொடர்ந்து ரசித்துவரும் இசைக்கவி ரமணன் சென்னை தொலைக்காட்சியின் “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்”எனும் நிகழ்ச்சிக்கு முகநூலின் செய்திப்பெட்டிமூலம் தொடர்புகொண்டார்.அந்தநாள் அருமையான நாள்.சென்னை தொலைக்காட்சி நிலையத்திற்குள் நுழைகிறேன்.ஒப்பனை அறைக்குள் நண்பர் மகுடேஸ்வரன்,அடுத்து சேலம் உருக்காலை பாலா,அடுத்து சசிகலாபாபு,சிரித்தபடி இசைக்கவி ரமணன் யாவரும் முகநூல் நண்பர்கள்.
அடுத்தஆண்டும் அன்பின் ஆண்டாகட்டும்.

‘’நான் நீ
சொல்லறு
நானிலம்
நமதாகும்’’


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்