“தமிழ்இலக்கியத்தின் புண்ணியபூமி திருநெல்வேலி மண்” நாவாலாசிரியர் பொன்னீலன்


     “தமிழ்இலக்கியத்தின் புண்ணியபூமி திருநெல்வேலி மண்”
நெல்லை கவிதைநூல் வெளியீட்டுவிழாவில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவாலாசிரியர் பொன்னீலன் பேச்சு

    ம.சக்திவேலாயுதத்தின் “நீங்களும் கிடைப்பீர்கள்” எனும் கவிதைநூல் வெளியீட்டுவிழா பாளையங்கோட்டை அய்யம்பெருமாள் அரங்கில் 14.5.2017 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற்றது. தாணப்பன் வரவேற்றுப் பேசினார்.திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட வங்கிஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் ரா.ரெங்கன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவாலாசிரியர் பொன்னீலன் ம.சக்திவேலாயுதத்தின் “நீங்களும் கிடைப்பீர்கள்” எனும் கவிதைநூலை வெளியிட தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் பேராசிரியர் தோத்தாதிரி அந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் நூல்குறித்த திறனாய்வுரையில் “மொழியின் சுருக்கெழுத்து கவிதை, கிழிந்துபோன சமூகத்தைத் தைக்கும் ஊசி கவிதை. சமீபகாலமாக நெல்லையிலிருந்து இளையதலைமுறைக் கவிஞர்கள் மிக அழகாக எழுதத்தொடங்கியிருகிறார்கள்” என்று பேசினார். தமிழில் நூறுநூல்களுக்கும் மேல் எழுதியுள்ள வரலாற்று ஆய்வாளர் செ.திவானுக்கு எழுத்தாளர் பொன்னீலன் பொன்னாடை போர்த்தி வாழ்த்திப் பேசினார்.

சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவாலாசிரியர் பொன்னீலன் தமது சிறப்புரையில்

    “தமிழ்இலக்கியத்தின் புண்ணியபூமி திருநெல்வேலி மண்”
சமூகத்தின் நெல்லைச்சீமை இலக்கியத்தின் புண்ணியபூமியாகவும் இலக்கியத் தொட்டிலாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டையில் வட்டத்தொட்டி எனும் இலக்கிய அமைப்பை நடத்தி கம்பராமாயணத்தையும் தமிழ்இலக்கியத்தையும் ரசிக்கவைத்த ரசிகமணி டி.கே.சி.வாழ்ந்த மண் நெல்லை மண். மகாகவி பாரதி, நாவலாசிரியர் தொ.மு.சி, இலக்கிய விமர்சனத்தில் தடம்பதித்த மார்க்சிய விமர்சகர் நா.வானமாமலை, அறிஞர் தி.க.சிவசங்கரன், கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சமீபத்தில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற வண்ணதாசன்,பேராசிரியர் தொ.பரமசிவன், தமிழில் நூறுநூல்களுக்கும் மேல் எழுதியுள்ள வரலாற்று ஆய்வாளர் செ.திவான் என்று நெல்லை தமிழ் வளர்க்கும் இலக்கியவாதிகளின் புண்ணியபூமியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. 

நாணல் என்ற புனைபெயரில் கவிதைகள் புனைந்த பேராசிரியர் அ.சீனிவாசராகவன் இந்த மண்ணில் இலக்கியம் படைத்தார்.நன்றாக எழுதுகிறவர்களைத் தேடிப்பிடித்து பாரட்டிய தி.க.சியைப் போன்ற நல்ல விமர்சனவாதிகள் வாழ்ந்த மண்ணும் இதுதான்.படைப்பில் எதுஇல்லை என்று சொல்லி தட்டிக்கம்பு தூக்கிவருபவன் இல்லை விமர்சகன்.

யாரையும் கீழே விழ வைக்காத எல்லோரையும் மேலே எழவைக்கும் விமர்சனம் படைப்பாளியை இன்னும் புதிதுபுதிதாய் எழுதவைக்கும்.சமூகக் கொடுமைகளைச் சுட்டுஎரிக்கும் சமூகக்கவிதைகள் இன்றைய தேவை. உள்ளதைக் கவிஞர்கள் சொல்லவேண்டுமே தவிர சமூகத்திற்கு அறிவுரைகள் வழங்கக்கூடாது. தமிழ்க்கவிதை எங்கேயோ போய்விட்டது. வாழ்வின் முரண்பாடுகளை இலக்கியத்தில் பதிவுசெய்யும் இளைஞர்கூட்டம் நெல்லையில் இன்னும் அதிகமாக எழுதவேண்டும். வாழ்வின் முரண்பாடுகளைக் கண்டு சப்தமும் கூச்சலும் போடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கவிதைகள் மூலமாய் கொஞ்சம்கொஞ்சமாய் வாழ்வின் முரண்பாடுகளை மனதிற்குள் இறக்கவேண்டும்.கண்முன் நடக்கும் அநீதிகளை மிகநுட்பமான மொழிநடையால் இன்னும் இளையசமுதாயம் படைப்பாகப் படைக்கவேண்டும்.” என்று பேசினார்.



விழாவில் சுப்ரா,தாமரைச் செல்வன்,காசிவிஸ்வநாதன்,தளவாய் திருமலைநாதன்,பேராசிரியர் உஷாதேவி,இரா.செல்வமணி,மு.சத்யன், பே.இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நூலாசிரியர் ம. சக்திவேலாயுதம் ஏற்புரை வழங்கினார். குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்.கலை அறிவியல் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் நா.சங்கரராமன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.செ.ச.பிரபு நன்றியுரையாற்றினார்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்