பயணிகளின் கனிவான கவனத்திற்கு : பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,


பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி, 9952140275

“பயணிகளின் கனிவான கவனத்திற்கு” என்ற இனிமையான குரல் நம்மைப் பயணநினைவுகளுக்குள் அழைத்துச் செல்கிறதே!கடந்துசெல்கிறோம் பலஊர்களின் பழைய நினைவுகளோடு. ஒவ்வொரு பயணமும் தியானத்தைப் போல் மனநிறைவினைத் தருகிறதே.ஊரோடு கலந்து,ஊனோடு கலந்து,நம்மோடு கலந்துபோன பயணங்களுக்கு முடிவேது?  தொடர்வண்டிப் பயணங்கள், பேருந்துப் பயணங்கள்,படகுப் பயணங்கள்,விமானப் பயணங்கள், ,இருசக்கரவாகனப்பயணங்கள்,சைக்கிள் பயணங்கள்,மாட்டுவண்டி,குதிரைவண்டிப் பயணங்கள், நடைப்பயணங்கள் என எத்தனையோ பயணங்கள் தினமும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.உயிரில் கலந்து உணர்வில் கரையும் பயணங்கள் இனிமையானவை.

திண்ணைகள் தின்ற தெருக்கள், அளிக்கம்பிகள் இல்லாக் கதவுகள், தன்னைத்தானே பூட்டிக்கொண்டு சொந்தச் சிறையில் இருக்கும் விந்தைமனிதர்கள், நீர்மோர் தராத சாவடிகள், சிமென்ட்கடைகளாகிவிட்ட  சத்திரங்கள், இவற்றுக்கு மத்தியில் கொப்புளங்களோடு பயணப்படுகின்றன நம் பாதங்கள்.
 தேசாந்திரியாக அலையத் தொடங்கிவிட்டவனுக்கு எல்லைகள்கூடத் தொல்லைகள்தான். பயணப்படும்போது நாம் பக்குவமடைகிறோம். வரலாறு படிக்கிறோம், பண்பாடு அறிகிறோம்,மக்கள் மனதை வாசிக்கிறோம். கம்புபற்றி மேல்எழும் வெற்றிலைக் கொடியாய் பயணப்பொழுதுகளில் அன்பு பற்றி வளர்கிறது மனிதமும் புனிதமாய்.
வரு சொல்லறியா ஒரு சொல் வாழ்க்கை! ஒரு சுவாரசியமான முடிவை நோக்கி நகர்த்திச் செல்லும் இனிய பயணமே வாழ்க்கை. ரணப்படும் இதயமும் குணப்படும் பயணப்படும் அழகான கணங்களில். கக்கத்தில் துக்கத்தை வைத்துக்கொண்டு துயரத்தின் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் நமக்குப் பயணங்கள் ஆறுதலையும் தேறுதலையும் தருகின்றன. பயணங்கள் ஆன்மாவின் ஆனந்தசயனங்கள்.இடம் மாறும்போது தடுமாறும் மனமும் தடம் மாறும்.

பயண நேரங்களில் பலப்படுகிறது நம் இதயமும் இதமாக.எதை ரசித்திருக்கிறோம் நாம்? கொடைக்கானல் மலையின் மூலிகை சுவாசம், மூணாறு மலையின் தேயிலை வாசம், குற்றாலச்சாரல், தேடிவரும் தேனித் தென்றல்,பழமுதிர்ச்சோலையின் பனிச்சுவைத் தேன்நீர், கடலலை கால்வருடும் திருச்செந்தூர் கடற்பரப்பு, மணப்பாடு மணல்குன்று,வான் முட்டும் தூண் தட்டும் மாமன்னர் திருமலை நாயக்கர் மகால்,கடல் அலைகள் நடுவே தவமிருக்கும் விவேகானந்தர் பாறை, ஓங்கி உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் உயிர்ச்சிற்பம், இயற்கையை ஊட்டி வளர்க்கும் ஊட்டிகுளிர்மலை, கடல் மீது பாலத்தில் பயணிக்கும் ராமேஸ்வரத்தீவு,பொதிகை மலையிலிருந்து பொங்கிப் பாயும் பாணதீர்த்தப் பேரருவி என்று நம்மைச் சுற்றி நாலாயிரம் சொர்க்கபுரிகள்..ரசிக்க மனமின்றி இயற்கையைப் புசிக்க தினமின்றி கட்டிடச் சிறைகளுக்குள் நாம் கைதியாய் கழிக்கிறோம்.சுடப்பட்ட ரொட்டியாய் நாம் தனிமைத் தீயில் தகிக்கிறோம்.யார்தவறு?
அழுகிய பூக்களின் அழகியலை அர்த்தமில்லாமல் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞன் போல் பலநேரங்களில் நாம் வீணடிக்கிறோம் நம் விந்தைவிநாடிகளை. நதி பார்க்கா நாள் வீண்,ஆறு பார்க்கா ஆயுள் வீண்,மலை பார்க்கா மானுடம் வீண்.வனம் பார்க்கா தினம் வீண்.இப்படி நமக்கருகே இருந்தும் நம்மால் கண்டுகொள்ளப்பாடத இடங்கள் ஒன்றாஇரண்டா! நினைத்துப் பார்க்கிற யாவுமே உயிரின் வேரை நனைத்துப் பார்க்கும்.செலவு என்ற தமிழ்ச்சொல் செல்லுதலைக் குறித்தது. தமிழில் ஆற்றுப்படை இலக்கியவகைமை பயணப்படுதலை முன்நிறுத்தியே அமைந்தது.

சீனப்பயணி யுவான் சுவாங் இந்திய மண்ணில் கால்பதித்து  ஒவ்வொரு இடமாகத் தரிசித்து எழுதிய குறிப்புகள் சாதரணமானவையா? காஷ்மீரத்திலும், நாளந்தாவிலும், காஞ்சியிலும் அவர் காலாற நடந்து எழுதிய குறிப்புக்களை வாசிக்கும்போது நம் மனம் மகிழ்வலைகளில் தவழ்கிறதே! நாம் நம்மைச் சுற்றியுள்ள ஊரில் அவர்போல் நடந்து நாலுவரியாவது எழுதிஇருக்கிறோமா?

போர்ச்சுக்கீசிய நாடுகாண் பயணியாகத் தன் பயணத்தைத் தொடங்கி ஐராப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல்வழிப் பாதையைக் கண்டறிந்த வாஸ்கோடாகாமாவின் பயணம் உலகின் பார்வையைத் திரும்ப வைத்த பயணமாயிற்றே!

நானறிந்த என் வாழ்வை எல்லோருக்கும் அறிவிப்பது அனாவசியம் என்ற எண்ணம் கடந்தோடி விட்டது.  தூங்கிக்கொண்டிருக்கிற இரவுநேரப்பயணப் பொழுதிலும் சாலையில் நின்று கண்ணாடிக்கு வெளியே நின்று தட்டிஎழுப்பி கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்கும் அந்த மனிதரை,ஓடுகிறபேருந்தில் சாத்தூர்வெள்ளரிப் பிஞ்சு விற்கும் அந்த மனிதரை வீட்டிற்குள்ளிருந்தால் எப்படிச் சந்திப்பது? கொடைரோட்டில் குவிந்து கிடக்கிற கனிகளின் இன்சுவையை எப்படிப் பெறுவது? இன்மைக்கும் உண்மைக்கும் இடையே ஊசாலாடும் பெண்டுலமாய் வாழ்வின் நாட்கள்.சலனமில்லாச் சங்கடங்களுக்கு மத்தியிலும் இந்த வாழ்க்கை வசந்தப்பூக்களை வாரிவழங்கத்தான் செய்கிறது.ஆனால் அந்தக் கோடுகளின் நீட்சி கோணலாய் போனது துயரம்தான்.

நாம் அவர்களைப் போல் நாடுகடந்தும் கண்டம் கடந்தும் பயணப்பட வேண்டியதில்லை, நம்மைச் சுற்றி இருக்கும் சொர்க்கபுரிகளை நோக்கி நாம் என்றாவது ஆர்வத்தோடு பயணித்திருக்கிறோமா! சமணப் படுகைகள் நிறைந்த சமணமலை மதுரைக்கு அருகில் இருப்பதை நாம் அறிந்துள்ளோமா! சன்னலோர இருக்கைக்குச் சண்டையிடுகிற பள்ளிப்பிள்ளைகள் மாதிரி இன்னலோர இருக்கையில் இடம்போடப் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறோம்.

சிட்டுக்குருவிகள் விட்டுவிடுதலையாகிப் பறக்கின்றனவே அந்தச் செப்படி வித்தையை அவை எப்படிக் கற்றன? கோர முட்கள் கோபமாய் கிழித்தாலும் ஆவேசமாய் அழுது ஆர்பாட்டம் செய்கின்றனவா அந்தச் சிந்திக்கத் தெரியா சிட்டுக் குருவிகள்? அலைவதில் அவைகளுக்கு அலாதிப் பிரியம்.

இடைவெளிகளை படைவெளிகளாய் மாற்றுபவன் மனிதன் மட்டும்தானா! அரசு விடுமுறைகளில் மட்டுமே அறையைவிட்டு வெளியே வருவது எந்த வகையில் நியாயம்? புலப்படாப்புரிதல்கள், சுழலும் தட்டாய் நமக்குள் உழலும் பிரச்சனைகள் இவற்றுக்கு மத்தியில் முடிந்து போய்விடுமா நம் வாழ்வு?
செண்பகச் செடியின் இலையை இணைத்துத் தைத்துச் சிறுகுடிலாக்கும் வித்தையைச் சிட்டுக்குருவிகள் தெரிந்திருக்கின்றன.இன்றும் நாளையும் காலவரையறையின் மைல்கற்கள் அவ்வளவுதான்.பெருமரம் வெட்டும் சிறுகோடாரியாய் நாம் நிகழ்காலத்தில் நின்றுகொண்டு இறந்தகாலத்தையே இன்னும் கொத்திக் கொண்டிருக்கிறோம்.

சுற்றுலா வெற்றுலா அல்ல. அது செலவின் பக்கங்களில் வரவு வைக்கப்பட வேண்டிய நெருக்கடியான நிகழ்வுமன்று. அருவி பார்க்கும்போது நிறையவே நிரம்பி வழியுங்கள்.கடல் மணலில் கவலைகளைக் கொட்டிவிட்டு உற்சாகமாய் நடைபயிலுங்கள்.வனம் பார்க்கும்போது செடியாகுங்கள்.

பயணப்படுங்கள் பலப்படும் வாழ்வு. பயணப்படுங்கள் பக்குவமடைவீர்கள், பயணப்படுங்கள் விசாலப்படும் மனது. பயணப்படுங்கள் புதிதுபுதிதாய் நண்பர்களைப் பெறுவீர்கள்; அப்போது தொடர்வண்டி நெரிசலும் மகிழ்ச்சியே,பேருந்துக் கூட்டமும் மகிழ்ச்சியே. பயணிக்கிற வினாடிகளில் பயணிக்கிறது மனமும் நம் பயணத்தைவிட விரைவாய். பின்னால் ஓடுகிற மின்கம்பங்கள்,அவ்வப்போது இடைப்படும் பழவியாபாரிகள்,யாவற்றையும் உன்னிப்பாய் கவனியுங்கள்..பயணத்தின் சூட்சுமம் புரியும்.
அந்தந்த வினாடிகளில் வசிக்கப் பழகுங்கள்,எதற்கெடுத்தாலும் எரிச்சலடைய நாமொன்றும் எரிமலைமேல் வசிக்கவில்லை.சீவச்சீவக் கூர்மையாகிற பென்சில்மாதிரி பயணம் போகப்போகக் கூர்மையாகிறோம். ஆகவே கனிவான மனிதர்களாக, இனிப் பயணப்படுவோம் பக்கத்து ஊர்களுக்காவது.



Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்