சவுந்தர மகாதேவன் முகநூல் கவிதைகள்



லஞ்சம் தவிர் !

ஊழலில் உழல்
லஞ்சத்தில் தஞ்சமடை
யாவருக்கும் விலை வை
எதிர்த்தால்
எதிலாவது சிக்க வை
நோட்டுக்களை நீட்டு
பணத்தாசை காட்டு
சத்தியம்
சத்தமற்றுச் சாகட்டும்
வாயால் மெய்யை வெல்
நீதிக்கு வரட்டும் வியாதி
ஆகவே
என்றெல்லாம் எனக்குச் சொன்னார்கள்
இப்போது ஒன்றே ஒன்று மட்டும்தான்
என்னால் சொல்ல முடியும்
நீயேனும்
லஞ்சம் தவிர்!

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.


ஆள் தேடுகிறோம்
 
எங்களுர்
திருநெல்வேலி
கடைவீதி முழுக்கக்
கலர் கலராய் அல்வாக்கள்
மஸ்கோத் அல்வா முதல்
சேரன்மகாதேவி
கேரட் அல்வா வரை
அத்தனையும் தயார் . . .
கொடுக்கத்தான்
ஆள் வேண்டும்.

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.


நடுங்கு கற்கள்

பயணப் பொழுதுகளின்
சன்னலோரக் காட்சிகளில்
இப்போதெல்லாம்
துயரம் மட்டுமே
துண்டு துண்டாய்

நான்கு வழிப் பாதைகளின்
நடைபாதைக் கல்லறைகளாய்
வாடிச் செத்த வயற்காடுகள்

மண்ணைக் கொன்று
அதன் உயிரைத் தின்ற நினைவாய்
நடு நடுவே
புறநானூறு போற்றாத
நடுங்குகற்கள்

வாரலை வாரலை
என்பது போல்
மறித்துக் கைகாட்டும்
வண்ணக் கொடிகள்

சன்னலோரம்
அமர்ந்தாலும்இனி
பக்கவாட்டில்
பார்க்காமலிருப்பதைத்தவிர
வேறு வழியில்லை

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.


கொள்ளிக் கட்டையை எடுத்து. . .

ஓட்டுப் பெட்டிக்குள்
சீட்டை நுழைக்கும் போது
காரணமில்லாமல்
இரு பழமொழிகள்
நினைவுக்கு வந்தன்.

யானை தன் தலையில்
தானே
மண்ணை அள்ளிப்
போட்டுக் கொள்ளுமாம்!

கொள்ளிக் கட்டையை
எடுத்துத் தலையில்
சொறிந்து கொள்ளப் போகிறோமாம்!

உங்கள் நினைவிலும்
ஏதேனும் வந்திருக்குமே!

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.


காலண்டர் கடிதம்

காலத்தைக் கிழித்துப் போடும்
காலண்டர்கள்
எங்களுக்குப்
பேதங்கள் பெரிதில்லை.

பெரியார் படத்தையும்
பெரிய பாளையத்தம்மன் படத்தையும்
நாங்கள் எளிதாக எங்கள் மேல்
ஏற்றுக் கொள்கிறோம்.

இன்னும் சொல்லப் போனால்
ஈரோட்டுப் பெரியாருக்குக் கீழே
நல்லநேரத்தை எங்கள்
தாள்களின் மீதேற்றித் தைரியமாகத்தர முடிகிறது.

சுதந்திர தினங்களைக் காலத்தாள்களால்
கட்டமிட்டுச் சொல்லும் ங்களை
ஆண்டுதோறும் ணிகள் அறைந்து
அட்டையோடு அடிமைப்படுத்தி விடுகிறார்கள்
எங்களில் சில கம்பிகளால்
கட்டப்பட்டு காயப்படுத்தப்படுகிறோம்

எங்களின் மறுபக்கம்
உங்களுக்கு மகிழ்ச்சி தருவது!
விதவிதமான விடுமுறை நாட்களை
அப்புறம்தானே காட்டியுள்ளோம்

இப்போது
எங்களுக்குள் இருக்கும்
ஒரே கேள்வி
இலவசமாய் கிடைத்ததென்று
அறைக்கு இரண்டு மாட்டியுள்ளீர்களே!
பலவற்றில்
தேதிகள் கிழிக்கப்படவே இல்லை.
கிழிபடப்போவது
உங்களின் மிச்சக் காலங்களா?

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.








Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்