தமிழ்ச்சிறுகதைகளின் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சி

திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பு மேலும் வெளியீட்டகம் இணைந்து நடத்திய மௌனி, புதுமைப்பித்தன் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கம்

       தமிழ்ச்சிறுகதைகளின் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சி

திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பு மற்றும் மேலும் வெளியீட்டகம் இணைந்து தமிழ்ச்சிறுகதைகளின் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சியாகத் தடம்பதித்த எழுத்தாளர்கள் மௌனி, புதுமைப்பித்தன் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கத்தினை மே 17 மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை சைவசபையில் நடத்தின. மதிதா இந்துக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம் வரவேற்றுப் பேசினார். மேலும் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் மேலும் சிவசு தலைமையுரையாற்றினார்.
முதல் அமர்வு: முதல் தமிழ்ச்சிறுகதை பிறந்து 2017 ஆம் ஆண்டோடு நூறாண்டுகள் ஆகும் இந்த நாளில் மேலும் இலக்கிய அமைப்பு இந்த நூறாண்டுகளில் தடம்பதித்த தமிழ்ச்சிறுகதையாசிரியர்கள் குறித்த தொடர்சொற்பொழிவுகளை நடத்திவருகிறது. அந்தவகையில் தமிழ்ச்சிறுகதையுலகில் தடம்பதித்த எழுத்தாளரான மௌனியின் மணிக்கொடிச் சிறுகதைகள் எனும் தலைப்பில் பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் சிறப்புரையாற்றும்போது
சிறப்பான வாசிப்பனுபவம்

“ தமிழ்ச் சிறுகதையின் நூற்றாண்டுவிழாக்காலமான இவ்வாண்டிலும், 24 கதைகள் மட்டுமே எழுதி நீங்காப் புகழ்பெற்ற எழுத்தாளர் மௌனியின் கதைகளை இன்னும் புதிதாகத் தமிழிலக்கிய உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்ச் சிறுகதைகளை வளர்த்த மணிக்கொடி இலக்கிய இதழில் 1936,1937 ஆம் ஆண்டுகளில் மௌனி 12 கதைகள் எழுதினார். தமிழ்ச்சிறுகதையுலகின் திருமூலர் என்று புதுமைப்பித்தனால் சிறப்புடன் அழைக்கப்பட்ட மௌனியின் கதைகள் வெகுநுட்பமானவை, தத்துவ உட்பொருள் கொண்டவை. பலமுறை தான் எழுதிய சிறுகதைப் பிரதிகளை வாசித்துச் செம்மையாக்கம் செய்து அதன்பின் அச்சுக்குத் தருவது மௌனியின் பழக்கம். தன் சிறுகதைகளைக் கவிதைகள் போன்று எழுதிய அவரின் மனஉலகு வேறுபட்டது.வழக்கமான கதைகூறு மரபிலிருந்து வேறுபட்ட புதிரான வாக்கிய அமைப்புடன் கூடிய கதைகளை மௌனி படைத்தார். அவர் கதைகளில் பிரபஞ்ச கானம்,அழியாச்சுடர்,மாறுதல் ஆகியவை குறிப்பிடத்தக்கன. “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” என்று அழியாச்சுடர் கதையில் கேட்கும் கேள்வி உட்பொருள் கொண்டது. காலம்,வெளி குறித்த ஆழ்ந்த கவனம் அவர் பிறந்து 110 ஆண்டுகள் கழித்தும் அவர் கதைகளை இளையதலைமுறை வாசகர்களுக்கு சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தந்துகொண்டே இருகின்றன.” என்று குறிப்பிட்டார்.

பேராசிரியர் சிவசுவின் புதிய கோட்பாடு அறிமுகம்
வழக்கமான மரபுசார்ந்த இலக்கியத் திறனாய்வு முறைகளிலிருந்து வேறுபட்டு மேலும் இலக்கிய அமைப்பின் மாதந்திரத் தொடர்கூட்டங்களில் நவீனத் திறனாய்வுக்கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகும்நோக்குடன் பேராசிரியர் மேலும் சிவசு, வித்தாண்டல் கோட்பாடு மௌனியும் புதுமைப்பித்தனும் எனும் தலைப்பில் வித்தாண்டல் கோட்பாட்டினை முதன்முதலாக அறிமுகப்படுத்திச் சிறப்புரையாற்றும்போது,

“தரமான தமிழ்ச் சிறுகதைகளையும் தரமான சிறுகதைப் படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்திய மணிக்கொடி இதழில் மௌனியும் புதுமைப்பித்தனும் சிறப்பான கதைகளைத் தந்தனர். தமிழின் தொன்மையான மரபை ஆழமாக உள்வாங்கி அதிலிருந்து மீறிப் புதுமையான கதைகள் படைத்தவர்களில் இவ்விரு படைப்பாளிகளும் குறிப்பிடத்தக்கவர்களாய் திகழ்கின்றனர். அவர்களின் கதைகள் எண்பது ஆண்டுகள் கடந்து இன்று நாம் படிக்கும்போதும் இன்று எழுதப்பட்டதுபோல் புதுமையாக உள்ளன. அக்கதைகளை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் வேறுவேறு அனுபவங்கள் தரும் பிரதிகளாகத் திகழ்கின்றன.ஒரு பிரதி இன்னொரு பிரதியிடமிருந்து எப்படி வித்தியாசப்படுகிறது எந்த வகையில் அது இன்னொன்றைத் தாண்டமுயல்கிறது என்பதைக் கொண்டு வித்தாண்டல் கோட்பாட்டினை இன்று புதிதாக முன்வைத்துள்ளேன். பிறந்தகுழந்தையை 18 மாதங்கள் கண்ணாடிமுன் காட்டமாட்டார்கள், காட்டினால் அது வாய்பேசாமல் இருந்துவிடும் என்கிற நம்பிக்கை இன்றும் நம் வீடுகளில் உண்டு. அதுவரை அதற்குத் தான் என்கிற ஓர்மை இல்லை. அதன்பின் அக்குழந்தை தன்னைத் தானாகவும் பிறரைப் பிறராகவும் வேறுபடுத்தத் தொடங்குகிறது. இரு இலக்கியப் பிரதிகளை எடுத்துக்கொண்டு முதலில் எங்கெல்லாம் ஒன்றுபடுகிறது என்பதைப் பார்த்து அதன்பின் எங்கெல்லாம் வேறுபடுகிறது என்பதைப் பார்க்கும்போது புதிய புரிதல்கள் நமக்கு ஏற்படுகிறது. தெளிவான தத்துவச் சார்புடைய படைப்பாளர்களாக மௌனியும் புதுமைப்பித்தனும் எழுதியதால் அவர்கள் இன்றும் பேசப்படுகிறார்கள்.இன்று நிறைய கதைசொல்லிகள் இருக்கிறார்கள், ஆனால் கதை எழுதிகள் குறைவாக இருப்பதன் காரணம் தத்துவச்சார்பு இல்லாத தன்மைதான். படைப்பாளி தன் கதைகளினிடையே சில மௌனத்தை உட்பொதிந்தே எழுதுகிறான்.அந்த மௌனத்தை உடைத்து ஆழமாக உள்நுழைந்து பார்க்கும்போது அப்பிரதியில் வாசகன் வேறுபட்ட பொருண்மைகளை உணரமுடியும். அவ்வகையில் மௌனியின் “மிஸ்டேக்” கதையும் புதுமைப்பித்தனின் “திருக்குறள் செய்த திருக்கூத்து” கதையும் ஒன்றுபோல் தோன்றினாலும் அரசியல் பார்வையை உள்ளே கொண்டுவந்து புதுமைப்பித்தன் சிறந்துநிற்கிறார்.மௌனியின் மிஸ்டேக் கதையைச் சங்கஇலக்கிய அகப்பாடல் போல் உள்ளது என்று நினைத்துக்கொண்டால் புதுமைப்பித்தனின் “திருக்குறள் செய்த திருக்கூத்து”கதையைப் புறப்பாடல் போல் நாம் கருதமுடியும். புதுமைப்பித்தன் அவர் காலச் சமுதாயப் போக்கினை தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்து விமர்சனம் செய்கிறார். எத்தனையோ கிடைக்கோட்டுச் சொற்கள் இருக்க புதுமைப்பித்தன் பிலாக்கணம் என்கிற சொல்லைக் கதையில் பயன்படுத்துகிறார். அதேபோல் மௌனியின் மாறுதல் கதையைப் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் கதையோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.” என்று பேசினார்.சுரண்டை அரசுக் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்