சௌந்தரமகாதேவன் கவிதைகள்



             

யாவும் சாவும்

அவனுக்கு எந்த உணர்வுகளையும்
வெளிக் காட்டத் தெரியாது.
மேசை மீது கிடத்தப்படும்  உடல்கள்,
நசுங்கிய, , உப்பிய உடல்கள்
எல்லாவற்றையும் அவன்
ஒன்று போலவே பாவிப்பான்

வாசல் ஓலங்களும்,
விபத்தின் கோலங்களையும்
அவன் ஒரு பொருட்டாய் மதித்ததில்லை

உறுப்புகளை மருத்துவர் அறுத்தெடுத்து
அறுத்தெடுத்துத் தரக் குதப்பிய
வெற்றிலையோடு அவன்
திரவத்தில் மிதக்க வைப்பான்

பாயில் சுருட்டி அவன்
அமரர் ஊர்தியில் ஏற்றும் போதும்
கலங்கியதில்லை.

பிறந்த யாவும் சாவும் என்ற
பேருண்மையை உணர்ந்த
பிறவி ஞானியவன்

உயரத்திலிருப்பவன்

அரைசாண் வயிற்றுக்காக அவன்
அந்தரத்தில் செல்பேசிக் கோபுரம்
கட்டிக் கொண்டிருக்கிறான்.
அவன் வயிறு வானத்திற்கருகே
சுருங்கிக் கிடக்கிறது.

உயரே ஏற ஏற அதளபாதாளம் நோக்கி
இறங்குகிறது அவன் உடலும் குடலும்

பள்ளத்தில் கிடக்கும் அவர்கள் வாழ்வதற்காக
சாவின் உயரத்தைச் சந்தித்துத் திரும்புகிறார்கள்.

செல்பேசிக் கோபுரங்களில்,
காற்றாலை மின் விசிறிகளில்,
தொலைக்காட்சிக் கோபுரங்களில்
இருப்போரை இனி அண்ணாந்து பார்க்காதீர்கள்.

உயரத்திலிருப்பவனெல்லாம்
உயாந்திருப்பவனில்லை
என்ற உண்மை புரியும்வரை.

சௌந்தரமகாதேவன்
திருநெல்வேலி

திறந்தே இருக்கிறோம்

என் காயங்களும் நானும்
திறந்தே இருக்கிறோம்
என்  ரணங்களை நான்
கட்டுப் போடாததால்
நாவினால் சுட்ட வடுக்கள்
நாலைந்தை நீங்களும்
கண் கூடாய்ப் பாக்கலாம்.
வலியறியும் விரல்களை
வருடிக் கொடுக்கிற விரல்களை
எதிர்பார்த்து நாங்கள்
தினமும் திறந்தே இருக்கிறோம்.
மனதும் மனித நேயமும்
இருந்தால்
என் ரணங்கள் உங்களால்
குணமாகலாம்.


தனித்த மனம்

பச்சை அட்டை வாங்கிப்
பக்கத்து நாட்டுக்குக்
கூண்டோடு பெயர்ந்து போய்விட்ட
என் மகன் குறித்தோ

பக்கத்துத் தெருவிலிருந்த போதும்
பார்க்கக்கூட வராத
என் மகள் குறித்தோ
இப்போது வருத்தமேதுமில்லை.

வேளா வேளைக்கு வரும்
என்ஜியோ காலனி எடுப்புச்
சாப்பாட்டுக்காரனும்
மாலையில் கூடிப் பேசும்
ராமர்கோவில் நண்பர் குழாமுமே
பின்னாளில் சாசுவதம் என்று
தொந்திருந்தால்
திருமண நாளன்று
திருப்பதி போயிருப்பேன்.


மரணித்த மரம்

முள் மரங்களை அரைத்துக்
காகிதம் செய்துவிட முடிகிறது.
கல் மரங்களைக் காட்சிப்படுத்திக்
காசு சம்பாதித்துவிட முடிகிறது.
சொல் மரங்களை அடுக்கி
ஆட்சியைப் பிடித்துவிட முடிகிறது
இருக்கிற இரண்டொரு
மரங்களையும் இழந்து.

சுவை

பால்கோவாவை விடப்
பல மடங்கு
சுவையாயிருக்கிறது
அதைக் கட்டித் தந்த
காகிதம்.

கணநேரக் கண்கள்

பயணப் பொழுதுகளில்
பாடல்களோடு வந்துவிடுகிறார்கள்.
பார்வையற்றவர்கள்.
கையிலேந்தும் அலுமினியத்தட்டில் விழும்
காசுகளின் ஓசை இசையாய் மாறி
இனிக்கிறது அவர்களுக்கு.
வலிகளை ஒலிகளுக்குள் மறைக்கின்றன
அவாகளின் நாவுகள்.
கரங்களைத் தட்டில் தட்டிச்
சுரங்களை எழுப்புகிற அவர்கள்
இசையால் பார்க்கிறார்கள்
இதயமுள்ளவர்களை மட்டும்.

நெரிசல்


விழாப் பொழுதுகளில்
முன்பதிவற்ற பெட்டிகளில்
பிதுங்கும் நெரிசலாய் வாழ்வில்
பல நேரம் பிதுங்குகிறோம்
சில நேரம் ஒதுங்குகிறோம்.

தேடல்

அகாலப் பொழுதில் நடந்த
ரயில் விபத்தில்
கண்ணில் அடிபட்ட பயணியும்
தேடுகிறான்
இறந்த பயணியின்
இருப்பு நகையை

பெருமொழி

பிறந்த குழந்தையிடம்
யாரால் பேசமுடியும்?
பேச்சறியாப்
பெருமொழி
அறிந்தவளைத் தவிர

உலக அதிசயம்

பளிங்கைச் செதுக்கப்
பலகைகள் இருக்கும்போது
உலக அதிசயங்கள்
உருப்பெறுவதில்
என்ன அதிசயமிருக்கப் போகிறது?

உயிரோட்டம்
அதிகாலை வேளையிலும்
வெள்ளரிப் பிஞ்சோடு சன்னல்கண்ணாடி
தட்டும் சாத்தூர் வியாபாரி
இரண்டு கடலைமிட்டாய்ப் பாக்கெட்களை
விற்ற மகிழ்வில் ஒடும்பேருந்தில்
ஓடிஇறங்கும் கோவில்பட்டி இளைஞன்
கடம்பூர் போளியோடு
கடந்துபோகிற கூடைப் பாட்டி
இவர்களால்தான் பயணம்
உறக்கத்தைக் கலைத்து
உலகத்தைப் பார்க்கிறது.

ஆறுவது

ஆற்றுவதற்கு அநேக
நிகழ்வுகள் மனதில்
ரணமாயிருக்க
காலை எழுந்தவுடன்
காபி ஆற்றிக் கொண்டிருக்கிறோம்
கையில் டபராவுடன்.

கற்க காசுடன்

அகர முதல எழுத்தெல்லாம்
அரை லட்சம் கட்டிய
குழந்தைகளுக்கே.

வேறல்ல

கூண்டுகளும்
கூடுகளும் ஒன்று தான்
பறக்க நினைக்காதவனுக்கு.

ஒன்றே

இருளும் ஒளியும்
முரண்களல்ல
ஒளியின் நித்திரை
இருள்
இருளின் விழிப்பு
ஒளி

பி.ரி...வினை

கடந்து செல்கையில்
கண்ணீர் வடிக்கிறது
உடன் பிறப்புகளுக்காய்
உள்ளுக்குள்
பிரிக்கப்பட்ட
வளவு வீடு

சித்திரச் சிலந்தி

எல்லா நூலாம் படைகளும்
சித்திரச் சிலந்தி வரைந்த
எச்சில் வலையோவியங்கள்.

எட்டா அதிசயம்

ஆனித் திருவிழா என்பது
திருநெல்வேலிக்காரர்களின் அகராதியில்
ஆனைத் திருவிழா என்பதுதான்
லட்சம் பேர் தேரிழுக்கத் தேர்புறப்படும் முன்
பதட்டமேதுமின்றிப் பட்டாடையோடும்
மணியோசையோடும் மாவுத்தனோடு
காந்திமதி நடப்பதே பேரழகுதான்.

வார்ப்பில் சமைத்த பெருங்கவளத்தை
அதன் வாயில் அவன் உருட்டி
உட்தள்ளும் பேரானந்தம் சொல்லிமாளாது.

தென்னங்கீற்றோடு ஈத்தங்குருத்தும்
அதன் பின்னால் மாட்டுவண்டி போகிறதென்றால்
அவள் வெளியூர் கிளம்பி விட்டாள் என்றுபொருள்.

பீடாதிபதிகள் வரும் போது
ஒற்றைக் காலை ஆட்டிக் கொண்டு
பூர்ண கும்பமரியாதைக்காய்
அவள் நிற்கிற அழகு சொல்லி மாளாது.

எல்லா ராஜகோலங்களையும் விடக்
குறுக்குத்துறை முருகன் கோயிலருகே
முட்டளவு தண்ணீரில் நின்று கொண்டு
துதிக்கையால் நதிநீரை
வீசிநீராடல் ரொம்பப் பிடிக்கும் எனக்கு.

யானை....


கறுமைநிறத்துக் கால அதிசயம்
புவியின் எட்டாவது அதிசயம்
எப்போதும் மனம்
எட்டாத அதிசயம்.

சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்