தன்னம்பிக்கைக் கட்டுரை: சௌந்தர மகாதேவன்

                 வாழத் தயாரா நீங்கள்?

முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275
mahabarathi1974@gmail.com

கோடை காலத்து ஓடையைப் போல வறண்டு கிடக்கிறது பலரது வாழ்க்கை.எப்படி வாழ்வது என்று எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் கேட்கிறார்கள்.நாம் நினைப்பதுபோல் வாழக்கை வேப்பங்காயைப் போல் கசப்பானதா? இல்லை மல்கோவாவைப் போல் மதுரமானதா ? வாழ்வு நந்தவனமா? இல்லை சோகத்தைப் பரப்பிவைத்த நொந்தவனமா? உயரத்தைத் தாங்கும் தூண்போல் துயரத்தைத் தாங்கும் தூயதிண்நெஞ்சம் வாழ்வை வசந்தமாக்குகிறது. கசிந்த கனவுகளோடும், இலட்சியம் தேக்கிய நெஞ்சத்தொடும் இந்த உலகில் வாழும் நாம், இந்த ஈரமான வாழ்வைக் கோரமாய் பார்ப்பது ஏன்? ஓய்ந்து போவதற்காகவோ,தேய்ந்து போவதற்காகவோ,மாய்ந்து சாவதற்கோ நாம் இந்த உலகிற்கு வரவில்லையே!

 நம் வாழ்வைப் பிரச்சினைகளின் பின்னிணைப்பாகப் புரிந்துகொள்கிறோமே!   பிரச்சினை என்பது கற்பூரம் மாதிரி திறந்து வைத்தால் பறந்து போகும்.அதன் ஆணிவேர்தேடினால் அப்படியே ஓடும். சிக்கெடுக்கிற சீப்பு மாதிரி சிக்கலை எடுக்கும் காப்பு நம் தளர்வரியா மனம். பல காயங்களை நியாயப்படுத்தும் போகப் போக இந்த வாழ்க்கை. நாம் இந்த உலகில் வசிக்கிறோம்.. ரசனையோடு வாழ்கிறோமா? ஏன் முடியவில்லை? பணம் ஈட்டியபின் வாழ்வோம் என்பது, அலைகள் அடங்கிய பின் கடலாடுவோம் என நினைத்தல்போல் ஆகக் கொடுமையானது.

பொங்கும் பூம்புனல் தங்குமா ஓரிடத்தில்? ஆணியடித்த மாதிரி நம்மால் மட்டும் ஓரிடத்தில் அப்படியே எப்படி வாழமுடிகிறது. தாக்குப்பிடிக்காத மனதிற்குத் தூக்குப் பிடிக்கும் என்பது துயரமானதல்லவா? ஆழ்ந்த கவலைகளின்மீது வாழ்ந்த தவளைகளைப் பயப்பாம்பு சுற்றியும்பற்றியும் சுலபமாய் விழுங்குகிறது. விழிக்கத் தவறுகிறவர்களை விழுங்குகிறது விடையறியா இந்த விந்தை வாழ்க்கை. முட்டி மோதுகிறவர்களை எட்டித் தூக்கிவிடுகிறது இந்த வாழ்க்கை. காலம் தந்த காயத்தை இந்த ஞாலம் தந்த காயமாய் ஏற்கத் தயங்குகிறது இந்த விந்தை மனம்.வாழ்க்கையைச் சொர்க்கமாக்குவது நாம்  வகுக்கும் செயல்திட்டம்தான். 

கவலைப்படுவதிலேயே நம் காலம் கழிந்துவிடுகிறது. சோகமான காட்சியின் நீளமான நீட்சியாய் நம் வாழ்வின் சிலவினாடிகள். விடிவதற்குள் முடிவு வருவதற்கு வாழ்க்கை ஒன்றும் மூன்றுமணிநேரத் திரைப்படமன்று. நம் வாழ்வில் இடைவரும் கடினவிநாடிகளைக் கடந்துதான் ஆகவேண்டும். ஜன்னல் கடந்து உள்நுழையும் காற்றாய், இன்னல் கடந்துதான் நுழையவேண்டும் இந்த வாழ்வின் சொர்க்கபுரிக்குள். வாழும்போதே நம்மால் ஏன் சொர்க்கத்தை உருவாக்கமுடியவில்லை. ஏன் துயரம் எப்போதும் உயரத்தில் அமர்ந்து இப்படி நம்மை ஆடிப்படைக்கிறது. நாம் உருவாக்கும் சிக்கல்களுக்குள் நாமே சிக்கிக்கொள்கிறோம். செல்போன் பூனைகளைப் போல் நாம் பேசியதைத் தன் குரலில் பேசியதாய் மாயம் காட்டுகிறது காயங்களைத் தருவாதாய் நாம் நினைக்கும் வாழ்க்கை.

 தீதும் நன்றும் நமக்கு நம்மால் மட்டுமே வருகிறது. காகிதக் கப்பலை நம்பிக் கடல் பயணம் மேற்கொள்ள முயல்கிறோம் சில நேரங்களில் நாம். மனரணத்தால் நாம் சினத்தினத்தைச் சிரமப்பட்டு உருவாக்குகிறோம். நம்மிடம் உள்ளதை விட மற்றவர்களிடம் உள்ளதை அழகாய் நினைத்து சிறப்பாய் நினைத்து சொல்ல முடியாமல் ஏங்குகிறோம். அது நமக்குக் கிடைக்காமல் போனால் சோகத்தைத் தாங்குகிறோம். கண்ணீர்த் துளிகளை நம் இமைதாங்க நாமோ சோகத்தின் சுமைதாங்கியாய் மாறுகிறோம்.
அழகும் அழுக்கும் நாம் காணும் காட்சியில் இருப்பதில்லை,நம் கண்களில் உள்ளது. நடந்துவிடுமோ என்று அஞ்சிநடுங்கும் சம்பவங்கள் ஒரிரு நாட்களில் அப்படியே நடக்கிறது. பயம் நம் சுயத்தை அழிக்கிறது.சோகத்தின் முதல்படியாக மோகம் அமைகிறது.

முன்னேறியவர்களைக் கண்டு நாம் பெருமூச்சு விடுகிறோமே! அவர்களின் முன்னேற்றம் ஒன்றும் மூன்றுமணிநேரத்தில் முளைத்து வந்துவிடவில்லை. ஓய்விலா உழைப்பும் களைப்பிலா முயற்சியும் சலிப்பிலா பயிற்சியும் சிகரம் நோக்கிச் சீக்கிரமாய் அழைத்துச் செல்லும் மந்திரச்சொற்கள். பலர் இந்த உலகில் பிறக்கிறார்கள், சிலர் மட்டுமே வாழ்வாங்கு வாழ்ந்து சிறக்கிறார்கள்.

விழுந்த இலைகளுக்காக எந்த மரமும் விழுந்துவிழுந்து அழுகிறது? தளிர்களைத் தந்து மீண்டும் தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது. இழப்பின் நிமிடங்களுக்காக இரங்கி இருப்பின் நிமிடங்களை ஏன் வெறுக்கவேண்டும்?  வாழ்க்கை நம் முகத்தில் வரையும் சித்திரங்கள் விசித்திரமாகத்தான் உள்ளன.

ரசிக்கப் பழகியவனுக்குச் சொர்க்கமும் நரகமும் ஒன்றுதான்.புரிதல் இல்லாவிட்டால் புலம்பல் நிச்சயம். நகரும் மனது நுகரும் ஆசைகள். காலத்தை அரிக்கும் கரையான்களாய் நம் நலிந்த நாட்கள். எல்லாப் பறவைகளுக்கும் இடம்தந்து பரந்து திறந்துகிடக்கிறது விரிவானம். மனிதர்கள் மகத்தானவர்கள் என்பதும் நல்ல வாழ்வை நன்றாக வாழத் தவறிவிட்டோம் என்று காலம்கடந்து நாம் புரிந்து கொள்ளும்போது புறப்பட நச்சரிக்கிறது புதிரே வடிவமான இந்தப் புதிய வாழ்க்கை.
உங்களை யாருடனும் ஒப்பிட ஒத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் தனித்தன்மையை நிறுவுங்கள். உங்கள் பிறப்பு ஒரு பிரவாகம்.அதைக் குளமாகக் குறுக்கிக்கொள்ளாதீர்கள். இருப்பதன் அருமை இல்லாமல் போகும்போதுதான் தெரிகிறது எனவே இருப்பின்மீது வெறுப்பு கொள்ளாமல் முகத்தில் சிரிப்போடு யாவற்றையும் அணுகுங்கள். உங்கள் நாட்கள் இனிமையான நந்தவனம்..அதில் முட்செடிகளை முன்நின்று நட்டுவைக்காதீர்கள்.

எல்லா மாற்றமும் நன்மாற்றமன்று..அவற்றில் சில ஏமாற்றமும் உண்டு. இரண்டையும் சமமாக ஏற்கப் பழகுங்கள். அலைமோதும் எண்ணங்களை கலைமோதும் எண்ணங்களாக மாற்றுங்கள்..உங்களுக்குள் மயன்கள் மறைந்திருக்கலாம். ரவிவர்மாக்கள் ஒளிந்திருக்கலாம். 

ஓடிக்கொண்டேயிருக்கும் பொழுதுகளிலும் உங்கள் மனம் அழகான கலைக் கருவூலங்களைத் தேடிக்கொண்டே இருக்கட்டும். இருபத்துநான்கு மணிநேரத்தில் நமக்காக இருபத்துநான்கு நிமிடங்களாவது வாழவேண்டாமா? என்று உங்களையே நீங்கள் கேளுங்கள். கோப்பையில் நாம் அருந்தும் சுவையான தேநீரை ரசனைமிக்க உதடுகளால் எப்படிச் சுவைக்கிறோமோ அதே போன்று அழகான இந்தச் சிறுவாழ்வை அழகியல் கண்களால் ஏன் ரசிக்கக்கூடாது என்று உங்களிடம் நீங்கள் கேளுங்கள்.
 காலையில் நடந்து,உடற்பயிற்சியைக் கடந்து உடலை உறுதியாக்கத் தெரிந்த நமக்கு மனதை வலிமையாக்க ஏன் முடியவில்லை. எதிர்க்கெடுத்தாலும் ஏன் எதிர்மறையாய் சிந்தித்து நம் சுயத்தின் சுடரை ஏன் அணைக்கிறோம்?  அடிக்கடி ஆணியால் குத்தப்பட்டுச் சுத்தியலால் அடிக்கப்படும் சுவர், கீறலை எதிர்கொள்வதுபோல் சம்மட்டியடியைச் சந்தித்துசந்தித்து நம் இதயம் நொறுங்கிப்போகிறதே. எதையும் தாங்கும் இதயம் இதையும் தாங்குமா என்ற கேள்வி நமக்குள் வந்துவெகுநாட்களாகிவிட்டது. யாருடனும் வராத நாம்,யாருடனும் செல்லப்போவதில்லை.துணிவு ஒன்றே துணை என்பதை இனியாவது உணரலாமே.

நம் குரல் மற்றவர் பார்வையில் வெற்றுக் கூச்சலாக உணரத் தொடங்குவதாக நாம் புரியத் தொடங்கிவிட்டால், அதற்குப்பின் நாம் உரக்கப்பேசுவதில் பொருளிலில்லை..அப்போது  மௌனம் மகத்தான கவசம்.அனுபவங்களை ஆசானாகக் கொள்ளுங்கள், அடிகள் இடிகளல்ல, அவை சிகரம் எட்டும் சாதனைப் படிகள். நீங்கள் முன்வைத்த முதலடி உங்கள் சாதனைப் பயணத்தைச் சட்டென்று தொடக்கியதுபோல் நீங்கள் பெற்ற அடிகளும் உங்கள் பயணத்திற்கு இதம்தரும்.

நமக்கு என்ன நல்லது செய்யவேண்டும், அதை எப்போது செய்யவேண்டும் என்பது, நம்மைவிட நம்மைப் படைத்த இறைவனுக்கு மிக நன்றாகத் தெரியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், காலம்வரும்வரை காத்திருங்கள்.உறுதியாய் இனி நல்லது நடக்கும் என நம்புங்கள்.
 கக்கத்தில் குழந்தையை வைத்துக்கொண்டு காணவில்லை எனக் கண்ணில் கண்டவர்களிடமெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பவளைப் போல  நிம்மதியைத் நம் மதிக்குள் தொலைத்துவிட்டு நிம்மதிதேடி நீண்ட பயணம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

தண்ணீரில் வாழும் மீன் பன்னீரில் வாழ நினைத்தால் செத்துப்போய்விடும். அப்படிதான் நாமும் மற்றவர்போல் வாழ நாமொன்றும் மற்றவரில்லை.. நாமாக நாமிருந்தால் நமக்கேது துன்பம்? குழந்தை ஊதுகிற சோப்புத்தண்ணீர் குமிழியாய் மாயம் காட்டிச் சட்டென்று உடைந்து மறைவதைப் போல் எந்தச் சுகமும் வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து கிடைக்கப்போவதில்லை.சுகமும் துக்கமும் கொஞ்சகாலம்தான்.எதுவும் நிலையில்லை எனும்எண்ணத்தோடு  இதுவும் கடந்துபோகும் என நினைத்துவிட்டால் வெல்லும்போது மமதையும் தோற்கும்போது மனசஞ்சலமும் வராது.
எழுதல் என்பது விழுதலுக்கான எதிர்வினை, எனவே எழுச்சிக்காகவே வீழ்ச்சி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். புரியாமையின் மொழி புலம்பலாகவே இருக்கும்! புலம்பல் உங்கள் பலவீனத்தின் அடையாளம், எனவே பொருளற்ற புலம்பலை நிறுத்துங்கள்.

 இறைவன் ஒருமுறை மட்டுமே வாழ வரம் தந்திருக்கிறான். அதை ஏன் நரகமாக மாற்றவேண்டும்? மற்றவர்களைத் திருப்திப்படுத்தவே நாம் பிறப்பெடுத்திருக்கிறோமா? நமக்காக நாம் வாழப்போவது என்று? கேட்டுப்பாருங்கள் உங்களிடம் தெளிவுபிறக்கும் உள்ளொளியாய். ஆயிரம் கைகள் தடுத்துநின்றாலும் வெற்றிப் பாயிரம் பாடவேண்டும் என நீங்கள் முடிவுசெய்துவிட்டால் உங்களை யாரால் தடுக்கமுடியாது. காற்றுப்போன பலூனாய் தோற்றுப் போகிறோமே என்ற வருத்தம் வந்ததுண்டா? தகர்த்தெரியுங்கள் தாழ்வுமனப்பான்மையை. அது வைக்கோற்போருக்குள் மறைத்துவைக்கப்பட்ட கங்குபோன்றது..எரியச் செய்து எல்லாவற்றையும் சாம்பலாக்கிவிடும். கடந்த காலத்தையும் நடந்த சோகத்தையும் நினைத்துக்கொண்டே இருந்தால் நிம்மதி அப்பால்போகும்,நிகழ்காலமும் நரகமாகும்.  காலம் இன்னும் காலமாகாமல் காத்திருக்கிறது உங்களுக்கு முகவரிதர. உங்கள் சோகங்களை அறுத்தெரியும் வாளாய் நம்பிக்கை தந்து ‘வாழ்’ என்கிறது வசந்தவாழ்க்கை.




Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்