அஞ்சல் எனும் அற்புத வரம்: பேராசிரியர் சௌந்தர மகாதேவன்


முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275

சமீபத்தில் நீங்கள் யாருக்காவது உங்கள் கையெழுத்தில் கடிதம் எழுதுனீர்களா? சிக்கனம் கருதி பதினைந்து பைசா அஞ்சலட்டையில் நுணுக்கி நுணுக்கி முத்துமுத்தான எழுத்துகளோடு கடிதங்களை வாசித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன! அஞ்சல்தலைகளையும் பசைகாய்ந்த அஞ்சலகப் பலகைகளையும் பார்க்க அஞ்சலகங்களுக்குப் போய் எத்தனை யுகங்கள் கழிந்துவிட்டன! குண்டுகுண்டாய் நீள்கோடுகளாய் கிறுக்கலாய் எத்தனைவிதமான கையெழுத்துக்களை வாசித்திருப்போம். அந்த நாளில் எத்தனை மனிதர்களுக்கு சலிக்காமல் நம் சொந்தக்கையால் கடிதம் எழுதியிருப்போம். நம் வரிகளில் வாழ்ந்த வசந்த வரலாறுகள் எங்கே போயின? வீசிக்கொண்டிருக்கும் காற்றுக்கருகே பேசிக்கொண்டிருக்கும் மரங்கள் போல நம் ஆன்மாவோடு ஆனந்தமாய் பேசிக்கொண்டிருப்பன நாம் எழுதிய கடிதங்களும் நமக்கு எழுதப்பட்ட கடிதங்களும் அன்றோ! நம் வீட்டு அஞ்சல் பெட்டி எத்தனைக் கடிதப் பூக்களை நம் கண்களுக்குத் தந்து கவுரவம் தேடியிருக்கும்! 

ஏன் மறந்தோம்?

மடல் என்றும், கடிதம் என்றும், கடுதாசி என்றும், காய்தம் என்றும் லெட்டர் என்றும், விதவிதமாய் அழைத்த அஞ்சல் எனும் செய்தித் தூதுவனை மின்னஞ்சல் பெட்டிகளுக்காக இழக்க நாம் எப்படிச் சம்மதித்தோம்? அஞ்சலகத்தின் இளம்பச்சைநிறப் பசைபடாத விரல்கள் உண்டா? சைக்கிள் மணி ஓசையுடன் தினமும் தெருவுக்கு வந்து இடக்கையில் கடிதக்கட்டுகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கடிதத்தையும் புரட்டி நம் கடிதத்தை நமக்கு எடுத்துத்தரும் அஞ்சலக ஊழியர் அறியாத தெருக்கள் ஏதுமுண்டா? பதினைந்து பைசாவில் நாடுமுழுக்க நம் செய்தி பயணித்ததை நாம் மறக்க முடியுமா?

நெஞ்சம் நெகிழும் நினைவலைகள்

 மணியார்டர் பாரத்தில் ரேகையை ஊதாநிற அச்சுமை டப்பாவில் பாட்டியின் பெருவிரல் அழுத்தி ரேகையைப் புரட்டிவிட்டு கைதுடைத்துக் கொள்ளப் பழையதுணி கேட்கும் அந்த இனிய பொழுதுகள் எங்கே போயின! முதியோர் உதவித்தொகையைச் சரியாக எண்ணித் தந்துவிட்டு வீட்டோடு நலம் விசாரித்துச் சென்ற உங்கள் பகுதி அஞ்சல் ஊழியர் முகம் உங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்குமா? முதுமையை ஆராதித்த இடம் அஞ்சலகத்தைத் தவிர வேறுஎன்ன உண்டு?  மகனும் இல்லாமல் மகளும் இல்லாமல்  ஆதரவற்று, அரசுதரும் முதியோர் உதவித்தொகை வந்துவிட்டதா என்று வளைவான அஞ்சலகக் கவுன்டரில் பரிதாபமாய் எட்டிப்பார்த்துக் கேட்கும் பெரியவரிடம் பொறுமையாய் “ இன்னும் ஒண்ணாம்தேதி ஆகலியே தாத்தா” என்று சொல்லும் அந்த அஞ்சலக ஊழியர்தான் எவ்வளவு அன்பானவர்.


நிம்மதி தந்த சந்நிதி

நேரில் சொல்லத் தயங்கும் செய்திகளைக் கூடக் கடிதங்கள் எவ்வளவு நாசூக்காகச் சொல்லி அந்த அழுத்தமான கணங்களை வெகு சுலபமாய் நகர்த்திச் சென்றிருக்கின்றன. மனதை அழுத்தும் பார(றை) நிகழ்வுகளை வழியும் கண்ணீரோடு இன்லான்ட் கடிதத்தில் எழுதி சிகப்பு நிற அஞ்சல் பெட்டியில் போட்டுவிட்டு நிமிர்ந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுவோமே! இப்போது நம் மனப்பாரம் இறக்க ஏன் எதனாலும் முடியவில்லையே? அஞ்சலகம் ஊரின் அடையாளம் மட்டுமா? ஆயிரமாயிரம் ஆன்மாக்களுக்கு நிம்மதி தந்த சந்நிதி ஆயிற்றே.

அன்பின் தாயகமாய் அஞ்சலகம்

அஞ்சல்குறியீட்டு எண்களோடு நீண்டிருக்கும் சிகப்புநிற அறிவிப்புப் பலகைகளும், ஓரத்தில் சிறுதுளையிடப்பட்ட தலைவர்களின் படம்போட்ட விதவிதமான அஞ்சல்தலைகளும், டெலிவரி நாளை அழுந்தப் பதிக்கும் முத்திரைகளும் பசைதடவிய பழமையான, பளப்பான  தேக்கு மேசையும், கெஞ்சல் குரலில் பேனா கேட்கும் மனிதர்களும், மூடியைக் கையில் வைத்துக் கொண்டு தரும் கவன மனிதர்களும் எங்கே போனார்கள்! இப்படி எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு எங்கே ஓடிக்கொண்டிருக்கிறோம் நாம்?

மொழியின் உன்னத முகங்கள் கடிதங்கள்
கடிதங்கள் மொழியின் உன்னத முகங்கள், அன்பின்  முகவரிகள். தொலைவைச் சுருக்கி அன்பானவர்களை வரிகளுக்கு இடையில் நிறுத்தி அண்மையாக்கும் வித்தை கடிதங்களுக்கே உண்டு. கடிதம், தனிமனிதர்களின் வரலாற்று ஆவணம். வாழ்வைப் புரிந்துகொள்ள உதவும் சாசனம்.

உலகப்புகழ்பெற்ற சில கடிதங்கள்

நேரு எழுதிய கடிதம்

நேரு தன் மகள் இந்திராபிரியதர்ஷிணிக்கு 1922 ஆம் ஆண்டு முதல் 1964 வரை 42  ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கடிதங்கள் மூலம் உலக வரலாற்றை உருகத்தோடு எழுதினார்.GLIMPSES OF WORLD HISTORY என்று உலகவரலாற்று நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.அதில் நேரு,” இந்திரா..வரலாறு படிப்பது சிறப்பானது,அதைவிட வரலாறு படைப்பது சிறப்பானது” என்று எழுதுகிறார்.

ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

ஆபிரகாம் லிங்கன் தன் மகனுக்குப் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியருக்கு எழுதிய கடிதம் உலகப்புகழ் பெற்றது, “ மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களே, என் மகனுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக்கொடுங்கள்.அவனுக்குப் பொறாமைக் குணம் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.மௌனமாக ரசித்துச் சிரிப்பதன் ரசகசியத்தை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.எதற்கெடுத்தாலும் பயந்துஒழிவது கோழைத்தனம் என்பதைப் புரியவையுங்கள். புத்தகங்கள் எனும் அற்புதஉலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்துகாட்டுங்கள். அதேவேளையில் இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுத்தாருங்கள். ஏமாற்றுவதைவிடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுத்தாருங்கள்.மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும் தன் சுயசிந்தனைமீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத்தாருங்கள்.” என்று லிங்கன் எழுதிய கடிதம் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

பல கோடிக்கு ஏலம்போன மாவீரன் நெப்போலியனின் கடிதம்
எந்தப் போர் முனையில் இருந்தாலும் தான்நினைப்பதை உடனுக்குடன் கடிதமாக எழுதித் தன் தளபதிகளுக்கு அனுப்பும் பழக்கத்தை மாவீரன் நெப்போலியன் கொண்டிருந்தார். ரஷ்யப் படையெடுப்பின் போது அவர் தன் தளபதிக்கு வெளிப்படையாக எழுதினால் ரகசியங்கள் கசிந்துவிடுமென்று சங்கேதச் சொற்களால் 1812  ஆம் ஆண்டு அவர் எழுதிய கடிதம் சமீபத்தில் 1 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. அதில் கிரம்லின் கோட்டையை எந்த நாளில் எத்தனை மணிக்குத் தகர்க்கப்போகிற செய்தியைக் குறியீட்டில் கடிதமாக எழுதியுள்ளார்.

ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம்
அணுவியலின் புகழ்பெற்ற விஞ்ஞானியாகத் திகழ்ந்த ஐன்ஸ்டீன், எரிக் குட்டிங் எனும் தத்துவஞானி எழுதிய கடவுள் குறித்த நூலைப் படித்துவிட்டு அவருக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதம் சமீபத்தில் 30 இலட்சம் டாலருக்கு ஏலம்போனது. 1955 ஆண்டு, பிரசன்ட் பல்கலைக்கழகக் கடிதத் தாளில் ஐன்ஸ்டீன், கடவுள் குறித்த தன் கருத்தைக் கடிதமாக எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கடவுள் குறித்து அவர் முன்வைத்த கருத்தாக்கங்கள் அவரது எதிர்க்குரலாக அமைந்தது.

ஓவியர் வான்கோவின் கடிதம்

இரண்டாயிரம் ஓவியங்களுக்கு மேல் வரைந்த டச்சு நாட்டு ஓவியரான வின்சென்ட் வான்கோ, விண்மீன்கள் நிறைந்த இரவு எனும் ஓவியத்தால்  உலகப்புகழ் பெற்றவர். வாழ்ந்தபோது, தான்சந்தித்த துன்பங்களை தன் சகோதரன் தியோவுக்கு ஒளிவுமறைவின்றிப் எண்ணூறு கடிதங்களாக எழுதினார்.ஆவணக்காப்பகத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ள அந்தக் கடிதங்களில், ஒரு கலைஞனின் எதிர்பார்ப்பை இந்தச் சமூகமும் சக மனிதர்களும் எவ்வாறு புறக்கணிக்கிறார்கள் என்பதை மிக எதார்த்தமாக விளக்கியுள்ளார்.

அவர்கள் மட்டுமா ? லியோ டால்ஸ்டாய், பிளாட்டோ, மகாகவி பாரதியார், மறைமலையடிகள், அண்ணா, ரசிகமணி டி.கே.சி.,கருமுத்து தியாகராசச் செட்டியார், மு.வரதராசனார், புதுமைப்பித்தன், தி.க.சி., கி.ரா, வல்லிக்கண்ணன், வண்ணதாசன் போன்றோர் கடிதத்தையும் இலக்கியமாக மாற்றியவர்கள். அவர்கள் எழுதிய கடிதங்கள் அனைவராலும் வாசிக்கவும் நேசிக்கவும் படுகின்றன.

நாம் நிறுத்தியதில் உறுத்தியவை

சொந்த எழுத்தை மறந்த சமூகம் எந்த எழுத்தை வாசிக்கும்?  வெளுக்கும் ஆடைகளில் குறியிட்டு எழுதுவதை நிறுத்தினோம். பாத்திரங்களில் அழகாகப் பெயரிட்டு எழுதுவதை நிறுத்தினோம். நம் சொந்தக் கையெழுத்தில் பொங்கல் வாழ்த்து எழுதுவதை நிறுத்தினோம். செலவுக்கணக்கு எழுவதைக்கூட நிறுத்தினோம். டைரி எழுதுவதை நிறுத்தினோம், இப்போது கடிதம் எழுதுவதையும் நிறுத்திவிட்டோமே! என்ன செய்யப்போகிறோம் இப்படி ஓடியோடி? உலகப்புகழ் பெற்ற கடிதங்களைக் கண்டபின்னாவது நம் கையெழுத்தில் கடிதங்கள் எழுதுவோம்.. உலக வரலாறு எழுதும் நம் விரல்கள் கடிதம் எழுதக் காலம் கடத்துவது எந்த வகையில் நியாயம்?  நம்மை எழுதுவோம். நம் சோகங்களை, நம் சுகங்களை எழுதுவோம். எழுத்தின் கழுத்தில் நம் வரங்களையும் நம் சோகங்களையும் எழுதுவோம்.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்