திருநெல்வேலி.சவுந்தர மகாதேவன் கவிதைகள்



லாடம்

நடக்கச் செருப்பு மாட்டக்
கால்களை நகர்த்தினேன்

கால்களுக்குக் கீழ் திப்பல் திப்பலாய் குருதித்திட்டு!
நிழலாடுகிறது மனதின் மர்மப்பகுதியில் ரணம்.

சமாதானபுரத்துப் போக்குவரத்துப் பணிமனைமுன்
காளையின் கால்களைச் சுருக்கிடுகின்றன
அவனது கறுப்புக் கரங்கள்
இன்னபிற கரங்கள் அதைச் சாய்க்க.

பக்கவாட்டில் கால்களைக்குவித்துச்
சாய்ந்து கிடக்கிறது அக்கம்பீரக்காளை!

தோல்பையைத் துழாவி அக்கரம்
லாடத்தையும் கூரிய ஆணிகளையும்
எடுக்கிறது
கால் குளம்பில் வைத்துச் சுத்தியால்
அடிக்கிறது
எஞ்சிய இடங்களைக் கூருளி
செதுக்கித் தள்ளுகிறது.

வாடிவாசலில் சீறிப்பாய்ந்த அந்தச்சீவனை
அதற்குமேல் பார்க்கச் சகிக்கவில்லை.

என் பாதத்திற்குக் கீழும் லாடங்கள்
ஆணிகள்அடிகள்
செருப் பணியத் தோன்றவில்லை
வெற்றுக் காலோடு நடந்தேன்
வலித்தது
ஒவ்வோர் அடியும்.
- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

பொறுக்கி எடுக்காதீர்கள்

கவிதைத் திறனாய்வுக்காகப்
பொறுக்கி எடுக்கப்படுகின்றன
புரிந்த சில வரிகள்!

பிரேதங்களின் மீதும்
குரோதங்கள் காட்டும்
உங்களால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?
கவிதையின் உள்பொருளை
ஆங்காங்கே
அடிக்கோடிடாதீர்கள்.
அடுத்த வரிகள் வருத்தப்படும்.

அருமை எனச் சொல்லாதீர்கள்
உங்களுக்கு அர்த்தமான வரிகளை மட்டும்

என் முன்பின் வரிகளை
முக்கியமற்றதாக்க உங்கள்
மூளைத் திறனால் தயவு செய்து
முயலாதீர்கள்

உங்களால் அழுத்தமிட்டுக் காட்டப்படும்
வசதியானவரிகளால்
மற்ற வரிகளுக்கு வருத்தம்!
வார்த்தைகளுக்குள் ஏன்
வருத்தங்களை உண்டாக்குகிறீர்கள்?

கவிதைகள்
மொழித் தண்டவாளங்களில்
வழுக்கியோடும் வரிச் சக்கரங்கள்
உங்கள் தொடர்ச்சியற்ற
இரும்புத் துண்டுகள்
கவிதைத் தொடர் வண்டியைக்
கட்டாயம் கவிழ்க்கும்

சரி! ஒன்று கேட்கிறேன்
கடைசி வரிகளில் . . .
சிரித்து எச்சில் வடிக்கும்உங்கள்
குழந்தையின் கன்னத்தை மட்டும்
தனியே அறுத்தெடுத்து
அழகெனச் சொல்லும்
துணிவுண்டா உங்களுக்கு?
- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.
எலிமையோடு வாழ்

எலிகளின்
சுரண்டல்கள் சுதந்திரமானவை!

இப்போதெல்லாம் தேங்காய்சில்லுகளைத் தேடி
எங்களூர் எலிகள் போவதேயில்லை
தப்பித் தவறிப் பொறிக்குள் புகுந்துவிட்டாலும்
அதன் முன் கம்பிகளைக் கடித்துக்குதறி
வெளியேறிவிடும் சமார்த்தியமும்
அவற்றுக்கு உண்டு.

இருட்டு வந்தால் இன்பமாய் அலைவதும்
வெளிச்சம் வந்தால்
குளிர் பதனப் பெட்டிக்குப் பின்
புகுந்து கொள்ளவும் அவற்றால் முடிகிறது

அதன் அட்டகாசம் அதிகம்
அபிதான சிந்தாமணியைக் டித்துக்
குதறியிருக்கிறது காகிதக் குப்பையாக..

பொறியில் மாட்டிய எலியை
இரும்பு வாளித் தண்ணீரில்
மூழ்கடித்துக் கொன்ற மகத்தான
மான்மியம் அப்பாவினுடையது.

வாய்கட்டிய கோணிக்குள்
பொறியின் மரக்கதவைத் திறந்துவிட்டு
விறகுக் கட்டையால்
எலியை அடித்துக் கொல்வார்
பட்டுக்கோட்டை மாமா

சுரண்டித் தின்னும் எலிகளுக்கு மத்தியில்
இற்றுப்போன மரச்சட்டங்களால் ஆன புராதனகாலத்து
எலிப்பொறி மட்டும் என்ன செய்துவிட முடியும்?

மாற்றுக்காய்
மருந்து வாங்கி வைத்தாலும்
தின்று செரித்து விட்டு
மறுநாளே அட்டகாசம் செய்கிறது

பூனைகள் புறமுதுகிட்டு ஓடுகிற வரைக்கும்
எலிகள் தானே எஜமானார்கள்!


என்ன செய்ய?
எரிச்சலிருந்தாலும்
எலிகளோடு வாழப் பழகிக்
கொள்ள வேண்டியதுதான்!

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

கம்பிக்கோப்பு...

முப்பது வருடங்களுக்கு முற்பட்ட
கம்பிக் கடிதக் கோப்பு
வெள்ளையடிக்கும் போது
தட்டோடி அறையில்
தற்செயலாய் கிடைத்தது

பஞ்சுமிட்டாய் நிற வண்ணம் பூசிய
மரக்கட்டை வட்டவில்லை
அதன்மையப் புள்ளியில்
தாத்தாவின் வளைந்த கைப்பிடியைப் போல
கம்பிக் குத்தல்

வரலாற்றை வாங்கியபடி
பழுப்பேறிய கடித உறைகள்
பதினைந்து பைசாக் கார்டுகள்

காலத்தைத் துளையிட்டுக்
கம்பியில் மாட்டிவைத்ததாய்
அடுக்கடுக்காய்
எங்கள் குடும்ப வரலாறுகள்
நாட்பதிவுகள் கடிதங்களாகக்
காலம் கடந்த பின்னும்இன்னும்
காலமாகாமல் கம்பீரமாய்

சின்னவயதில் நயினாத்தாத்தா கோபாலசாமி கோயில்
கோபுரத்திலேறிக் கோபித்துக் கொண்டு
குதித்ததில் அவரது சுண்டு விரல்
முறிந்ததைச்
சாரிப்பாட்டியின்
அறுபத்து மூன்றாம் வருடக்கடிதம் விளக்கியது

தட்டப்பாறையில்
கோயில் பூசை செய்யப்போன
பெரியதாத்தா
அபிஷேகம் செய்யும் அவசரத்தில்
தண்ணீர்க்குடத்தைப் போட்டு
பிள்ளையார் மண்டையை
உடைத்து விட்டு
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிவந்ததாய்
அடுத்த கடிதம்

இதோ படித்துக் கொண்டிருக்கிறேன்
அந்த அறுபதாண்டு
அபூர்வ கடித வரலாறுகளை
இந்தக் கவிதையை
நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்
இப்போதும் கூட..

அறுபத்து மூன்றாம் வருடத்து
அந்த எழுத்துக்கள் மெல்லஎழுந்து
உயிரோடு உருண்டு
இதோ இந்த வரிகளுக்கான
வலிமையைத் தருகின்றன.

அது சரி
உங்களின் எந்தக் கணினி சேர்த்து வைத்திருக்கிறது?
அறுபது ஆண்டிற்கு
முற்போன என்
ஆதி முன்னோரின்
அழகான வாழ்க்கையை?

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

காகங்களும் பாவங்களும்

இப்போதெல்லாம்
மொட்டை மாடியில்
காகங்களைக் கண்டால்
பாவமாக இருக்கிறது.

அப்போதெல்லாம்
அம்மா அடுக்களையில்
சமையல் முடித்ததை
அவளது காக அழைப்பு
ஊருக்கு உணர்த்தும்.

போன புதன்கிழமை
நயினா தாத்தாவின் தெவசம் முடித்து
வாத்தியார் தந்த பிண்ட உருண்டையைத்
தொன்னையில் வைத்து
மொட்டை மாடியில்
காகத்தைச் சப்தமாய் கூப்பிட்டேன்.

சாதத்தைச் சாப்பிடப்
பத்துப் பதினைந்து காகங்கள்
பாய்ந்து
உடனே உண்ண வந்தது
நல்ல சகுனமென்று சொன்ன வாத்தியார்
ஒரு வருடமாய்
தாத்தாவுக்குத் தாங்காத பசியென்றார்
கடும்பசி
தாத்தாவுக்கு மட்டும்தானா?
கடும் பசி காகத்திற்கும் தானே!

அது சரி
அரைக் கரண்டிச் சோற்றில்தான்
மிச்சப்படுத்தப் போகிறோமா
நம் வீட்டுக் கடன்களை?

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

தொடர்பு எல்லைக்கு வெளியே…

நீங்கள் பிரபலமானபின்
இப்போதெல்லாம்
உங்கள் அலைபேசி
அடிக்கடி அழைக்கிறது
பிடித்த மனிதரின் அழைப்பென்றால்
பெரிய சொற்களைப் பொறுக்கி எடுத்துப்பேசிப்
பேருரை ஆற்றுகிறீர்கள்!

வங்கிச் சேவை முதல்
இணையத் தேவை வரை
யாவற்றையும் உங்கள்
அலைபேசியோடு
இணைத்து வீட்டீர்கள்

உங்களுடன்
இணையாமலிருப்பது
இருபதாவது முறையேனும்
நீங்கள் தெரியாமல் எடுப்பீர்கள் என்ற
தளராத நம்பிக்கையோடு
மீண்டும் மீண்டும் முயல்கிறானே
அவனோடு மட்டும்தான்…

காகிதத் கப்பலேறிக்
காலக்கடலைக் கடப்பதாய்
கவிதை வாசிக்கும் நீங்கள்
அவனது கருத்தைக் கேட்பதற்குமுன்பே
அநியாயமாக எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்?

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.











Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்