சக்திவேலாயுதம் கவிதைகள்

               கவிதை எனும் பூங்காற்று
                                  முனைவர் சௌந்தர மகாதேவன்,
                                  தமிழ்த்துறைத்தலைவர்,
                                  சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
                                  திருநெல்வேலி, 9952140275
எழுத்து ஆன்மாவின் நுண்மொழி. அது எப்போதும் கிளம்பிவரும் கடலலை அன்று,  எப்போதோ வெளிக்கிளம்பும் புதுப்புனல். எழுத்து சுயஅனுபவத்தின் திரட்சி, மொழியின் சுருக்கெழுத்து.
சுபமங்களா நேர்காணலில் எழுத்தாளர் திரு. வண்ணநிலவன், “ இலக்கியம் என்பது சங்கீதம் ஓவியம் மாதிரி கலை சம்பந்தப்பட்டதுதான். இது வாழ்வு சம்பந்தப்பட்டது என்கிறோம். இதில் நாட்டுப் பிரச்சனையோ வீட்டுப் பிரச்சனையோ இருக்கலாம். சமூகப் பிரச்சனையைச் சொல்வதுதான் அதற்கு அளவு என்று சொல்லமுடியாது. இலக்கியத்தில் முதலும் முடிவுமானது ரசனைதான்” என்று சொன்னார்.
ரசனை இல்லாமல் இலக்கியம் படைக்கவோ படிக்கவோ முடியாது. இளையதலைமுறை தங்கள் ரசனையைப் பதிவுசெய்ய, தங்கள் வாழ்க்கையைப் பதிவுசெய்ய, தங்கள் விருப்பை வெறுப்பைப் பதிவுசெய்ய தேர்ந்த மொழிநடையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது கவிதை எனும் வடிவாக.
எழுதச் சுருக்கமாகவும் நெஞ்சுக்கு நெருக்கமாகவும் சுருக்கென்று தைப்பதாகவும் இருப்பதால் கவிதையில் தடம்பதித்துவருகிறார்கள் நம் அருமை இளைஞர்கள்.
 சக்திவேலாயுதம் அழகாக நேர்த்தியாக எழுதத் தொடங்கியுள்ளார். உரைநடைக்கும் கவிதைக்கும் இடையேயான ஓர் இணையநடை அவரை எழுதவைக்கிறது.
“ தலைகவிழ்ந்த பூக்கள்
யோசிப்பதற்குள் தலைநிமிர்ந்தது
மலர்ந்தது காலை”
எனும் வரிகளில் எழுத்துப்பூ எழுச்சியாய் பூத்துள்ளது. பஞ்சாரத்துக் கோழிகளைத் திறந்துவிட்டுப் பார்க்காத தலைமுறை, தவளைக் குஞ்சுகளைத் தீப்பெட்டிப் பெட்டிக்குள் அடைத்து விளையாடாத தலைமுறை இப்போது எல்லாவற்றையும் நுண்பார்வையால் ரசிக்கத் தொடங்கியிருக்கிறது.
‘மண் தன்னை மட்பாண்டமாக்க
சுழன்று கொண்டேதானிருக்கிறது’
அழகான வரி.
காதல் வரிகள் மட்டுமல்லாமல் மரணத்தின் ரண வரிகளும் சக்திவேலாயுதத்தை வெகுவாகப் பாதிக்கிறது.
 ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடையில் ஊசலாடுகிற உயிர் சுதந்திரமாவதை மலர்களைக் கொண்டுதானே ஆற்றமுடியும்!
“ வழியெல்லாம் பூக்கள்
அமைதியோடு உலா
ஏதேதோ சடங்குகள்
மௌனித்தது வாழ்க்கை” என எழுதுகிறார்.
மௌனமாவதற்குத் தானே இந்த மூச்சு சப்தமாய் அலறுகிறது.
சக்திவேலாயுதம் இன்னும் நிறைய படைக்க வேண்டும், இன்னும் நிறைய படிக்க வேண்டும். வாசிப்பின் சுவாசிப்பில் அவர் இன்னும் தனக்குள் ஆழமாய் நுழையவேண்டும்.
“புல்லாங்குழலின் வாசிப்பும்
எனது சுவாசிப்பும்
இயல்பாகவே அழகாகிவிடுகிறது”
ஆம் சக்திவேலாயுதம்  அழகு பற்றி எழுதும்போது அக்கவிதையும் அழகாகிவிடுகிறது.
                                 இனிய வாழ்த்துகள் அன்புத்தம்பிக்கு
                                      சௌந்தர மகாதேவ

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்