சிந்தை மயக்கும் சிங்கப்பூர் என்கிற சொர்க்கபுரி: சௌந்தர மகாதேவன்

என் பார்வை: ஆகஸ்ட் 8,2015 சிங்கப்பூர் பொன்விழா



     சிந்தை மயக்கும் சிங்கப்பூர் என்கிற சொர்க்கபுரி

முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275
mahabarathi1974@gamil.com  

   சிங்கப்பூர் என்கிற பூலாக சொர்க்கம் இந்த ஆகஸ்ட்மாதம் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. மலேசியாவில் நடந்த ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டிற்குச் சென்றுவிட்டு கடந்த பிப்ரவரியில் சிங்கப்பூர் சென்றிருந்தேன். பயணங்கள் நம்மைப் பக்குவப்படுத்திவிடும். தண்ணீரில் மிதக்கும் வெண்ணைக்கட்டிமாதிரிக் கண்ணீரில் மிதக்கும் மனிதர்களைப் பயணம் பக்குவப்படுத்துகிறது. உம்மென்ற முகத்தோடு புத்தகங்களுக்குள் புதைந்து பயணிக்கும் இறுக்கமான பயணியைக்கூட, உடன் பயணிக்கும் ஒரு சிறுகுழந்தை சிந்தும் சிறுபுன்னகை சிதறடித்து இயல்பாக்கிவிடும்.
அல்வா சாப்பிட்டுவிட்டு நாம் தூரப்போட்ட வாழைஇலை இன்னும் அடர்த்தியான பச்சையைத் தனக்குள் காட்டுவதுபோலப் பயணங்கள் நம்மை இன்னும் பசுமையாக வைத்திருக்கின்றன.முருங்கை மரத்தை ஒடிக்க வெறும்கரங்கள் போதும்,ஆனால் தேக்கை உடைக்கப் பல கைகளாலும் முடியாது. பலகைகள் சேர்ந்து உழைத்ததால் உலகின் சொர்கபுரியாக மாறிப்போன ஒரு இளையதேசத்திற்குப் போனநிகழ்வுகள் என்றும் மறக்கமுடியாதுதான்.

 திட்டம் போட்டுத் திடமாய் உழைத்தால் நாம் இருக்கும் இடத்தையே சொர்க்கமாக்கலாம் என்பதற்கு சிங்கப்பூர் அழகான சான்று. தமிழ்நாடு போல் எங்கும் பொங்கல் பானை அலங்காரங்களோடு அழகாக இருந்தது அந்நாடு. மலேசியாவிலிருந்து ஐந்துமணிநேரப் பேருந்துப் பயணம். கண்ணாடி போல் பளபளத்த சாலைகள், இருபுறமும் நீண்டுவளர்ந்திருந்த அழகு மரங்கள். மின்னல் போன்று தோன்றிமறையும் வெளிநாட்டு அதிநவீன கார்கள்,கடற்கரைஓரத்தில் சிங்கப்பூரையே சுற்றிக்கடுமளவுக்கு மிகப்பெரிய ராட்சச ராட்டினம். அழகான ஆழமான கடற்பரப்பு, விண் எட்டும் கண்ணாடிமாளிகைகள் எனச் சிங்கப்பூர் வரவேற்றது.
கண்காணிப்பின் தேசம்

மலேசியாவிலிருந்து அதுவரை ஓடுகிற பேருந்தில் ஒலிவாங்கியின் உதவியால் வழிநெடுக நேர்முக வர்ணனை செய்துவந்த எங்கள் சுற்றுலா வழிகாட்டி சிங்கப்பூர் எல்லை வந்தவுடன் நிறுத்திக்கொண்டார். “கட்டுப்பாடுகள் நிறைந்த அழகான நாடு,இங்கு நாம் நினைத்ததெல்லாம் செய்துவிட முடியாது, நாட்டுக்குள் நுழைந்துவிட்டோம், நம் ஒவ்வொரு அசைவும் கேமராக்களால் துல்லியமாகப் பதிவாகிக்கொண்டிருக்கிறது. தயவுசெய்து கவனமாக இருங்கள்..குப்பைகளைச் சாலையில் போட்டுவிடாதீர்கள் அபராதம் உறுதி”  என்றார். அவர் சொன்னது உண்மைதான். இறங்கிப் பார்த்தோம் எங்கெங்கு காணினும் சிசிடிவி கேமராக்கள். உலகின் அதிவேகமான கார்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அதனதன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தன.கட்டுப்படுத்த நம் ஊரில் உள்ளதைப் போல் காவலர்கள் யாருமில்லை.அவர்கள் சாலைவிதிகளை மீறவுமில்லை. பாதசாரிகள் சாலையைக் கடக்கும் வரை ஓட்டுனர்கள் பொறுமை காத்து வாகனங்களை நிறுத்துவதைக் காணமுடிந்தது.வரையறை செய்யப்பட்ட ஒழுங்கிற்குள் அந்த தேசம் யாவரையும் வைத்திருக்கிறது என்பது நன்றாகப்புரிந்தது. ஐம்பதுஆண்டுகளில் அதன் அசுரவளர்ச்சிக்கு அதுவே காரணம் என்பதும் நன்றாகப் புரிந்தது.

 எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

நீக்கமற அந்தத் தேசம்முழுக்கத் தமிழர்களைக் காணமுடிந்தது.எல்லா இடங்களிலும் சீன,மலாய்,தமிழ்,ஆங்கில மொழிகளில் அறிவிப்புகளைக் காணமுடிகிறது. அதிநவீனமான சாங்கி விமானநிலையம் சிங்கப்பூருக்கு வடகிழக்கில்  13 சதுரகிலோமீட்டர் பரப்பில் லட்சக்கணக்கான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாய் ஜொலிக்கிறது. உலகின் இரண்டாவது மிகச் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள சாங்கி விமானநிலையம் எங்கும் அழகுதமிழில் அறிவிப்புகள். சுத்தம் தாண்டவமாடுகிறது.உள்ளேயே நீச்சல் குளம்,திரையரங்குகள், நூற்றுக்கணக்கான அங்காடிகள் என்று பூலோக சொர்க்கமாய் திகழ்கிறது. எங்கு நோக்கினும் தமிழ் அறிவிப்புகள், தமிழில் விளம்பரப்பலகைகள் என்று தமிழுக்கு அரியணைதந்துள்ள தேசமாகயும் சிங்கப்பூர் திகழ்கிறது.
இனியபயணம்

ஒன்றிரண்டு சிங்கப்பூர் டாலர்களில் சிங்கப்பூர் தொடர்வண்டிகளில் பயணிக்க முடிகிறது. சீட்டு தரவோ சோதனை செய்யவோ மனிதர்கள் யாருமற்றுத் தானியங்கி நிலையங்களாக மிக நேர்த்தியாகத் தொடர்வண்டிநிலையங்கள் காட்சியளிக்கின்றன. மேற்கூரைஇல்லாத   ஈரடுக்கு வண்ணப்பேருந்துகளில் வானத்தைப் பார்த்தபடி காற்றோட்டமாகப் பயணப்பட முடிகிறது.
சிங்கப்பூரின் மிகமுக்கியமான வருவாய் சுற்றுலா மூலம் கிடைக்கிறது.கடந்த மூன்றுமாதங்களில் மட்டும் இந்தியா,இந்தோனேசியா,சீனா போன்ற நாடுகளில் இருந்து நாற்பது லட்சம் சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூர் வந்துள்ளனர் என்று அந்த நாட்டுச் சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.

சவால்களை வென்ற தேசம்

சிங்கப்பூரில் மிகக்குறைந்த மழைக்காடுகள்தான் உள்ளன. புவியியல் அமைப்புகூட அத்தேசத்திற்குச் சாதகமாய் இல்லை.குடிதண்ணீரைக் கூட மலேசியாவிலிருந்து அத்தேசம் வாங்குகிறது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஆக்கிரமிப்பில் இருந்து செல்வத்தை இழந்து,1965இல் ஆகஸ்ட் 8 ஆம் நாள் மலேசியாவிடமிருந்து பிரிந்து தனிக் குடியரசுநாடாக உருப்பெற்று ஐம்பதுஆண்டுகள் ஆகிவிட்டன.தெற்காசியாவின் மிகச் சிறிய நாடாக சிங்கப்பூர் திகழ்ந்தாலும் இந்த ஐம்பதுஆண்டுகளில் அது சந்தித்த சவால்களும் அவற்றை எதிர்கொள்ள அந்தநாட்டுத் தலைவர்களும் அந்த நாட்டுமக்களும் மேற்கொண்ட முயற்சிகளும் வளரும்நாடுகளுக்கு முன்னுதாரணமாய் அமைவன.

சோதனைகளைச் சாதனைகளாக்கிய தேசம்

விடுதலை பெற்ற பின் பொருளாதாரத் தேவைகளைத் தனியே சமாளிக்க வேண்டிய சூழல்,வேலியில்லாத் திண்டாட்டம்,வறுமை, குறைந்த நிலப்பகுதியில் நிறைவான வசதிகளைச் செய்துமுடிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் அந்த நாட்டுக்குக் கிடைத்த தொலைநோக்குள்ள தலைவர் லீ குவான் யூ எடுத்த முயற்சிகள் திடமானவை. குறைந்த நிலப்பரப்பை அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டும் அதிநவீன வீடமைப்பு, கட்டிடத் தொழில்நுட்பங்களை அப்போதே நேர்த்தியாகச் செயல்படுத்தினார் லீ குவான் யூ.  கடலிலிருந்து நிலத்தை மீட்டார். சிங்கப்பூரைச் சுற்றியுள்ள அறுபதுக்கும் மேற்பட்ட தீவுகளை ஒருங்கிணைத்தார். சிறுசிறுதீவுகளை ஒன்றாக்கிப் பெருந்தீவாக்கினார். சிறுதுண்டு இடம்கூட வீணாக்கப்படாமல் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டது.

சிறந்த துறைமுகம்

அதிக மழையும் இல்லாத அதிக வெயிலும் இல்லாத சீரான காலநிலை இருந்துவருவதாலும், தொடக்கத்திலிருந்தே சட்டம் ஒழுங்குமிக்க நாடாகச் சிங்கப்பூர் திகழ்ந்து வருவதால் அயல்நாட்டவர் அதிக அளவில் வருகைதந்து தொழில்தொடங்கப் பெருவாய்ப்பாக அமைகிறது. மிகப்பெரும் கப்பல்கள் வந்துசெல்லும் வகையில் சிங்கப்பூரின் துறைமுகம் பிரம்மாண்டமாய் திகழ்வதால் ஏற்றுமதி சுலபமாயிற்று.உலகின் 7000 முன்னணி தொழில் நிறுவனங்களின் கிளைகள் சிங்கப்பூரில் உள்ளன.மின்னணுத் துறை,இயந்திரப் பொறியியல் துறை,உயிரிமருத்துவ சீனர்கள்,மலாய் மக்கள்,தமிழர்கள் என அனைவரையும் சிங்கப்பூர் ஒன்றாகவே பார்ப்பதால் தேசவளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து உழைத்து வருகின்றனர்.

வருவாய்

உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் உள்ளதால் ஆண்டுதோறும் இரண்டு லட்சம் வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் வருகின்றனர். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் சிங்கப்பூரில் உள்ளதால் இந்தியா,சீனா,இந்தோனேசியா,மலேசியா போன்ற நாடுகளிலிருந்து உயர்கல்விகற்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் சிங்கப்பூர் வருகின்றனர். உலகின் தலைசிறந்த நூறு பல்கலைக்கழகங்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகமும், நான்யாங் தொழில்நுட்பப்பல்கலைக் கழகமும் வெளிநாட்டு மாணவர்கள் அதிகம் பயிலும் பல்கலைக் கழகமாய் திகழ்கின்றன.

சந்தோஷா தீவு 

ஒருகாலத்தில் நாடுகடத்தப்பட்ட குற்றவாளிகளைச் சிறைவைப்பதற்கும் கொலைசெய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட சந்தோஷா தீவு  இன்று உலகஅளவில் பெயர்பெற்ற பொழுதுபோக்கு மையமாகத் திகழ்கிறது. அதில் உள்ள யுனிவர்ஸல் ஸ்டுடியோ பல பரிமாணப் படங்களைத் தயாரித்து வெளியிடுகிறது. மிகப்பெரிய கர்ச்சிக்கும் சிங்கம் சிலை,போர்க்களத்தில் நிற்கும் வீரன் சிலை, பொங்கிவழியும் நீர்ஊற்றுகள், கம்பீரமான ஆடுசிலைகள்( சீனர்களுக்கு இந்த ஆண்டு ஆடு ஆண்டு),மிகப் பழைய வாகனங்கள், அதிரவைக்கும் பலபரிமாணப் படங்களைத் திரையிடும் பிரம்மாண்டமான திரையரங்குகள், நூறுஅடி மேலேவரை கொண்டுசெல்லும் ஊர்திகள்,பூத்துக்குலுங்கும் மலர்ச் சோலைகள்,மிகப்பெரிய ஆதாம் ஏவாள் பளிங்குச் சிலைகள்,கனவுகளின் ஏரிகள்,டாலர் அட்டையைச் சொருகினால் தங்கபிஸ்கட் தரும் தானியங்கித் தங்கம் தரும் எந்திரங்கள் என சொர்க்கபுரியாகக் காட்சியளிக்கிறது சந்தோஷா தீவு. 

விந்தையான மீன்காட்சியகம்

கடலுக்குக்கீழ் கண்ணாடித் தடுப்பின் இடைவெளியில் லட்சக்கணக்கான மீன்களின் உலகத்தை வெகுநெருக்கத்தில் கண்டுகளிக்க சந்தோஷா தீவில்உள்ள சிங்கப்பூர் மீன்காட்சியகம் பேருதவி செய்கிறது. தண்ணீரில் நீந்தி மீன்களுக்கு உணவளிக்கும் விந்தையான கடல்மனிதர்களை ஒரு அடிஇடைவெளியில் பார்ப்பதும், மிக அகன்ற கண்ணாடித்தடுப்பிற்கு அப்பால் உலகின் அரிய மீன்களை வெகுநெருக்கத்தில் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. உலகின் பலபகுதிகளில் உள்ள வண்ணமீன்களை நாம் அங்கே பார்க்க இயலும். மீன்காட்சிக்கூடத்திற்குச் செல்லும் வழியில் அருமையான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சீனர்களின் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் அளவிற்கு அவர்கள் பல நூறுஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய நாவாய்கள், பாய்மரக்கப்பல்கள், அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பக்காப்படிகள், சீனர்களின் பாரம்பரிய உடைகள், பல்லாங்குழிப் பலகைகள்,அவர்கள் பயணித்த வில்வண்டிகள்,மூங்கில் கூடைகள், தோல்இசைக்கருவிகள்,அரிசி நிறைத்துவைக்கும் பெட்டிகள்,சைனா களிமண்ணில் செய்யப்பட்ட பீங்கான் குடுவைகள் நம்மை அவர்கள் வாழ்ந்த காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன.


ஜங்கிள் சபாரி

இரவுநேரம் ட்ராம் வண்டியில் முப்பதுபேர் அமர்ந்து சப்தமில்லாமல் காட்டுக்குள் சென்றால் எப்படி இருக்கும்? பத்தடி தூரத்தில் சிங்கங்களையும் புலிகளையும் கரடிகளையும் காண்டாமிருகங்களையும் மான்களையும் கொடிய ராஜநாகங்களையும் கண்டால் எப்படிஇருக்கும்? சிங்கப்பூரில் சாத்தியம்.இரவுவேளையில் சப்தமெழுப்பாத பேட்டரி வண்டியில் அமர்ந்தபடி கொடுமையான கானகத்தில் காட்டுவிலங்குகளைச் சிலிர்போடு பார்க்க தினமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூரில் உள்ள அந்த அடர்ந்த காட்டுக்கு வருகிறார்கள். வனச்சுற்றுலா முடிய சுமார் நாற்பது நிமிடங்கள் ஆகிறது. விலங்குகளின் அந்த விந்தை உலகிற்குச் சென்று வருவது வாழ்வில் மறக்கஇயலா அனுபவம்.
சிங்கப்பூர் இந்த உலகத்தின் இனிமையான சொர்க்கபுரியாக மாறியதன் சூட்சுமம் தன்னலமில்லா தலைவர்களின் மக்களின் கடும்உழைப்புதான். சின்னவட்டத்திற்குள் ஓடினாலும் கடிகாரமுட்கள் காலத்தைக் கம்பீரமாய் காட்டிக்கொண்டே இருப்பதைப்போல் தென்கிழக்கு ஆசியநாடுகளில் மிகச்சிறிய நாடாக இருந்தாலும் அதன் மகுடத்தில் சிங்கப்பூர் வைரமாய் ஜொலிக்கிறது. பஞ்சுமிட்டாய் தின்றுவிட்டு நாக்கை நீட்டிக் கண்ணாடியில் அழகுபார்க்கும் சின்னக்குழந்தை மாதிரி நாம் மாறிப்போகிறோம் பயணப்பொழுதுகளில்.நேரம் பார்க்காமல் உழைத்தால் நாமும் நம் தேசத்தைச் சிங்கப்பூரைப் போல் மாற்றமுடியும்.கிழித்துப் போட்டநாட்கள் கீழே கிடக்கின்றன காலக்கழிவாய்.மீதமிருக்கும் நாட்கள் ஆணிகளால் அறையப்பட்டு காலெண்டர் அட்டையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன.. இந்த நாள் மட்டுமே நம் கையில் இருக்கிறது.நம் தேசம் மீது நேசம் கொள்வோம்..பொன்விழாக்கொண்டாடும் இந்தச் சின்ன தேசத்திற்கு நம் வாழ்த்துகளைச் சொல்லி.



Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்